பூமிக்கு குறிவைக்கும் விண்கற்கள் - நாசா விடுத்த எச்சரிக்கை!

meteorites-nasa-news
பூமிக்கு குறிவைக்கும் விண்கற்கள் - நாசா விடுத்த எச்சரிக்கை!

விண்வெளி என்றாலே ஆச்சரியங்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால், அந்த ஆச்சரியங்களுக்கு நடுவே ஒரு மிகப்பெரிய ஆபத்து ஒளிந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், ஒரு முழு நகரத்தையே தரைமட்டமாக்கும் வல்லமை கொண்ட சுமார் 15,000 விண்கற்கள் இன்னும் கண்டறியப்படாமல் விண்வெளியில் சுற்றி வருகின்றன என்ற அதிர்ச்சித் தகவலை நாசா வெளியிட்டுள்ளது.

விண்வெளியில் சிறிய விண்கற்கள் தினசரி பூமிக்குள் நுழைந்து எரிந்து சாம்பலாகின்றன. அதேபோல், டைனோசர்களை அழித்தது போன்ற மிகப்பெரிய விண்கற்களை நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஆனால், சுமார் 140 மீட்டர் (460 அடி) அளவு கொண்ட நடுத்தர வகை விண்கற்கள் தான் தற்போது விஞ்ஞானிகளின் தூக்கத்தைக் கெடுத்துள்ளன.

இவை ஒரு பெரிய நகரத்தின் மீது மோதினால், அந்த நகரமே இருந்த இடம் தெரியாமல் அழியும். மிகப்பெரிய தீ விபத்துகள் மற்றும் உள்கட்டமைப்பு பாதிப்புகள் ஏற்படும். பிராந்திய அளவிலான பேரழிவை இது உருவாக்கும்.

நாசாவின் கோள் பாதுகாப்பு அதிகாரி டாக்டர் கெல்லி ஃபாஸ்ட், சமீபத்தில் அரிசோனாவில் நடந்த அறிவியல் மாநாட்டில் பேசுகையில், "எங்களுக்குத் தெரியாத விண்கற்களைப் பற்றித் தான் நான் கவலைப்படுகிறேன்" என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானிகளின் கணக்குப்படி, பூமிக்கு அருகில் இதுபோன்ற 25,000 விண்கற்கள் இருக்கலாம். ஆனால், இதுவரை நாம் 40 சதவீதத்தை மட்டுமே கண்டறிந்துள்ளோம். மீதமுள்ள 15,000 விண்கற்கள் எங்கே இருக்கின்றன, எப்போது பூமியை நெருங்கும் என்பது யாருக்கும் தெரியாது!

இந்த விண்கற்கள் கண்ணாமூச்சி ஆடுவதற்குக் காரணங்கள் பல:
பல விண்கற்கள் இருண்ட நிறத்தில் இருப்பதால், சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதில்லை. சாதாரண தொலைநோக்கிகளால் இவற்றைக் கண்டறிவது கடினம்.

சில கற்கள் பூமியின் சுற்றுப்பாதையை ஒட்டியே பயணிப்பதால், சூரியனின் பிரகாசமான ஒளிக்கு முன்னால் அவை தெரிவதில்லை.

கடந்த 2022-ல் டார்ட் (DART) என்ற விண்கலத்தை மோதவிட்டு ஒரு விண்கல்லின் பாதையை மாற்றி நாசா சாதித்தது. இது நம்பிக்கையைத் தந்தாலும், ஒரு விண்கல்லை திசைதிருப்ப நமக்கு பல ஆண்டுகள் முன்னரே எச்சரிக்கை கிடைக்க வேண்டும். ஆனால், தற்போது நம்மிடம் அவசர காலத்தில் ஏவக்கூடிய 'ரெடிமேட்' விண்கலன்கள் எதுவும் இல்லை என்பது கசப்பான உண்மை.

இந்த இடைவெளியை நிரப்ப நாசா 'நியோ சர்வயர்' என்ற அகச்சிவப்பு (Infrared) விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கி வருகிறது. இது விண்கற்களின் வெப்பத்தைக் கண்டறிந்து, இருட்டில் மறைந்திருக்கும் கற்களையும் காட்டிவிடும். அடுத்த சில ஆண்டுகளில் இது ஏவப்பட்டால், 90 சதவீத விண்கற்களை நம்மால் பட்டியலிட முடியும்.

தற்போதைக்கு பூமிக்கு உடனடி ஆபத்து ஏதுமில்லை என்றாலும், விண்வெளியில் இருந்து வரும் இந்த 'அழையா விருந்தாளிகளை' கண்காணிக்க வேண்டியது மனிதகுலத்தின் பாதுகாப்பிற்கு மிக அவசியம்.