“உள்நோக்கத்துடன் குறிப்பிட்டு பேசவில்லை - நயினார் விளக்கம்!
முதல்வர் விஜய் பற்றிய சர்ச்சைப் பேச்சு குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். "எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. என் பேச்சைத் திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள்" என நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி, சென்னை தி. நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று தேசியக்கொடி ஏற்றினார். பின், 'ஒரே நாடு 2.0 இதழ் வெளியீடு நிகழ்ச்சி நடந்தது.
இந்தந் நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய நயினார் நாகேந்திரன், "சிலர் சட்டசபைக்கு சென்று, "அப்பா எங்கே? அப்பாவை காணவில்லை" என்கின்றனர். வீட்டிற்கு சென்று அம்மாவிடம் கேட்டால்தானே, அப்பா யார் என்று சொல்வார்.. சட்டசபையில் அப்பாவை தேடினால், எப்படி? அப்படிப்பட்ட ஆட்சிதான், தமிழகத்தில் தற்போது நடக்கிறது." எனப் பேசினார்.
நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைச்சர் ராஜ்மோகன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெண் வழக்கறிஞர் வர்த்தினி, தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தமிழக முதல்வர் விஜய், அவரது தாயாரை குறி வைத்து, மிகவும் இழிவான, அவதுாறான, மரியாதைக் குறைவான கருத்துகளை, நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசிய, நயினார் நாகேந்திரன் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். என் பேச்சைத் திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், "ஒரே நாடு 2.0 பத்திரிக்கை வெளியீட்டு விழாவின் போது நான் மேடையில் பேசிய பேச்சைத் திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்." எனத் தெரிவித்துள்ளார்.