நான் பேசறது தமிழக அரசியல்வாதிகளுக்கு புரியாது - திருமாவளவன்

vck-thirumavalavan-news
நான் பேசறது தமிழக அரசியல்வாதிகளுக்கு புரியாது - திருமாவளவன்

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி உடைந்துவிட்டது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. தவெக, திமுக கூட்டணி விவகாரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மாறுபட்ட கருத்துகளை கூறி வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

திருமாவுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று வைகோ கிண்டலடித்திருந்தார். இந்த கிண்டல்களால் கடுப்பான திருமாவளவன், தமிழக அரசியல்வாதிகளுக்கு நான் பேசுவது புரியாது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், எங்கள் கட்சியில் இருந்து ஒருவரை திமுகவில் இணைத்துவிட்டனர் என்பதற்காக நாங்கள் திமுகவுக்கு எதிராக பேசவில்லை. தேசியளவிலான பார்வையில் இருந்து தான் நான் திமுகவுக்கு ஆதரவாக கருத்து சொன்னேன். என்னுடைய தனிப்பட்ட பாதிப்புகளை வைத்து நான் எதுவும் பேசவில்லை. தமிழ்நாட்டை மட்டும் மனதில் வைத்து கொண்டோ, விசிகவை மட்டும் மனதில் வைத்து கொண்டோ இதை பேசவில்லை. தேசியளவில் பாஜகவுக்கு எதிரான அணியை கட்ட வேண்டும்.

அந்த அணியில் திமுகவும் இருக்க வேண்டும், தவெகவும் இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய பார்வை. இதை தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால், ஊடகவியலாளர்களால் புரிந்து கொள்ள முடியாது. இவர் என்ன குழப்புகிறார் என்பார்கள். தவெகவுக்கும், திமுகவுக்கும் எதிரும் புதிருமான நிலை இருந்தால் கூட, தேசியளவில் பாஜக மதவாத அரசியலை எதிர்ப்பதற்கு, அவர்களின் சதி அரசியலை எதிர்கொள்ள ஓரணியில் இருக்க வேண்டும்.

பாஜகவை கொள்கை எதிரி என்கிறது தவெக. பாஜகவை தொடர்ந்து எதிர்த்து வருகிறது திமுக. பாஜக சதி அரசியலை முறியடிக்க திமுக, தவெக இருக்க வேண்டும். இது என் கருத்து.
இதை நான் சொன்னால் திருமாவளவனுக்கு என்ன ஆச்சு என்பார்கள். இது அவர்களின் பார்வை புரிதலில் உள்ள சிக்கல். என்னுடைய பார்வையில் எந்த சிக்கலும் இல்லை. இது என்னுடைய கருத்து. எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

என்னுடைய கருத்துகளால், எனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். அவரின் பரிந்துரைக்கு நன்றி. நோபல் பரிசு கிடைத்தால் அவருக்கு நான் நன்றி சொல்லுவேன்" என்று கூறினார். திருமாவளவனின் பதில் அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.