சிங்கப்பெண் படை இருந்தும் குழந்தைக்கு பாதுகாப்பில்லையா? - வேல்முருகன்

singappen-padai-tvk-velmurugan
சிங்கப்பெண் படை இருந்தும் குழந்தைக்கு பாதுகாப்பில்லையா? - வேல்முருகன்

சிங்கப்பெண் படை இருந்தும் 8 வயது குழந்தைக்கு பாதுகாப்பில்லையா என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவா? வேண்டாமா?.. சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு எங்கே? பள்ளி மாணவர்கள் செல்லும் பாதையில் ரோந்து எங்கே? குற்றத்தை முன்கூட்டியே தடுக்கும் நடவடிக்கை எங்கே? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் உள்ள பள்ளியில் படிக்கும் 4 ஆம் வகுப்பு மாணவி (வயது 8) சாலையில் தனியாக நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் சிறுமியின் வாயை மூடி புதருக்குள் தூக்கிச் சென்று பா*லியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

அடுத்தடுத்து பா*லியல் சம்பவங்கள்

8 வயது சிறுமி பா*லியல் வ*ன்கொ*டுமை செய்யப்பட்டதாக வெளியாகி இருக்கும் செய்தி நெஞ்சை உலுக்குகிறது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என வேல்முருகன் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது அரசின் பரிசல்ல. அடிப்படை உரிமை. ஆனால், கடந்த சில மாதங்களில் கோவை சூலூரில் 10 வயது சிறுமி பா*லியல் வ*ன்கொ*டுமைக்கு பின் கொ*லை, திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பா*லியல் வ*ன்கொ*டுமைக்கு பின்னர் உ*யிரிழப்பு, சென்னை பூந்தமல்லியில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டு பா*லியல் வ*ன்கொ*டுமை, திருச்சியில் 14 வயது சிறுமி தொடர்பான வழக்கில் 9 பேர் கை*து என அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. இப்போது தேன்கனிக்கோட்டை.

எதற்கு சிங்கப்பெண் படை?

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இங்கும் ரோந்து மேற்கொள்கிறது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக சிறப்பு படை, கண்காணிப்பு, காவல்துறை, போக்சோ சட்டம், இத்தனைப் பாதுகாப்பு அமைப்புகள் இருந்தும் ஒரு 8 வயது குழந்தை குற்றவாளியின் கைகளில் சிக்கியது எப்படி? சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு எங்கே? பள்ளி மாணவர்கள் செல்லும் பாதையில் ரோந்து எங்கே? குற்றத்தை முன்கூட்டியே தடுக்கும் நடவடிக்கை எங்கே? குற்றவாளியை பிடிப்பது அவசியம். ஆனால் குழந்தை பாதிக்கப்பட்ட பிறகு விழித்தெழுவது பாதுகாப்பு அல்ல. அந்தக் கொடுமை நிகழாமல் காப்பதே ஆட்சியின் கடமை.

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவா? வேண்டாமா?

முதலமைச்சர் அவர்களே!, இது அரசியல் குற்றச்சாட்டு அல்ல. தங்கள் குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு பெற்றோரின் நடுங்கும் மனதிலிருந்து எழும் கேள்வி. எங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவா? வேண்டாமா? இந்தக் கேள்வி தமிழகத்தில் எழும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

தேன்கனிக்கோட்டை சிறுமி வழக்கில் குற்றவாளியை உடனடியாக கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உயர்தர மருத்துவம், உளவியல் ஆதரவு மற்றும் குடும்பத்தினருக்கு தேவையான முழுமையான உதவிகளை வழங்க வேண்டும். மேலும், கடந்த 100 நாட்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான முக்கிய குற்ற வழக்குகளில் கைது, குற்றப்பத்திரிகை, விசாரணை, தண்டனை, நிலுவை ஆகிய விவரங்களை அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

இனியொரு குழந்தை பாதிக்கப்படக் கூடாது

சிங்கப் பெண் என்ற பெயர் மட்டும் போதாது. ஒரு குழந்தை அச்சமின்றி பள்ளிக்குச் சென்று உயிரும் கண்ணியமும் காக்கப்பட்டு வீடு திரும்ப வேண்டும். அதுவே அந்தப் படையின் வெற்றி. இந்தக் கொடூர சம்பவத்திற்கு மீண்டும் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு, குற்றவாளியை விரைந்து கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தரவும், இனியொரு குழந்தை பாதிக்கப்படாத வகையில் நிரந்தரமான தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.