சுப்ரீம் கோர்ட் - திமுக மனு வாபஸ் - சிஎம் விஜய் கரூர் பயணம் உறுதி!

supreme-court-dmk-pettition-cancelled-cm-vijay-karur-travel-confirm
சுப்ரீம் கோர்ட் - திமுக மனு வாபஸ் - சிஎம் விஜய் கரூர் பயணம் உறுதி!

கரூர் சம்பவத்தை தொடர்ந்து முதன்முறையாக முதலமைச்சர் விஜய் மேற்கொள்ள இருந்த பயணம் திமுக தாக்கல் செய்த வழக்கால் தடையுண்டாகும் நிலை உருவானது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் கடும் கேள்விகளால் அந்த மனு வாபஸ் பெறப்பட்டதால், விஜயின் கரூர் பயணம் உறுதியாகி ஏற்பாடுகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன.

2025 செப்டம்பரில் கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உ*யிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டதுடன், அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார் விஜய். தேர்தலுக்குப் பிறகு கரூருக்கு நேரில் வருவேன் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், முதல்வராக பதவியேற்ற பின்னரும் விஜய் கரூர் செல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. ஜூலை 10ஆம் தேதி விஜய் கரூர் வருவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முதல்வரின் பயணம் விசாரணையை பாதிக்கக்கூடும் எனக் கூறி கட்டுப்பாடுகள் விதிக்க கோரப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, “சிஎம் மீது எந்த குற்றச்சாட்டு இல்லை… அவரின் பயணத்தை எப்படித் தடுக்கலாம்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், உச்சநீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த முடியாது எனக் கடுமையாக சாடிய நிலையில், மனுவை தள்ளுபடி செய்யப்படும் சூழல் ஏற்பட்டதால் திமுக தரப்பு மனுவை வாபஸ் பெற்றது.

இதையடுத்து கரூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. வெண்ணைமலை அருகே 10 ஏக்கர் பரப்பளவில் 5000 பேர் பங்கேற்கும் வகையில் பந்தல் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மேலும், உ*யிரிழந்தோரின் குடும்பங்களை சந்தித்து அஞ்சலி செலுத்தவும், பல நலத்திட்ட உதவிகளை வழங்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.