10ம் வகுப்பு மாணவனின் சாதனை!
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் உள்ள பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் 15 வயது மாணவன் சாய் கார்த்திக், இன்று ஒரு நிஜ நாயகனாக உருவெடுத்துள்ளார். வழக்கமான துடிப்புடன் பள்ளிக்குச் சென்று வந்த இவருக்கு, சமீபத்தில் வீட்டின் மாடிப் படிக்கட்டில் இருந்து நிலைதடுமாறி விழுந்ததில் முதுகெலும்பில் (Spinal Cord) பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தினால் அவரால் எழுந்து உட்காரவோ, நடக்கவோ முடியாத சூழல் ஏற்பட்டு, நீண்ட நாட்களாகப் படுத்த படுக்கையாகவே சிகிச்சை பெற்று வருகிறார்.
வாழ்க்கையின் மிக முக்கியமான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கிய வேளையில், உடல்நிலை ஒத்துழைக்காதது சாய் கார்த்திக்கையும் அவரது குடும்பத்தினரையும் கவலையில் ஆழ்த்தியது. இருப்பினும், தனது ஓராண்டு உழைப்பு வீணாகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர், படுத்த படுக்கையாகவே தேர்வு எழுத முன்வந்தார். அவரது இந்தத் தன்னம்பிக்கையைக் கருத்தில் கொண்டு, ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு மையத்திற்கு வந்து தேர்வு எழுதப் பள்ளிக்கல்வித் துறை சிறப்பு அனுமதி வழங்கியது.
இன்று காலை தமிழ் பாடத்திற்கான முதல் தேர்வு தொடங்கியபோது, மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரப்பட்டார் சாய் கார்த்திக். முதுகெலும்பு பாதிப்பால் அவரால் பேனாவைப் பிடித்து எழுத முடியாத நிலை இருந்ததால், பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒரு ஆசிரியை அவருக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். தேர்வு அறையில் படுத்தபடியே சாய் கார்த்திக் விடைகளைச் சொல்லச் சொல்ல, அந்த ஆசிரியை அவற்றை விடைத்தாளில் எழுதினார்.
தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் இன்று தேர்வு எழுதி வரும் நிலையில், மரண வலியைப் பொறுத்துக்கொண்டு சாய் கார்த்திக் காட்டிய இந்த உறுதி அங்கிருந்த ஆசிரியர்களையும் சக மாணவர்களையும் கண் கலங்க வைத்தது. எத்தகைய சவால்களையும் மன உறுதியால் வெல்ல முடியும் என்பதற்குச் சான்றாகத் திகழும் இந்த மாணவனைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.