திடீரென ரத்தச் சிவப்பாக மாறிய கிரீஸ் வானம்!
கடந்த ஏப்ரல் 1, 2026 அன்று கிரேக்கத்தில் விடிந்த காலை, அங்கிருந்த மக்களுக்கு ஒரு பேரதிர்ச்சியைத் தந்தது. வானம் வழக்கமான நீல நிறத்திற்குப் பதிலாக, ரத்தச் சிவப்பாகவும், அடர் ஆரஞ்சு நிறத்திலும் காட்சியளித்தது.
ஏதோ சயின்ஸ்-பிக்ஷன் (Sci-fi) படத்தில் வருவது போலவும், உலகம் அழியப்போகும் 'அபோகலிப்டிக்' (Apocalyptic) சூழல் போன்றும் அந்தப் பிரதேசம் மாறியிருந்தது.
இந்த விசித்திர நிகழ்வுக்கு காரணம், ஆப்ரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் இருந்து கிளம்பிய மாபெரும் புழுதி புயல்தான். சஹாரா மணலில் உள்ள 'இரும்பு ஆக்சைடு' (Iron Oxides) எனப்படும் நுண் துகள்கள், வளிமண்டலத்தில் சூரிய ஒளியைச் சிதறடிக்கும்போது வானம் சிவப்பாக மாறுகிறது.
எர்மினியோ புயலால் உருவான மணிக்கு 120 கி.மீ வேகத்திலான தெற்கு காற்றானது, ஆப்ரிக்க மணலை நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் கடந்து கிரீஸ் மற்றும் லிபியாவிற்கு வாரி அள்ளி வந்து கொட்டியது. புழுதி மூட்டம் காரணமாக 1,000 மீ. தூரத்திற்கு அப்பால் இருப்பவை கண்ணுக்குத் தெரியாத நிலை ஏற்பட்டது.