செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி?

dmk-senthil-balaji-bail-case
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி?

தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என். இளையராஜாவிற்கு ₹35 கோடி ல*ஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில், திமுகவின் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆர்.வி. அசோக் குமார் ஆகிய இருவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன்கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த ஜாமீனுக்கு பின் கோர்ட்டில் செந்தில் பாலாஜி வைத்த வாதங்கள் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கின் இறுதி விசாரணையின் போது, மனுதாரர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட மிக வலுவான வாதங்களை ஏற்று நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

செந்தில் பாலாஜிக்கு சாதகமான வாதம்

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, நீதிமன்றத்தில் காவல் துறையின் குற்றச்சாட்டுகளை தவிடுபொடியாக்கும் முக்கிய வாதங்களை முன்வைத்தார்.

அவர் வாதிடுகையில், "புகார்தாரர் கூறும் தொலைபேசி அழைப்பு ஜூன் 26-ஆம் தேதி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜூன் 29-ஆம் தேதிதான் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நாட்கள் தாமதத்திற்கு முறையான காரணங்கள் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த தொலைபேசி உரையாடலின் ஆடியோ பதிவு அரசிடமோ அல்லது புகார்தாரரிடமோ இல்லை. வெறும் மொபைல் அழைப்பு விவரங்கள் (CDR - Call Detail Records) மட்டுமே உள்ளன. அதை வைத்துக்கொண்டு ல*ஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம் சாட்ட முடியாது.. அதில் என்ன பேசப்பட்டது என்பதை சொல்லவே முடியாது," என்று சுட்டிக்காட்டினார்.

செந்தில் பாலாஜி கேஸ்

மேலும், "இந்த வழக்கில் செந்தில்பாலாஜியின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் கூட இடம் பெறவில்லை. அரசு தரப்புக்கு இருக்கும் ஒரே ஒரு புள்ளி, முக்கிய குற்றவாளி இருந்த அதே நாளில் செந்தில்பாலாஜியும் ஈரோட்டில் இருந்தார் என்பது மட்டும்தான். வரவிருக்கும் கரூர் இடைத்தேர்தலில் அவர் தனது கடமைகளைச் செய்வதைத் தடுக்கும் நோக்கில், அரசியல் பழிவாங்கலுக்காகவே இந்த வழக்கில் அவரைச் சேர்க்க மாநில அரசு துடிக்கிறது என்று தமிழ் வார இதழ்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன," என்று வாதிட்டார்.

அசோக் குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. குமரேசன், "செந்தில்பாலாஜியின் சகோதரர் என்ற ஒரே காரணத்திற்காகவே அசோக் குமார் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். காவல் துறையினரே இந்த வழக்கை திட்டமிட்டு பெரிதாக்கி வருகின்றனர்.

59 எம்எல்ஏக்களை மட்டுமே வைத்துள்ள திமுக, ஒரு எம்எல்ஏவுக்கு ₹35 கோடி கொடுத்து ஆட்சியை கவிழ்க்க முயன்றது என்று கூறுவது தர்க்கரீதியாக சாத்தியமற்றது," என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "எஃப்ஐஆரின் படி செந்தில்பாலாஜிக்கு இதில் எந்தப் பங்கும் இருப்பதாகத் தெரியவில்லையே?" என்று அரசு தரப்பைக் நோக்கி கேள்வி எழுப்பினார்.

ஆட்சியை கலைக்க சதி

இதனைத் தொடர்ந்து, அரசு தரப்பு வழக்கறிஞர்ஆர். ஜான் சத்யான், மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என கடுமையாக எதிர்த்தார். அவர் தனது வாதத்தில், "குற்றம் சாட்டப்பட்டவர்கள் சென்னையில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் அறைகளை புக் செய்து தங்கி இந்த சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர். அதற்கான சிசிடிவி ஆதாரங்கள் சில அழிக்கப்பட்டாலும், அவற்றை மீட்டெடுக்கும் பணி நடக்கிறது.

அவர்களின் மொபைல் டவர் லொகேஷன்களும் அதை உறுதி செய்கின்றன. இது புதிய அரசை அமைப்பதற்கான முயற்சி அல்ல, மாறாக தற்போதைய டிவிகே அரசை முற்றிலும் கலைப்பதற்கான மிகப்பெரிய சதித் திட்டம், என்றார்.

இது வெறும் ஒரு எம்.எல்.ஏ-வுடன் நின்ற விஷயம் அல்ல. தவெக கட்சியைச் சேர்ந்த சுமார் 10 எம்எல்ஏக்களை குதிரை பேரம் பேச இந்த கும்பல் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு எம்எல்ஏவிற்கும் தலா ₹35 கோடியும், இடைத்தரகருக்கு கமிஷனாக ₹5 கோடியும் பேசப்பட்டுள்ளது.

இந்த ஒட்டுமொத்த சதித்திட்டத்திற்கும் பின்னணியில் கோடிக்கணக்கான ரூபாய் ஹவாலா பணம் (பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி ஏற்கனவே சிங்கிப்பூருக்கு தப்பியோடிவிட்டான். விசாரணை பெங்களூரு வரை நீண்டு மிக ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது," என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், எஃப்ஐஆரில் செந்தில்பாலாஜியின் நேரடித் தொடர்பு குறித்துப் போதிய ஆரம்பகட்ட ஆதாரங்கள் இல்லாததைச் சுட்டிக்காட்டி, முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆர்.வி. அசோக் குமார் ஆகிய இருவருக்கும் நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.