ஹோர்முஸ் நீரிணை சிக்கல் - டிரம்ப் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணையை வைத்து ஈரான் அமெரிக்காவை மிரட்ட முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ஹோர்முஸ் நீரிணையைத் திறந்துவிட்ட ஈரான் நேற்று அதை மீண்டும் மூடிவிட்டது.
அனுமதியில்லாமல் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயலும் எந்தக் கப்பலும் தாக்கப்படும் என்று ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது.
ஓமான் கரைக்கு அருகே ஓர் எண்ணெய்க் கப்பலும் சரக்குக் கப்பலும் தாக்கப்பட்டதாக பிரிட்டன் கூறுகிறது.
தனது இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது. நிலைமை சீராகத் தனது துறைமுகங்களின் முற்றுகையை அமெரிக்கக் கடற்படை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது ஈரான்.
அமெரிக்காவுடனான பேச்சில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது; உடன்பாட்டுக்கு முக்கியமான பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை என்று ஈரானிய நாடாளுமன்ற நாயகர் கூறினார்.
பேச்சுவார்த்தை நல்லமுறையில் சென்று கொண்டிருக்கிறது; உடன்பாடு எட்டப்படும் வரை முற்றுகை தொடரும் என்கிறார் அமெரிக்க அதிபர்.
எதிரிகளுக்குக் கசப்பான தோல்வியை வழங்கத் தனது கடற்படை தயாராய் இருப்பதாக ஈரானின் உச்சத் தலைவர் முஸ்தபா கமேனி கூறியுள்ளார்.
அமெரிக்க - ஈரான் தற்காலிகச் சண்டைநிறுத்தம் புதன்கிழமை (22 ஏப்ரல்) காலாவதியாகிறது.
அந்த இரண்டு நாடுகளையும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்த பாகிஸ்தான் உள்ளிட்ட சமரசத் தரப்புகள் தீவிரமாக முயல்கின்றன.