லஞ்சம் வாங்கிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்!

chennai-corporation-corruption-officers-suspended
லஞ்சம் வாங்கிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்!

சென்னை மாநகராட்சியில் நிதி முறைகேடு, வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி லஞ்சம் பெற்றது ஆகிய புகார்களில் 4 மூத்த அதிகாரிகள் உள்பட 6 பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி மண்டல சுகாதார அதிகாரி தேவிகலா, மூத்த பூச்சியியல் வல்லுநர் சிவ பொற்கொடி, உதவி செயற்பொறியாளர் ஆனந்தராவ், சாலைப் பணியாளர் பாஸ்கர், பில் கிளார்க்குகள் துர்கா மற்றும் கண்ணன் ஆகிய 6 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் ஊழல், முறைகேடுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக, லஞ்சம், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெறுதல் மற்றும் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய புகார்கள் தொடர்பாக அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 4 மூத்த அதிகாரிகள் உட்பட மொத்தம் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகளும், நான்கு பேர் மீது கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்யப்படவுள்ளன. டெண்டர் முறைகேடு, நிதி முறைகேடு மற்றும் லஞ்ச புகார்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2025-2026 ஆம் ஆண்டில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்குப் போலியான ரசீதுகளைச் சமர்ப்பித்த மணலி மற்றும் மாதவரம் மண்டல சுகாதார அதிகாரி டாக்டர் தேவிகலா, உள்விசாரணைக்குப் பிறகு ஜூலை 9 ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஷெனாய் நகரில் உள்ள மண்டல துணை ஆணையர் அலுவலகத்தில் நிபுணராகப் பணியாற்றும் சிவ பொற்கொடி மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு இளைஞரிடமிருந்து ரூ. 6 லட்சம் பெற்றதற்காக ஜூலை 11 ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கட்டட உரிமையாளர் ஒருவரிடம் ரூ. 2.5 லட்சம் லஞ்சம் கேட்டதற்காக மாதவரம் மண்டல உதவிச் செயல் பொறியாளர் ஆனந்தராவ் ஜூலை 10 ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மாநகராட்சி சாலைப் பணியாளர் பாஸ்கர், முறையான அனுமதி பெற்றிருந்த கட்டட உரிமையாளர் ஒருவரை, கட்டடத்திற்கு பூட்டி சீல் வைப்பதாக மிரட்டி ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்றதற்காக ஜூலை 10 ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ராயபுரம் மண்டலத்தில் இயந்திரவியல் துறை ஒப்பந்ததாரர் ஒருவரிடமிருந்து பில் கணக்கு முடித்து பணம் பெற்று தருவதற்கு லஞ்சம் கேட்டதற்காக, NULM பணியாளரான கண்ணன் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதேபோல, பில் கிளார்க் துர்கா என்பவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனைகளின் அடிப்படையில் நான்கு அதிகாரிகள் மீதும் துறை ரீதியான உள்விசாரணை துவங்கியுள்ளது. 4 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் கூறுகையில், "எந்தவொரு அதிகாரியும், லஞ்சமோ அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோத ஆதாயங்களையோ கோரினால், அது குறித்து நேரடியாக என் கவனத்திற்குக் கொண்டு வரலாம். சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதை நான் உறுதி செய்வேன். ஊழல் விவகாரத்தில் சமரசமற்ற நிலைப்பாட்டை எடுக்குமாறு முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.