CM விஜய் குறித்து சர்ச்சை பேச்சு.. நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

bjp-nayinar-nagendran-cm-vijay-congress-manickam-thagur
CM விஜய் குறித்து சர்ச்சை பேச்சு.. நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

தேர்தல் முடிந்தும் தமிழக அரசியலில் பரபரப்பு ஓயவில்லை. தேர்தலுக்கு முன்பே விஜய் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் பாஜக நயினார் நாகேந்திரன். முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலில் தோல்வியடைந்ததை விமர்சிக்கும் வகையில், சட்டமன்றத்தில் அப்பாவை காணோம் என்று விஜய் கிண்டல் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் விஜய் மற்றும் அவரின் தாய் குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அருவருக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்திருப்பதற்கு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், தமிழகத்தை பொறுத்தவரை மாநில கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. பிரதமரின் சாதனைகள் மக்களிடம் சென்றடைந்தாலும் அது வாக்கு வங்கியாக மாறுவதில்லை. கடந்த காலங்களில் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு சூழ்நிலை நிலவுகிறது. திமுக ஆட்சிக்கு மாற்றாக வருவோம் என்று நினைத்தபோது இவர்கள் வந்துவிட்டனர். இதுவும் மாறும். வருகிற நாட்களில் தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும்.


இவர்களால் நாட்டில் என்ன செய்துவிட முடியும். சட்டமன்றத்தில் சென்று அப்பா எங்கே அப்பா எங்கே என தேடுகிறார். வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார் என்று சொல்வார்கள். சட்டமன்றத்தில் சென்று அப்பாவை தேடினால் எப்படி கிடைப்பார். இப்படிப்பட்டவர்களின் ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சி செய்பவரின் சூழல் மோசமாக உள்ளது என்று பேசினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மூத்த பெண் நிர்வாகிகளை வைத்து கொண்டே மேடையில் வைத்து கொண்டே நயினார் பேசியது சர்ச்சையாகியுள்ளது. முதலமைச்சர் விஜய் மற்றும் அவரின் தாய் குறித்து நயினார் அநாகரீமாக பேசியதாக தவெகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அருவறுக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்திருப்பதற்கு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: அரசியல் விரக்தியின் உச்சத்தில் முதல்வர் விஜய்யையும், அவரது தாயாரையும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அரசியல் நாகரிகமற்ற முறையில் தரம் தாழ்ந்து பேசுவது இவருக்கு இது முதல் முறையல்ல, தொடர் வாடிக்கையாகிவிட்டது. பொது வெளியில் கவனத்தைப் பெற பெண்களை இழிவுபடுத்தும், தனது அருவருக்கத்தக்க பேச்சுக்குத் தமிழ்நாட்டு மக்களிடமும் முதல்வரிடமும் உடனடியாக நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.