இடைத்தேர்தலில் CPM, CPI தனித்துப் போட்டி - அதிர்ச்சியில் விஜய்!.
விழுப்புரம் அதிமுக நிர்வாகிகள் நீக்கம் - எடப்பாடி அதிரடி நடவடிக்கை!
விழுப்புரம்: அதிமுகவில் மீண்டும் உள்கட்சிக் கலகம் தீவிரமடைந்துள்ளது. சிவி சண்முகத்திற்கு ஆதரவாக செயல்பட்ட விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. வல்லம், மயிலம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தங்கள் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதால் மாவட்டம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்த நடவடிக்கைக்கு பின்னணியாக உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற சில எம்எல்ஏக்கள் பதவி விலகி தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தது கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக மயிலம் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வெளிப்படையாகவே தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தது கட்சித் தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதன் தொடர்ச்சியாக மாவட்ட செயலாளர் பதவி சண்முகத்திடமிருந்து பறிக்கப்பட்டது. இருந்தபோதிலும், அவர் தனி அணியாக செயல்பட்டு வந்ததாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் கட்சியை முழுமையாக மாற்ற முயற்சித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற கட்சி கூட்டங்களில் சண்முகம் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் நிலைமையை மேலும் பதற்றமாக்கியது.
இந்த நிலையில், சிவி சண்முகத்திற்கு நெருக்கமான 11க்கும் மேற்பட்ட மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகளை ஒரே கட்டமாக நீக்கியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்குப் பின்னால் விழுப்புரம் மாவட்ட அதிமுகவை ஒட்டுமொத்தமாக தமிழக வெற்றிக்கழகத்தில் இணைக்க முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை கட்சிக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் மேலும் பலர் கட்சியை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால் விழுப்புரம் அதிமுக அமைப்பு முற்றிலும் சீர்குலையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.