இடைத்தேர்தலில் CPM, CPI தனித்துப் போட்டி - அதிர்ச்சியில் விஜய்!.
தவெக ஊழல் ஒழிப்பு லட்சணம்.. லஞ்சம் பெற்ற வீடியோ - டிடிவி தினகரன் கண்டனம்!
மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரசாமி என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. விஜய், தன் சொந்தக் கட்சிக்குள் நிரம்பியிருக்கும் ஊழல்வாதிகளை எப்படி ஒழிக்கப் போகிறார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில் நவீன் என்பவர் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக ரூபாய் 9.80 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தம் போட்டு, சாலை பணிகளை மேற்கொண்டார். பணிகள் முடிந்த பின்னரும், அவர் மேற்கொண்ட பணிக்கான ரசீதுகளுக்கு ஒப்புதல் கிடைக்காத காரணத்தால், ஊராட்சி மன்ற தலைவரும், தவெக மாவட்ட இணை செயலாளருமான வீரா (எ) வீராசாமியை நவீன் நாடியுள்ளார்.
ஜூலை 8-ஆம் தேதி வீராவின் கட்சி அலுவலகத்திற்கு சென்ற நவீன், அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவரிடம் ரசீதுகளுக்கு ஒப்புதல் வழங்க ரூ. 1 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நவீன், ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ. 9.80 லட்சம் மட்டுமே எனவும், ரூ. 70 ஆயிரம் வரை தருவதாக பேரம் பேசியதாக கூறப்படுகிறது.
ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி, ரூ. 1 லட்சம் கேட்டு அழுத்தம் கொடுத்த நிலையில், முதல் தவணையாக ரூ. 50 ஆயிரத்தை வீராசமிக்கு ஜி-பே மூலம் நவீன் அனுப்பியதாகவும், மீதமுள்ள ரூ. 50 ஆயிரம் பணத்தை கொடுக்க நவீன் அவரை சந்தித்த போது, "ரூ. 1 லட்சம் போதாது; ரூ.2 லட்சம் தர வேண்டும்" என்று வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ரூ. 1.30 லட்சம் கொடுக்க நவீன் ஒப்புக்கொண்டதை அடுத்து, ஊராட்சி மன்ற கிளர்க்கிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, உடனே ரசீதுகளுக்கு ஒப்புதல் வழங்க ஏற்பாடு செய்யுங்கள் என்று வீரா கூறியதாக கூறப்படுகிறது. ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமியின் அலுவலகத்தில் வைத்து ஒப்பந்ததாரர் நவீனிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், "தொட விடமாட்டேன், தொட்டால் விடமாட்டேன், தொட்டவர்களையும் விட மாட்டேன் என ரீல்ஸ் கண்டெண்டுக்கு ஏற்றார் போல திரைப்பட வசனங்களை அடுக்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய், தன் சொந்தக் கட்சிக்குள் நிரம்பியிருக்கும் ஊழல்வாதிகளை எப்போது ? எப்படி ஒழிக்கப் போகிறார்? செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியின் தலைவரும், தவெக நிர்வாகியுமான வீராசாமி, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
ஏற்கனவே ஊழல் புகார்களுக்கு உள்ளாகி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி, தவெகவில் வெள்ளாவி வைத்து வெளுக்கப்பட்ட வீராசாமி, தற்போது ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள், அவர் மீது ஏற்கனவே குவிந்திருக்கும் ஊழல் புகார்களையும், பொதுமக்கள் அவர் மீதி வைத்த குற்றச்சாட்டுகளையும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு சொந்தமான கோயில் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது தவெக நிர்வாகி ஒருவர் லஞ்சம் வாங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள், தவெகவின் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகியவற்றின் லட்சணத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
எனவே, ஒப்பந்ததாரரிடம் தவெக நிர்வாகி லஞ்சம் வாங்குவது போல சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகளை முழுமையாக ஆய்வுக்குட்படுத்தி, லஞ்சம் வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, வரும் காலங்களில் ஊழல் ஒழிப்பை பெயரளவில் இல்லாமல் செயல் அளவில் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.