உறைபனி காலத்தின் மர்மங்கள்!

snow-ball-secret-news
உறைபனி காலத்தின் மர்மங்கள்!

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, நம் பூமி ஒருமுறை அல்ல, இருமுறை ஒட்டுமொத்தமாக உறைந்து போனது. துருவங்கள் முதல் பூமத்திய ரேகை வரை எங்கு பார்த்தாலும் மைல் கணக்கிலான தடிமனான பனிப்படலங்கள்.

இதனை விஞ்ஞானிகள் 'பனிப்பந்து பூமி' (Snowball Earth) என்றழைக்கிறார்கள். இவ்வளவு பெரிய உறைபனி நிலையில் இருந்து பூமி எப்படி மீண்டது? ஏன் சில நேரங்களில் இந்த உறைபனி நிலை லட்சக்கணக்கான ஆண்டுகள் நீடித்தது? இந்த மர்மங்களுக்கு ஜப்பானின் டோக்கியோ அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இப்போது விடை கண்டுபிடித்துள்ளனர்.
பொதுவாக, பூமி முழுவதும் பனியால் மூடப்பட்டால், பாறைகளுக்கும் தண்ணீருக்கும் இடையே நடக்கும் வேதிவினைகள் நின்றுவிடும் என்று தான் இதுவரை நம்பப்பட்டது.

இந்த வேதிவினைகள்தான் காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை (CO2) உறிஞ்சி வெப்பத்தைக் குறைக்கும். பாறைகள் பனிக்கு அடியில் மறைந்தால், எரிமலைகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடு காற்றில் தேங்கி, வெப்பத்தை உருவாக்கி பனியை உருக்கும் என்பது பழைய கணக்கு. ஆனால், புதிய ஆய்வு பனிக்கு அடியிலும் வேதிவினைகள் நின்றபாடில்லை என்கிறது.

தடிமனான பனிப்பாறைகளுக்கு அடியில் பூமியின் உட்புறத்தில் இருந்து வெளிப்படும் வெப்பம் (Geothermal Heat), பனியைச் சிறிதளவு உருக்கி நீராக மாற்றுகிறது.

இந்த நீர், பனிப்பாறைகளால் நசுக்கப்பட்ட பாறைத் துகள்களுடன் வினைபுரிகிறது. இந்தச் செயல்முறை, எரிமலைகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடைத் தொடர்ந்து உறிஞ்சிக் கொண்டே இருக்கிறது. இதனால், பூமி வெப்பமடைந்து பனி உருகுவதற்குத் தேவையான கார்பன்-டை-ஆக்சைடு அளவு காற்றில் சேர முடியாமல் தாமதமாகிறது. இதுவே பூமி நீண்ட காலம் உறைந்த நிலையிலேயே இருக்கக் காரணமாகியுள்ளது.