அட்லாண்டிக் கடல் நீரோட்ட வீழ்ச்சி உலகிற்கு இறுதி எச்சரிக்கை!

atlantic-water-fall-caution
அட்லாண்டிக் கடல் நீரோட்ட வீழ்ச்சி உலகிற்கு இறுதி எச்சரிக்கை!

அட்லாண்டிக் மெரிடியனல் ஓவர்டர்னிங் சர்குலேஷன் எனப்படும் பிரம்மாண்ட கடல் நீரோட்ட அமைப்பு சிதைந்தால் என்ன நடக்கும் என்பது குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

கடலின் ஆழத்தில் தேங்கியுள்ள பெருமளவிலான கார்பன் டை ஆக்சைடு (CO2) வளிமண்டலத்தில் கலப்பதே இதன் முக்கிய ஆபத்தாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நீரோட்டம் நின்றால், வளிமண்டல CO2 அளவு 47 முதல் 83 ppm வரை உயர்ந்து, உலக வெப்பநிலையை மேலும் 0.27°C அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இது வடக்கு ஐரோப்பிய நாடுகளைக் கடும் குளிரில் ஆழ்த்தி ஒரு புதிய பனி யுகத்தை நோக்கித் தள்ளும் அபாயம் உள்ளது.

வெப்ப மறுபகிர்வு சரியாக நடக்காததால், அண்டார்டிகா பகுதியில் 7°C வரை வெப்பநிலை குறையும். ஆனால் ஆர்க்டிக் மற்றும் தென் அரைக்கோளப் பகுதிகளில் 6°C முதல் 10°C வரை அதீத வெப்பம் நிலவி, பனிப்பாறைகளை வேகமாக உருகச் செய்யும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

அண்டார்டிகாவில் ஏற்படும் இந்த அதீத வெப்ப மாற்றத்தினால் 'டூம்ஸ்டே' என அழைக்கப்படும் பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டத்தை சுமார் 65 சென்டிமீட்டர் வரை உயர்த்தக்கூடும். இது கடற்கரை நகரங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

வளிமண்டலத்தில் CO2 அளவு 350 ppm-க்கு மேல் இருக்கும்போதே இந்த நீரோட்டம் வீழ்ந்தால், அது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பாது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது இந்த அளவு 420 ppm ஆக இருப்பதால், இந்த மாற்றம் மீள முடியாத ஒன்றாக மாற வாய்ப்புள்ளது.

கிரீன்லாந்து அருகே உருகும் நன்னீர், கடல் நீரின் அடர்த்தியைக் குறைப்பதே இந்த 'கடல் கன்வேயர் பெல்ட்' செயலிழக்க முக்கிய காரணமாகும். புவி வெப்பமயமாதல் தடுக்கப்படாவிட்டால், இந்த அமைப்பு முற்றிலுமாக முடங்கி உலக காலநிலையைத் தலைகீழாக மாற்றும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.