ஜனநாயகன் படம்.. குழந்தைகளுக்கு திரையரங்குகளில் அனுமதி இல்லை?
முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை குழந்தைகள் திரையரங்குகளில் பார்க்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு ஜனநாயகன் படத்திற்கு சென்சார் தரப்பில் A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள், சிறுமிகள், குழந்தைகள் திரையரங்குகளில் அனுமதிக்க முடியாது. இந்த விதிகளை கட்டாயம் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் நாளை உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு முன் ஜனவரி முதல் வாரத்திலேயே ரிலீஸ் செய்ய ஜனநாயகன் படக்குழு முடிவு செய்து அறிவித்திருந்தது. அதற்கான வியாபாரங்களும் முடிவடைந்து, முதல் நாளுக்கான டிக்கெட் புக்கிங்கும் நிறைவடைந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை.
இதனை எதிர்த்து ஜனநாயகன் படக்குழு நீதிமன்றத்தை நாடிய போதும், அது கூடுதல் கால தாமத்தை ஏற்படுத்தியது. இதனிடையே ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்தது. இது தவெகவுக்கு தேர்தலில் சாதகமாகவும் அமைந்தது. தற்போது தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்துள்ள சூழலில், விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் நாளை ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
அதேபோல் சென்சாரில் இருந்த பிரச்சனைகளையும் படக்குழு முடித்துள்ளது. இந்த படத்தை திரையரங்கில் காண விஜய் தொண்டர்கள் அனைவரும் ஆர்வமாக இருக்கின்றனர். ஏற்கனவே ஜனநாயகன் படத்திற்கான புக்கிங் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் ஜனநாயகன் படத்தை 18 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகள் திரையரங்குகளுக்கு சென்று பார்க்க முடியாத நிலை உருவாகி உள்ளது.
சென்சார் தரப்பில் ஜனநாயகன் படத்திற்கு A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக A சான்றிதழ் அளிக்கப்படும் திரைப்படங்களுக்கு குழந்தைகளை அனுமதிப்பதில்லை என்பதில் திரையரங்குகளும் தீவிரமாக இருக்கின்றன.
இதனால் சிறுவர்கள், சிறுமிகள், குழந்தைகள் ஜனநாயகன் திரைப்படத்தை ஓடிடியில் தான் பார்க்க முடியும். வழக்கமாக விஜய் படம் அனைத்து தரப்பினரும் சேர்ந்து பார்க்கும் வகையில் உருவாக்கப்படும். ஆனால் ஜனநாயகன் திரைப்படம் அதிகளவிலான வன்முறை காட்சிகளுடன் உருவாக்கப்பட்டிருப்பது தவெக தொண்டர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.