முதல்வர் விஜய் அதிரடி - காவிரி விவகாரம்.. நீர்வளத்துறை செயலர் திடீர் மாற்றம்!

tamilnadu-cm-vijay-action
முதல்வர் விஜய் அதிரடி - காவிரி விவகாரம்.. நீர்வளத்துறை செயலர் திடீர் மாற்றம்!

தமிழக நீர்வளத்துறை செயலர் சத்ய பிரதா சாஹூ மாற்றப்பட்டுள்ளார். நீர்வளத்துறை செயலராக பிரசாந்த் வடநெரேவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி பிரச்சனை சூடுபிடித்துள்ள நிலையில் நீர்வளத்துறை செயலர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத் ராஜ் துறையின் செயலராக இருந்தவர் பிரசாந்த் வடநெரே. அவர் தமிழக நீர்வளத்துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. சத்யபிரதா சாஹூவுக்கு பணியிடம் ஒதுக்கப்படவில்லை. இதற்கான உத்தரவை, தமிழக அரசின் தலைமை செயலர் சாய் குமார் பிறப்பித்துள்ளார்.

காவிரியில் நீர் திறக்கும் விவகாரத்தில் தமிழ்நாடு - கர்நாடகா இடையே மோதல் முற்றியுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், தண்ணீரை திறக்காமல் இருந்து வந்தது கர்நாடகா. இந்நிலையில், ஆகஸ்ட் 3 ஆம் தேதி, தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடகா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலை கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா வந்தால் பெங்களூர் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம் என கன்னடசாலுவாலி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறப்பதைக் கண்டித்து ஆகஸ்ட் 13 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கர்நாடகாவில் மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

இதையடுத்து, முதலமைச்சர் விஜய் தற்போது கர்நாடகா வரவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருந்தார் கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார். "எங்களை நேரில் சந்தித்து விவாதிக்க விரும்புவதாக தமிழக முதல்வரின் அலுவலகத்திலிருந்து எங்கள் தலைமைச் செயலருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி இருவரும் சந்திக்கலாம் எனத் திட்டமிட்டோம்.

தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா வருவது குறித்து தெரிவித்திருந்தாலும், அவரது பயணம் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. கர்நாடகாவில் தற்போது போராட்டங்களால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழலில் தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா வருகை தருவது சரியாக இருக்காது." எனத் தெரிவித்தார் டிகே சிவக்குமார்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், கர்நாடகா பயண விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்த விவகாரத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் மவுனம் காத்து வருகிறார். இந்நிலையில் தான், தமிழக நீர்வளத்துறை செயலர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.