செவ்வாய் கிரகத்தில் மஞ்சள் நதி - நாசா ரோவர் கண்டறிந்த அபூர்வப் பொருள்!
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் நாசாவின் 'கியூரியோசிட்டி' (Curiosity) ரோவர், எதிர்பாராத விதமாக ஒரு பாறையை உடைத்ததில், அதற்குள் கண்ணைப் பறிக்கும் மஞ்சள் நிறப் படிகங்கள் இருப்பதைக்கண்டு பிடித்துள்ளது. இது செவ்வாய் கிரக ஆய்வில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
கடந்த மே மாதம், செவ்வாயின் 'கெடிஸ் வாலிஸ்' (Gediz Vallis) என்ற பகுதியில் கியூரியோசிட்டி ரோவர் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது அதன் சக்கரம் எதிர்பாராத விதமாக ஒரு பாறையின் மீது ஏறிச் சென்றதில் அந்தப் பாறை உடைந்தது. உடைந்த பாறையின் உட்பகுதியைப் பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
அந்தப் பாறைக்குள் இருந்தது சாதாரணக் கல் அல்ல, அது தூய கந்தகம் (Elemental Sulfur) ஆகும். செவ்வாய் கிரகத்தில் இதற்கு முன்பு கந்தகம் கலந்த தாதுக்கள் (Sulfates) கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், தனிம வடிவிலான தூய கந்தகம் செவ்வாயில் கண்டறியப்படுவது இதுவே முதல் முறை.
நாசாவின் திட்ட விஞ்ஞானி அஷ்வின் வசவதா இதுகுறித்துக் கூறுகையில், "பாலைவனத்தில் ஒரு சோலையைக் கண்டுபிடிப்பது போன்றது இது. பொதுவாக தூய கந்தகம் உருவாவதற்கு மிகவும் கடுமையான மற்றும் குறிப்பிட்ட சூழல் தேவை. ஆனால், இந்தப் பகுதியில் அத்தகைய சூழல் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. இது ஒரு பெரிய புதிராக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதே காலப்பகுதியில், நாசாவின் மற்றொரு ரோவரான 'பெர்ஸவரன்ஸ்' (Perseverance), செவ்வாயின் மற்றொரு பகுதியில் 'சிறுத்தைப் புள்ளி' (Leopard spots) போன்ற அமைப்புகளைக் கொண்ட பாறையைக் கண்டறிந்துள்ளது. இவை பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயில் நுண்ணுயிரிகள் வாழ்ந்ததற்கான வேதியியல் அடையாளங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த மஞ்சள் கந்தகப் படிகங்கள், செவ்வாய் கிரகத்தின் வரலாறு மற்றும் அங்கு நிலவிய நீர்நிலைகள் குறித்த புதிய ரகசியங்களை உடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.