சிறைத்துறை அதிகாரிகள் அழுத்தத்தில் இருக்காங்க! - அமைச்சர் நிர்மல்குமார்.
உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம் கோயில்!
மனிதர்கள் வாழ்வது பூலோகம். இறைவனின் இருப்பிடம் மேலுலகம். வைகுந்தம், கயிலாயம் எல்லாமே அங்குண்டு. அது போன்று மனிதர்களுக்கு அடியில் ஒரு உலகம் உண்டு. அது பாதாளஉலகம் என்று சொல்வார்கள் ஆன்மிகபெரியவர்கள்.
மனிதர்களுக்கு தெரிந்ததெல்லாம் பூலோகம் மட்டும்தான். மேல்உலகம் சென்றவர்கள் திரும்பவில்லை. பாதாளஉலகத்தைக் காணமுடியவில்லை. ஆனால் பாதாளஉலகம் உண்டு என்பதை நிரூபிக்கிறது. உத்தரகாண்ட் மாநிலம் பித்தோகர்க் மாவட்டத்தில் அமைந்துள்ள பாதாள புவனேஸ்வரர் கோயில்.
இயற்கை எழில் கொஞ்சும் மலைகள்சூழ இரண்டு நதிகளுக்கிடையே தவழும் அழகிய கிராமத்தில் தான் இந்தக்கோவில் அமைந்திருக்கிறது. கோயிலை அடைய அரைக்கிலோமீட்டர் நடந்துசெல்லவேண்டும். தூரத்திலிருந்தே கோவிலைப் பார்க்கமுடிகிறது. ஸ்கந்தபுராணத்தில் இந்தக் குகைகோயிலுக்கு நான்கு கதவுகள் இருந்ததாகவும், போன யுகத்தில் இரண்டு கதவுகள் மூடிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பாதாள உலகுக்கு செல்லும் வழியைப் பற்றி கந்தபுராணத்தில் குறிப்பிட்டிருந்தாலும் சூரியவம்சத்தை சேர்ந்த ரித்துபர்னா என்பவர்தான் இந்தக்கோயிலின் உள்ளே நுழைந்ததாக புராணக்கதை கூறுகிறது. மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் இங்குவந்து ஈஸ்வரனை பூஜித்தபின்பு மேல்உலகம் சென்றதாக கூறுகிறார்கள். கலியுகத்தில் ஆதிசங்கரர் இங்கு வழிபட்டு லிங்கத்துக்கு செப்புகாப்பு வைத்திருக்கிறார்.
இந்துமத இதிகாசநூல்களின் படி முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒன்றாக சேர்ந்திருக்கும் இந்தகோவில் தான் பாதாளஉலகுக்கு செல்லும் வாசல் என்று சொல்கிறார்கள். சுண்ணாம்பு பாறைகளால் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோயில் வளாகத்தில் சிவன், பார்வதிக்கு கோவிலக்ள் உண்டு. அதை தாண்டி சென்றால் குகையின் நுழைவாயில் தெரிகிறது. 160 அடிநீளமும்,100 அடி ஆழமும் கொண்ட இந்தக்குகைக்குள் செல்வது சாதாரணமான விஷயமல்ல.
குகைக்குள் ஒரு மனிதன் மட்டுமே உள்ளே நுழைய முடியும். குகையின் பக்கவாட்டில் பிடிமானத்துக்காக சங்கிலி வைத்திருக்கிறார்கள். அதுவும் புழுவை போல் வளைந்து நெளிந்து செல்லவேண்டும். இந்தக் குகைக்குள் கவனமாக ஊடுருவிசென்றால் 80 படிக்கட்டுகளுக்கு அடுத்து சுரங்கப்பாதை ஒன்று உண்டு. இதன் வழியாக கயிலாயம் செல்லலாம் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் தற்பொது இந்த சுரங்கமானது அடைக்கப்பட்டிருக்கிறது.
படிக்கட்டுகளில் இறங்கும்போதே நரசிம்மரின் உருவம் தெரிகிறது. கீழே இறங்கியதும் ஆதிசேஷன் பூமியைத் தாங்கும்படி இருக்கும் காட்சியைக் காணலாம். அங்கு யாககுண்டமும் காணப்படுகிறது. அர்ஜூனனின் கொள்ளுப்பேரன் ஜனமேஜயன் தன் தந்தை பரீட்சித் மரணத்துக்கு பழிவாங்க இங்குதான் நாகயாகம் செய்ததாக கூறப்படுகிறது.
ஆதிசேஷன் முதுகின் மேல் நடந்தால் எட்டு இதழ் தாமரையிலிருந்து விநாயகர் மீது தண்ணீர் சொட்டுசொட்டாக விழுகிறது. மேலும் வளைவுகளைக் கடந்தால் பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத் விக்ரகங்கள் லிங்கவடிவில் காணப்படுகின்றன. பக்கத்தில் காலபைரவர் ஆக்ரோஷத்துடன் வாயை துருத்திக் கொண்டு நிற்கிறார். அந்த வாயின் உள்ளே நுழைந்தால் மோட்சத்தை அடையலாம் என்கிறார்கள். அங்கு சிவபெருமான் சிம்மத்தின் மேல் பாதாளசண்டியுடன் காட்சி தருகிறார்.
கருவறையில் ஆதிசங்கரர் வைத்த மூன்று செப்புலிங்கங்கள் இருக்கிறது. லிங்கத்தின் மீது மாறிமாறி நீர்சொட்டி அபிஷேகம் நடக்கிறது. அதைத்தாண்டி கழுத்தில் நாகங்களுடன் சிவன் காட்சிதருகிறார். சிவபெருமானுடன் முப்பத்துமுக்கோடி தேவர்களும் இங்கிருப்பதாகஐதிகம். இங்கிருக்கும் லிங்கத்தை மேல் இருக்கும் கூம்பு தொடும் தருணமே கலியுகம் முடியும் நாள் என்கிறார்கள்.
அங்கிருந்து குகையின் வேறுவழியாக வெளியேறவேண்டும். இந்த குகை கோயிலுக்கு சென்றுவந்தால் நிச்சயம் புதிய உலகம் சென்ற உணர்வை உண்டாக்கும். வாழ்நாளில் ஒருமுறையாவது பாதாள புவனேஸ்வரரை தரிசியுங்கள்.