இடைத்தேர்தலில் CPM, CPI தனித்துப் போட்டி - அதிர்ச்சியில் விஜய்!.
உதயநிதியை கைது செய்ய வந்த விஜயகுமார் ஐபிஎஸ் யார்?
சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் இல்லத்தில் காவல்துறை குவிக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கைக்குத் தலைமை தாங்கி களத்தில் நின்றவர் வேறு யாருமல்ல.. காவல்துறையில் அதிரடி துப்பறிவாளர் என்றும் பெயர் பெற்ற விஜயகுமார் IPS ஆவார்.
காவல்துறையில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து, தனது துரிதமான செயல்பாடுகளால் பொதுமக்கள் மற்றும் உயரதிகாரிகளின் பெரும் மதிப்பைப் பெற்றவர் விஜயகுமார் IPS.
முன்னதாக திருநெல்வேலி மேற்குப் பகுதியின் காவல் துணை ஆணையராகப் பொறுப்பு வகித்த காலத்தில், குற்றச் செயல்களைத் தடுப்பதிலும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதிலும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டார். பொதுமக்கள் தங்களின் புகார்களைத் தடங்கலின்றி நேரில் தெரிவிக்கக்கூடிய வகையில் அணுகுமுறையை எளிமையாக்கியதுடன், குற்றவாளிகளுக்குச் சிம்ம சொப்பனமாகவும் விளங்கி வந்தார்.
சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையராக விஜயகுமார் பணியாற்றிய காலம், அவரது காவல் பணியில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. அண்ணாநகர் எல்லைக்குட்பட்ட அரும்பாக்கம் பகுதியில் இயங்கி வந்த 'ஃபெட்பேங்க்' நிதி நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது.
அந்த வழக்கில் களமிறங்கிய துணை ஆணையர் விஜயகுமார் IPS தலைமையிலான தனிப்படை, நவீன தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் தீவிர கள விசாரணையை ஒருங்கிணைத்து, குறுகிய காலத்திற்குள் கொள்ளையர்களைக் கைது செய்து, கொள்ளை போன அனைத்து நகைகளையும் மீட்டது. இந்த அதிவேகத் துப்புதுலக்கல் நடவடிக்கைக்காக அரசு மற்றும் பொதுமக்கள் தரப்பில் அவருக்குப் பலத்த பாராட்டுகள் குவிந்தன.
தஞ்சாவூர் போராட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை நேரில் சந்தித்து விசாரணை நடத்தவும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கூடுதல் காவல் படையுடன் நீலாங்கரை இல்லத்திற்கு நேரில் சென்றார் விஜயகுமார் IPS.
வீட்டின் வாசலில் திரண்டிருந்த அமைச்சர்களான சேகர் பாபு, மா. சுப்பிரமணியன் ஆகியோரின் கடுமையான எதிர்ப்புகள் மற்றும் வாக்குவாதங்களுக்கு மத்தியிலும், சட்டத்தின் விதிகளுக்குட்பட்டு மிக நிதானமாகவும் உறுதியாகவும் தனது கடமையைச் செய்த விதம் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
எந்தவொரு அரசியல் அழுத்தங்களுக்கும் உட்படாமல், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் செயல்படக்கூடிய அதிகாரியாக விஜயகுமார் IPS அறியப்படுகிறார். திருநெல்வேலி முதல் சென்னை அண்ணாநகர் வரை தனது திறமையான செயல்பாடுகளால் முத்திரை பதித்த இவர், தற்போது இந்த உயர்நிலை வழக்கிலும் சட்டப்பூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றி உறுதியுடன் செயல்பட்டு வருகிறார்.
எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் நேற்றைய பேச்சு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தஞ்சாவூரில் காவிரி உரிமை தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் பேசிய சில கருத்துகள் எல்லை தாண்டியதாகவும், கண்ணியமற்ற முறையில் அமைந்ததாகவும் புகார்கள் வைக்கப்படுகின்றன.
உதயநிதி பெண்களை அவமதித்து விட்டதாக கூறி, தமிழக வெற்றி கழகம் மாநிலம் தழுவிய அளவில் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. உதயநிதியின் பேச்சில் சில விஷயங்கள் நாகரிகமற்றது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், தவெக தற்போது கையிலெடுத்துள்ள இந்தப் போராட்ட முறை பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.