இடைத்தேர்தலில் CPM, CPI தனித்துப் போட்டி - அதிர்ச்சியில் விஜய்!.
ரூ 100 கோடி நிலமோசடி! சென்னை அதிகாரிகளுக்கு தொடர்பா?
பழனியில் ரூ. 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் அவசரமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனின் பின்னணியில் சென்னையில் உள்ள உயரதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
பழனி கோயிலுக்கு பக்தர் ஒருவர் 1888-ஆம் ஆண்டு தண்டாயுதபாணி மடத்திற்கு 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் கொடுக்கப்பட்டது. கடந்த 1999ஆம் ஆண்டு முதல் மடத்தின் நிர்வாகத்தில் உரிமைக் கொண்டாடும் சிலர் இந்த நிலத்தை வெளியாட்களுக்கு விற்க முயற்சித்து வந்தநர்.
அறநிலையத் துறையின் தலையீட்டால் இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இந்த நிலையில் ஜூலை 6ஆம் தேதி இந்த நிலம் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமானது என கூறி தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கான பத்திர பதிவான போது இந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்தது.
ரூ 100 கோடி மதிப்பிலான நிலத்தை வெறும் ரூ 2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த பத்திரப்பதிவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த நிலத்தின் கிரைய பத்திரம் நேற்றைய தினம் வெளியானது. அதில் "ரூ 100 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ 2 கோடிக்கு கேட்டுள்ளதே அதிக விலை" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் "பழனி தண்டபாணி மடம், தனியார் அறக்கட்டளை" என்றும் அந்த பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தண்டாயுதபாணி மடம் தனியார் அறக்கட்டளை, நிலங்கள் மூலம் வருவாய் ஈட்டு தர்மகாரியங்களை செய்வது வழக்கம் என பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் ரூ 100 கோடி மதிப்பிலான நிலம் மூலம் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. ரூ 100 கோடி நிலத்தை ரூ 2 கோடிக்கு கேட்டுள்ளதே அதிக விலை என்றும் அந்த கிரைய பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
பத்திரப்பதிவு விவகாரத்தில் 3 பேரை சிபிசிஐடி போலீஸார் தேடி வரும் நிலையில் இந்த சம்பவத்தின் பின்னால் சென்னை அதிகாரிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இதுகுறித்து பதிவுத் துறை அதிகாரிகள் சிலரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் கூறுகையில், பொதுவாக சார் பதிவாளர்களுக்கு டிஜிட்டல் கையெழுத்து வசதி உள்ளது. இதன் அடிப்படையில் பத்திரப்பதிவு பணியில் ஈடுபட மேலதிகாரிகளால் நியமிக்கப்படும் நபர்களுக்கு இணையதளத்தில் யூசர் நேம், பாஸ்வேர்டு என சொல்லப்படும் Login credentials கொடுக்கப்படும்.
பதிவு பணியில் இல்லாத சார் பதிவாளர்களால் இந்த இணையதள வசதியை பயன்படுத்த முடியாது. லாக் செய்யப்பட்டிருக்கும். பதிவு அல்லாத பணியில் இல்லாத ஒரு சார் பதிவாளரை பத்திரப் பதிவு செய்யும் பணிக்கு அனுப்பும் போது அவர் இணையதள வசதியை பயன்படுத்த லாகின் தகவல்களை உயரதிகாரி கொடுப்பார். அவ்வாறு அவர்கள் கொடுக்கும் லாகின் தகவல்கள் மூலம் உள் நுழைந்து பத்திரப்பதிவை அந்த நபர் செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
பழனி பத்திரப்பதிவு விவகாரத்தில் தொடர்புடையதாக சொல்லப்படும் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்யும் பணிகளில் அல்லாதவர் என திமுக நிர்வாகி பரந்தாமன் குற்றம்சாட்டியிருந்தார். அப்படியிருக்கும் போது ஜஸ்டினுக்கு இணையதள வசதியை பயன்படுத்தும் username, password- ஐ கொடுத்தது யார்? ஜஸ்டின் பின்னால் இருந்து இயக்கிய அதிகாரிகள் சென்னையை சேர்ந்த மிக உயரதிகாரிகளா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.