பூமியால் 250 கோடி பேரை மட்டுமே தாங்க முடியும் - ஆய்வின் அதிர்ச்சி தகவல்!
சுற்றுச்சூழல் ஆராய்ச்சி இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு முக்கிய ஆய்வு, அதிர்ச்சியூட்டும் உண்மையைத் வெளிப்படுத்தியுள்ளது. பூமி கிரகமானது சுமார் 250 கோடி மக்களை மட்டுமே வசதியான வாழ்க்கைச் சூழலோடு நிலையாகத் தாங்கும் திறன் கொண்டது என்று அந்த ஆய்வு கூறுகிறது.
ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கோரி பிராட்ஷா தலைமையிலான இந்த ஆய்வின்படி, தற்போதைய 830 கோடி மக்கள் தொகை, பூமியின் இயற்கையான அமைப்புகள் நீண்ட காலத்திற்குத் தாங்கக்கூடிய அளவைத் தாண்டி வெகுதூரம் சென்றுவிட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக நாம் அதிகப்படியாகப் பயன்படுத்திய படிம எரிபொருட்கள், உணவு உற்பத்தி மற்றும் எரிசக்தித் தேவைகளை செயற்கையாக அதிகரித்தன. இது மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகளை வெளியில் தெரியாமல் மறைத்துவிட்டது.
இந்தச் செயற்கை வளர்ச்சியானது, மற்றொரு பக்கம் காலநிலை மாற்றம் மற்றும் மாசுபாட்டைத் தீவிரப்படுத்திக் கொண்டே இருந்தது.
தற்போதைய நிலை தொடர்ந்தால், 2070-களுக்குள் உலக மக்கள் தொகை 1,170 கோடி முதல் 1,240 கோடி வரை உயரக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர்.
"உங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் பிறப்பதற்கு முன்பே உலகம் அழிந்துவிட்டது என்று சொல்வதை ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள். பூமி நமக்குத் துரோகம் செய்யவில்லை. நாம் தான் பூமிக்குத் துரோகம் செய்துவிட்டோம்."