டாஸ்மாக் தனியார்மயம்? - பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை

tasmac-pmk-leader-anbumani-ramadoss
டாஸ்மாக் தனியார்மயம்? - பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் கடந்த 23 ஆண்டுகளாக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான விற்பனையை மீண்டும் தனியார் கைகளுக்கு மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்கள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள சுமார் 2,500 மதுக்கடைகளை முதற்கட்டமாக தனியார்மயமாக்கும் முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், இது சீர்திருத்தம் அல்ல, மாறாக “சீர்கேடு” என விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் இலக்கு முழுமையான மதுவிலக்காக இருக்க வேண்டும். ஆனால் அரசு அதற்கு எதிர்மாறான பாதையில் செல்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

மேலும், முன்பு தனியார் மதுக்கடைகள் செயல்பட்ட காலத்தில் சட்டவிரோத விற்பனை, அனுமதியற்ற கிளைகள், கள்ளச்சாராயம் போன்ற பிரச்சினைகள் அதிகமாக இருந்ததால் தான் 2003-ல் அரசு கட்டுப்பாடு கொண்டு வந்தது எனவும் அவர் நினைவுபடுத்தினார். அந்த பழைய முறைக்குத் திரும்புவது மாநிலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரித்தார்.

அதே நேரத்தில், “அரசே மது விற்பனை செய்கிறது என்ற அவமானத்தை நீக்க வேண்டுமானால், மதுக்கடைகளை மூடுவதுதான் சரியான தீர்வு; தனியாரிடம் ஒப்படைப்பது அல்ல” என்றும் அவர் வலியுறுத்தினார். தனியார் மயமாக்கல் நடைமுறைக்கு வந்தால், மாநிலம் முழுவதும் “மது வெள்ளம்” போல் பரவியிடும் அபாயம் இருப்பதாகவும், இளைஞர்கள் உட்பட பலர் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

விஜய் தலைமையிலான அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, முழு மதுவிலக்கை அமல்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.