குண்டர் சட்டத்தில் சிக்கிய சூர்யா சிவா மற்றும் முக்தார்!

kundar-sattam-trichy-surya-siva-and-mukthar
குண்டர் சட்டத்தில் சிக்கிய சூர்யா சிவா மற்றும் முக்தார்!

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் வெளியிட்டதாக எழுந்த புகாரின் பேரில், அரசியல் விமர்சகர் திருச்சி சூர்யா சிவா மற்றும் யூடியூபர் முக்தார் அஹமது மீது சென்னை போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளனர். இருவரும் தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஓராண்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம், பாஜக நிர்வாகியும் கார் பந்தய வீராங்கனையுமான அலிஷா அப்துல்லா அளித்த புகாரைத் தொடர்ந்து தொடங்கியது. தனது குடும்பத்தினரை குறிவைத்து சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் வழியாக இழிவான கருத்துகள் பரப்பப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். குறிப்பாக தனது கணவர் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகள் குறித்த அவதூறு பதிவுகள் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட வீடியோக்கள் மற்றும் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதில், பெண்களின் கண்ணியத்தை பாதிக்கும் வகையிலான கருத்துகள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் முதலில் திருச்சி சூர்யா சிவா கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் முக்தார் அஹமது, சில நாட்கள் தலைமறைவாக இருந்தார். பின்னர் தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலத்தில் அவரை கை து செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், வழக்கின் தீவிரத்தையும், சமூக அமைதிக்கு ஏற்படும் பாதிப்பையும் கருத்தில் கொண்டு, இருவரின் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர்கள் மீது ஓராண்டு வரை தடுப்புக் காவல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பொறுப்பில்லாத கருத்துக்கள் வெளியிடுவது கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதற்கான முக்கிய எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குடும்பங்களை குறிவைத்து அவதூறு பரப்பும் செயல்களுக்கு எதிராக அதிகாரிகள் கடுமையாக செயல்படுவார்கள் என்பதையும் இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.