சிவப்பு எச்சரிக்கை - மனிதகுலம் சந்திக்கும் காலநிலை நெருக்கடி!
உலக வானிலை ஆய்வு அமைப்பு (WMO) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, மனித வரலாற்றில் பூமி இதுவரை சந்தித்திராத மிக மோசமான காலநிலை நெருக்கடிக்குள் நுழைந்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
தொழிற்புரட்சி காலத்துடன் ஒப்பிடுகையில், பூமியின் சராசரி வெப்பநிலையானது 1.43°C உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கடல்கள் வெப்பமடைதல் மற்றும் பனிப்பாறைகள் உருகுதல் போன்ற நிகழ்வுகள் வேகமெடுத்துள்ளன. இது உயிருக்கு ஆபத்தான டெங்கு போன்ற நோய்களின் பரவலை அதிகரிப்பதோடு, சக்திவாய்ந்த சூறாவளிகள் உருவாவதற்கான அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சாதனை அளவு வெப்பம்: கடந்த 11 ஆண்டுகளும் வரலாற்றில் பதிவான வெப்பமான ஆண்டுகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. பூமியின் உபரி வெப்பத்தில் 90% க்கும் அதிகமானவற்றை கடல்களே உறிஞ்சுகின்றன. கடந்த ஆண்டில் கடல் வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. பனிப்பாறைகள் உருகுதல்: வட மற்றும் தென் துருவங்களில் உள்ள பனி அடுக்குகள் மிகக் குறைந்த மட்டத்திற்குச் சரிந்துள்ளன.
வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு கடந்த இரண்டு மில்லியன் ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 'எல் நினோ' காலநிலை நிலைமை உருவாக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதன் காரணமாக 2027 ஆம் ஆண்டில் உலக வெப்பநிலை மேலும் புதிய உச்சங்களைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் 40°C க்கும் அதிகமான வெப்ப அலைகள், மனித நடவடிக்கைகளால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் நேரடி விளைவு எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் கூறுகையில், "பூமி அதன் எல்லைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது, ஒவ்வொரு காலநிலை குறிகாட்டியும் 'சிவப்பு எச்சரிக்கை'யை விடுக்கின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
"இந்த நெருக்கடியைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், உலக நாடுகள் உடனடியாகப் புதைபடிவ எரிபொருட்களின் (Fossil Fuels) பயன்பாட்டை நிறுத்திவிட்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு (Renewable Energy) மாற வேண்டும்."
பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தால் பூமி வெளியேற்றும் வெப்பத்தை விட அதிக வெப்பத்தை அது உறிஞ்சி வருவதாக WMO கவலை வெளியிட்டுள்ளது.