இடைத்தேர்தலில் CPM, CPI தனித்துப் போட்டி - அதிர்ச்சியில் விஜய்!.
கொளத்தூர் EVM சர்ச்சை.. இயந்திரங்களில் கோளாறு இல்லை - தேர்தல் அலுவலர்
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் தொடர்பாக எழுந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (EVM) சர்ச்சைக்கு தேர்தல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டதில் எந்தவித தொழில்நுட்ப கோளாறோ அல்லது வாக்கு முரண்பாடோ கண்டறியப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சமீரன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தேர்தல் முடிவைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட சில EVM-களில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சம்பந்தப்பட்ட EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் எட்டு நாட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தின் பொறியாளர்கள் கலந்து கொண்டு, திமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பிற வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் சோதனைகளை மேற்கொண்டனர்.
ஆய்வின்போது இயந்திரங்களின் சீல்கள், தொழில்நுட்ப செயல்பாடு மற்றும் மாதிரி வாக்குப்பதிவு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் பரிசோதிக்கப்பட்டன. தொடர்ந்து VVPAT சீட்டுகளும் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டதில், பதிவான வாக்குகளுக்கும் இயந்திரங்களில் பதிவான தகவல்களுக்கும் இடையே எந்தவித முரண்பாடும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், ஆய்வின் போது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எழுப்பிய அனைத்து சந்தேகங்களுக்கும் தொழில்நுட்ப ரீதியாக விளக்கங்கள் வழங்கப்பட்டதாகவும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 14 வாக்குப்பதிவு இயந்திரங்களும் முழுமையாக சரியாக செயல்பட்டன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.