பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி ஆனது எப்படி?
நாடாளுமன்ற மாநிலங்களவை இடைத்தேர்தலில் போட்டியின்றி தேர்வாகிறார் காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி. வேட்புமனு தாக்கல் செய்யும் கால அவகாசம் கடந்த ஜூன் 1 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றோடு நிறைவடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி உட்பட 14 பேர் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
தேர்தலில் போட்டியிட விரும்பி வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி தவிர மற்ற அனைவரும் சுயேட்சை வேட்பாளர்கள் என்பதால் அவர்களுக்கு எந்த சட்டமன்ற உறுப்பினர்களும் முன்மொழியாததால் அவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும்.
எனவே, காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வாகிறார்.
நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலைக்கு பிறகு திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் வரும் 11 ஆம் தேதி பிற்பகல் 3 மணியோடு நிறைவுபெற்ற பிறகு அதிகாரப்பூர்வமாக பிரவீன் சக்கரவர்த்தி ராஜ்யசபா எம்.பியாக தேர்வானதாக அறிவிக்கப்படுவார்.
நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அதிமுகவின் மூத்த தலைவர் சி.வி. சண்முகம். சட்டமன்ற உறுப்பினராக அவர் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஏற்பட்ட காலிப் பணியிடத்தை நிரப்பவே இந்த அவசர ராஜ்யசபா இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி பலமடைந்து வருகிறது. சட்டமன்றத்தில் தவெக-வுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், இந்த எம்.பி சீட்டை தவெக எளிதாக வெல்ல முடியும் என்ற நிலை இருந்தது.
இருப்பினும், தேசிய அளவில் காங்கிரஸ் உடனான இணக்கமான உறவை வலுப்படுத்த முதல்வர் ஜோசப் விஜய் இந்த இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரஸூக்கு ஒதுக்கீடு செய்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய புரொபஷனல் காங்கிரஸ் தலைவராகவும், ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகவும் இருப்பவர் பிரவீன் சக்கரவர்த்தி. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகங்கள், வாக்கு வங்கிப் பகுப்பாய்வு மற்றும் தரவு மேலாண்மை ஆகியவற்றில் ராகுல் காந்திக்கு மிக நெருக்கமான ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறார் பிரவீன் சக்கரவர்த்தி. இவரைத் தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்ப ராகுல் காந்தி எடுத்த முடிவுக்கு முதல்வர் விஜய்யும் முழு ஆதரவு தந்தார்.
ஜூன் 5 அன்று முதல்வர் விஜய், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் பிரவீன் சக்கரவர்த்தி வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், இக்கூட்டணியில் இடதுசாரிகளும் (CPI, CPM) இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், "எங்களிடம் யாரும் கூட்டணி குறித்து பேசவில்லை" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பி. சண்முகம் அதிரடியாக மறுப்பு தெரிவிக்க, உடனே பிரவீன் சக்கரவர்த்தி இடதுசாரி அலுவலகங்களுக்கு நேரில் சென்று, அது தனது 'தவறு' என விளக்கமளித்து பஞ்சாயத்தை முடித்து வைத்தார்.
எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனுத்தாக்கல் செய்யாததாலும், தவெக-காங்கிரஸ் கூட்டணியின் பலத்தாலும் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வாகியுள்ளார். நாடாளுமன்றத்தில் "தமிழக மக்களின் துணிச்சலான மற்றும் நேர்மையான குரலாக என் குரல் ஒலிக்கும்" என அவர் உறுதியளித்துள்ளார். தமிழகத்தின் இந்த புதிய கூட்டணி நகர்வு, வரும் காலங்களில் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தியின் 'டீமில்' இருக்கும் ஒருவருக்குத் தமிழகம் வழியாக எம்.பி பதவி கிடைத்திருப்பது, தேசிய அரசியலில் தமிழக காங்கிரஸின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.