ஈரான் உடன்பாட்டை மீறிவிட்டது - கடும் கோபத்தில் ட்ரம்ப்
ஹோர்முஸ் நீரிணை ஊடாக எண்ணெய்க் கப்பல்கள் பயணிப்பதற்கான அனுமதி வழங்குவதில் ஈரான் திறம்படச் செயல்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) எட்டப்பட்ட இரண்டு வார கால தற்காலிகச் சண்டைநிறுத்த உடன்பாட்டை ஈரான் மீறியுள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
உடன்படிக்கையின் படி நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும். இருப்பினும், இதுவரை வெறும் 10 கப்பல்கள் மாத்திரமே அந்தப் பாதையைக் கடந்துள்ளதாகத் தெரியவருகிறது.
நீரிணையைக் கடக்கும் கப்பல்களுக்கு ஈரான் கட்டணம் விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளை ஈரான் உடனடியாகக் கைவிட வேண்டும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
தனது 'Truth Social' சமூக வலைத்தளப் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஈரானின் உதவியின்றியே எண்ணெய்க் கப்பல்கள் விரைவில் அந்த நீரிணையைக் கடக்கக்கூடிய சூழல் உருவாகும் என பதிவிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்துவது தொடர்பில் அமெரிக்கா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.