அமைச்சர் பதவி தருவதாக மதிமுகவில் ஆசை வார்த்தை கூறினார்கள் - மதிமுக எம்.எல்.ஏக்கள்

mdmk-mlas-vaiko-dmk-anna-arivalayam
அமைச்சர் பதவி தருவதாக மதிமுகவில் ஆசை வார்த்தை கூறினார்கள் - மதிமுக எம்.எல்.ஏக்கள்

"ஆளும் கட்சி கூட்டணியில் இணைகிறோம்.. மீண்டும் போட்டியிடலாம்.. அமைச்சராக கூட ஆகலாம் எனும் ஆசை வார்த்தை கூறி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி மதிமுகவில் நிர்ப்பந்தம் செய்தார்கள். அதற்கு மயங்காமல், எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்த மனமில்லாமல் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்" என திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக பேட்டி அளித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற மதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கடையநல்லூர் ராஜேந்திரன், சீர்காழி செந்தில் செல்வன் ஆகியோர் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் பேசுகையில், "தேர்தல் வெற்றிக்குப் பிறகு திமுக கொறடாவின் அறிவுறுத்தலின்படி நடந்துகொள்ளுங்கள் என்று வைகோ சொன்னார். ஆனால் ஜூன் 16 அன்று தமிழக அமைச்சர் ஒருவரின் சந்திப்புக்குப் பிறகு அவரின் நிலைப்பாடு மாறத் தொடங்கியது. எம்.எல்.ஏ பதவியில் வைகோ ராஜினாமா செய்யச் சொன்னார். எங்களை ராஜினாமா செய்யச் சொல்லி எங்களை நிர்பந்தித்தார்.

இதைத் தெரிந்துகொண்ட தொகுதி மக்களும், அமைப்பினரும் நீங்கள் ராஜினாமா செய்யக் கூடாது என அறிவுறுத்தினர். ராஜினாமா செய்ய வேண்டாம் என தொகுதி மக்கள் சொன்னதை நாங்கள் வைகோவிடம் எடுத்துச் சொன்னோம். ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை. இருப்பினும் 6 மாத காலத்திற்கு அமைதியாக இருப்பது என முடிவெடுத்து 38 நாட்களாக அமைதி காத்து வந்தோம்.
இந்த சூழ்நிலையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, எம்.எல்.ஏக்கள் இருவரும் 1 மாதத்திற்கு முன்பே விலை போகிவிட்டார்கள் என்று பேட்டியளித்து தொண்டர்கள் மத்தியில் எங்கள் மீது அவதூறு சேற்றை வீசத் தொடங்கியது எங்களை வேதனைக்கு உள்ளாக்கியது. 40 வருடங்களாக எந்த பலனையும் எதிர்பாராமல் வைகோவுடன் பயணித்தோம். ஆனால், இன்று இழிவான பழிச் சொல்லுக்கு ஆளாகியுள்ளோம்.

ஆளும் கட்சி கூட்டணியில் இணைகிறோம், மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படும், அமைச்சராக கூட ஆகலாம் எனும் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல், எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்த மனமில்லாமல் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். சின்னஞ்சிறு வயதில் இருந்து நாங்கள் நேசித்த கம்பீரமான திமுகவின் எம்.எல்.ஏ.க்களாகவே தொடர்ந்து பயணிப்போம். திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து இன்று வாழ்த்துப் பெற்றோம்.

திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சி அமைக்கவும், திராவிடக் கொள்கைகள் இம்மண்ணில் வளம் பெறவும் சிப்பாய்களாக களத்தில் நின்று கடமை ஆற்றுவோம். வாக்களித்த மக்களின் விருப்பத்தை நிறைவேற்றிய மனநிறைவுடன் நாங்கள் எங்கள் பணியைத் தொடர்வோம்.
பொதுவாழ்க்கையில் ஈடுபடுத்திய தலைவர் வைகோவுக்கும், கண்ணியமும் அன்பும் நிறைந்த உண்மையான மதிமுகநிர்வாகிகள், நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.