முதல்வர் விஜய் அதிரடி - தலைமைச் செயலாளர், டிஜிபி நியமனத்தில் ஆளுநர் ஒப்புதல் ரத்து!
தமிழக நிர்வாகத்தின் மீது முதல்வர் விஜய்யின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், மாநில அரசில் மிக முக்கியமான நிர்வாக உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிக முக்கியப் பதவிகளான தலைமைச் செயலாளர் மற்றும் மாநில காவல் துறைத் தலைவர் ஆகியோரை நியமிப்பதில், இதுவரை பின்பற்றப்பட்டு வந்த தமிழக ஆளுநரின் முன்அனுமதி பெறும் நடைமுறை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் இந்த இரு உயர்பதவிகளுக்கான நியமன உத்தரவுகளை ஆளுநரின் ஒப்புதல் அல்லது அனுமதி இன்றியே மாநில அரசு நேரடியாகப் பிறப்பிக்க முடியும்.
மனித வள மேலாண்மைத் துறை சார்பில் கடந்த ஜூலை 29-ஆம் தேதியிட்ட புதிய நிலையான வழிகாட்டுதல் உத்தரவு மூலம் இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது. தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, 1978-ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசுப் பணி விதிகளின்படி அரசு ஊழியர்கள் நியமன செய்யப்படும் விதியை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.
மேலும், 2022 முதல் 2025 வரை மற்றும் கடந்த ஜனவரி மாதம் வரை பிறப்பிக்கப்பட்ட அனைத்து பழைய நிலையான உத்தரவுகளையும் இந்த புதிய உத்தரவு ரத்து செய்துள்ளது.
இந்த விதி மாற்றத்தின் மூலம், மாநில நிர்வாகத்தின் ஒவ்வொரு முக்கிய முடிவிலும் முதல்வரின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அகில இந்திய சேவை அதிகாரிகள் (IAS, IPS, IFS), கூடுதல் செயலாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் (DRO) மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் (SP) ஆகியோரின் நியமனங்கள், மாறுதல்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான அனைத்துக் கோப்புகளும் இனி அமைச்சர்கள் மட்டத்திலேயே முடிவெடுக்கப்படக் கூடாது என்றும், அவை அனைத்தும் நேரடியாக முதல்வரின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் (IFS) அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகள், விசாரணைத் தொடக்கம், விளக்கம் கேட்கும் நோட்டீஸ் அனுப்புதல் முதல் இறுதி உத்தரவு பிறப்பிப்பது வரை அனைத்து நிலைகளிலும் முதல்வரின் நேரடி ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
நிதியமைச்சகத்தின் அதிகார வரம்பிலும் இந்த புதிய உத்தரவு முக்கியமான நிபந்தனைகளை விதித்துள்ளது. இதன்படி, தொடர் செலவினங்களுக்கு ₹2 கோடிக்கு மிகையான தொகைக்கும், தொடராச் செலவினங்களுக்கு ₹5 கோடிக்கு மிகையான தொகைக்கும் முதலமைச்சரின் நேரடி நிதி அனுமதிஅவசியம்.
குறைந்த அளவிலான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் மத்திய அரசின் நிதியுதவி பெறும் பெரும்பாலான திட்டங்களுக்கு மட்டுமே நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, நிதித் துறைக்கும் பிற நிர்வாகத் துறைகளுக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மற்றும் தகராறுகள் அனைத்தும் இறுதி முடிவிற்காக முதலமைச்சரிடமே கொண்டு செல்லப்படும்.
அதேபோன்று, உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக 1 ஹெக்டேருக்கு மேற்பட்ட நில கையகப்படுத்துதல் மற்றும் மாநில-மத்திய அரசுகளுக்கு இடையேயான நிலப் பரிமாற்றங்கள் ஆகியவற்றுக்கு முதல்வரும் வருவாய்த்துறை அமைச்சரும் இணைந்து கூட்டு ஒப்புதல் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழக நிர்வாக அமைப்பில் முதல்வரின் அதிகாரத்தை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கை, மாநில சுயாட்சி மற்றும் நிர்வாகச் சுதந்திரத்தை உறுதி செய்யும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.