Breaking News :

Tuesday, April 16
.

தகிட தகதமிதா தீம்.


நீங்கள் ஏன் கமலுக்கும் அவரது படங்களுக்கும் பெரும் வக்காலத்து வாங்குகிறீர்? அவர்ஒரு Flop version of versatility .அவருடைய அதிமேதாவித்தனத்தின் செல்லுபடி சதவீதம் தமிழ் சினிமாவில் வெகுகுறைவு என்றென் நண்பர்கள் கூறும்போதெல்லாம் அதற்கான விடையாய் வெறும் புன்னகையை மட்டுமே நான் உதிர்ப்பதுண்டு.

ஏன்?

1978 ஆம்வருடம்."நினைத்தாலே இனிக்கும்" படத்துக்கு பிந்தைய கமல்ஹாசனின் அறையில் அறிவியல் எழுத்தின் ஆசான் சுஜாதா ஓர்நாள் தங்க நேரிடுகிறது. அதை அவரே விவரிக்கிறார் பாருங்கள்.
"பள்ளிப்படிப்பை கூட தாண்டியிராத, கமல் எனும் இந்த 22 வயது அரும்பு மீசை நடிகன் தன் அறை முழுக்க நிரப்பியிருப்பது வெறும் ஆங்கில புத்தகங்கள். அத்தனையும் உலக சினிமா குறித்து.
சினிமா மீதான அடங்கா தாகம் கமலை நிறைய புத்தகங்கள் படிக்க வைக்கிறது. இத்தனைக்கும் ஒன்பதாவது வரை மட்டுமே படித்த இவர் "மேல்நாட்டு மருமகள்", "சட்டம் என் கையில்" போன்ற படங்களில் அனாயசமாக பேசும் ஆங்கிலம் டக்கென்று இவர் மெத்தப்படித்தவரோ என்றே யோசிக்க வைக்கிறது. உலக சினிமா பற்றி அனைத்தும் தெரிந்து வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் புராதன Trend-களையும் உடைத்தெறியும் அத்தனை ஆக்க சக்தியும் பார்வையும் உடைய இவர் அதன் உச்சமாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே தெரிகிறது".
சுஜாதாவின் கணிப்பொறி மூளை கணித்து சொன்னது பொய்யாகாது அடுத்த 2 வருடங்களில் சிவாஜி விட்டு சென்றதையும் சேர்த்து சுமந்து, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஆகிறார் கமல்.
25 வயதிற்குள்ளாக 99 திரைப்படங்கள். நம்பர் ஒன் ஸ்தானம். நாமாய் இருந்தால் என்ன செய்வோம்? இன்னும் How to upgrade out Stardom? என்றே யோசித்திருப்போம் . ஆனால் தன்னையே பரிட்சித்து பார்க்க தூண்டிய தொழில் ஆர்வம் மிக்க கமலின் upgradation என்பது வேறு.
தான் 99 படங்களில் நடித்து சம்பாதித்த அனைத்தையும் 100ஆவது படமான "ராஜபார்வை" எனும் "Trend Breaking" படைப்புக்காக (ஹாசன் பிரதர்ஸ் எனும் பேனரில்) முதலீடு செய்யும் ஆர்வம்தான் அது.
இதிலென்ன ஆச்சர்யம்?
கதாநாயகன் என்பான் அஷ்டாவதான அம்சங்கள் பொருந்திய பிறப்பு எனும் பிம்பத்தை உடைத்தெறிந்து (ஏற்கனவே ஒரு முறை 16 வயதினிலே திரைப்படத்தில் முயற்சித்த) ஒரு குருட்டு இசைக்கலைஞனின் காதலையும் ஏக்கத்தையும் சொல்ல முற்பட்ட Out of box @ 1980 படைப்புதான் ராஜபார்வை. "Butterflies are free" (1972) எனும் பிரெஞ்சு படத்தின் தாக்கத்தில் அத்தகைய ஒரு முயற்சியை கமல் கையாள நினைத்ததை அப்போதைய விமர்சன உலகம் வெகுவாக பாராட்டினாலும், வர்த்தக ரீதியாக மாபெரும் தோல்வி!! காரணம், கமல் எனும் Number one ஸ்டாரை ஒரு குருடனாக மக்கள் ஏற்காததே.
So, சம்பாதித்த அனைத்தும் இழப்பு. இந்த ஒரு படத்தின் இழப்பை சரி செய்ய அப்போதைய நிலவரப்படி கமல் 5-6 வருடங்கள் தொடர்ச்சியாய் நடிக்க வேண்டி இருந்தது.
மீண்டும் இழந்ததை அனைத்தும் சம்பாதிக்கிறார். (உபயம்- சகலகலா வல்லவன், மூன்றாம் பிறை, காக்கி சட்டை உள்ளிட்ட வெற்றிகள்)
மிக சரியாய் 5 வருடங்கள் கழித்து அடுத்த தயாரிப்பை உருவகப்படுத்தும் முயற்சி. "If Cinema is a business, he could have produced his second film Commercially. But for him, Cinema is a passion". அதனால்தான் சகலகலா வல்லவனையே திரும்ப எடுக்கலாம், படம் வசூலை அள்ளும் எனும் கமர்ஷியல் ஐடியாக்களை எல்லாம் தூக்கி கிடப்பில் போட்டு விட்டு, நவீன சினிமா முயற்சியில் அவரது பாதையை தீர்மானிக்கிறார்.
அதுவே 1986இன் "விக்ரம்". நிஜம் சொல்வதனால் அப்போதைய சாமானிய தமிழனுக்கு IIT (Indian Institute of Technology), ICBM( Inter Continental Ballastic Missile) இது பற்றிய அறிவெல்லாம் வெகு தூரம். அதை சினிமா படுத்தி வெகுஜனத்துக்கு அறிவியலையும், தமிழ் சினிமாவுக்கு "Steady Cam" எனும் நவீனத்தையும் முதல் முறையாய் புகுத்திய சாகசம் தான் "விக்ரம்". இருந்துமென்ன? கமலின் அதிமேதாவித்தனம் இம்முறையும் சறுக்கியது. படம் வசூலில் ரஜினிகாந்தின் "ஊர்க்காவலன்" படத்தோடு மோதி தோற்றது.
But to be honest, அவரது ரசிகன் என்று கூறிக்கொள்ளும் அடுத்த தலைமுறைக்கு (நான் உள்ளிட்ட) "விக்ரம்" ஒரு ஆரம்பபுள்ளி.
ஏன்? என் கவிதை வரிகளிலேயே சொல்வதானால்,

“எண்பதுகளில் நாயகர்கள்
பன்ச் டயலாக் பேசி -
பத்து பேரை பறந்து பறந்தடித்து -
கதாநாயகியின் விம்மிப்புடைத்த
ஜாக்கெட்டுக்கு பின்னே ஓட - விக்ரமில்
ராக்கெட்டுக்கு பின்னே ஓடி
ஐ.ஐ.டி யும்
ஐ.சி.பி.எம் மும்
தமிழனுக்கும்-தமிழ் சினிமாவுக்கும்
கொஞ்சம் புரிய வைத்ததில் - இவனிடம்
அடுத்த தலைமுறை கற்றுக்கொண்டது,
அடுத்ததென்ன?
அடுத்ததென்ன? -
என்ற கேள்வி மட்டுமே - தன்னை
அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்என்ற
மாபெரும் உண்மையை!!!!”

"எனது சினிமாக்களின் நிறமும் சாயலும் புளித்து போன ஒன்றாக எனக்கு ஆகி விடக்கூடாது என்பதை எனக்கே உணர்த்திய படம் தான் விக்ரம். தோல்வி அடைந்தது என்பதற்காக அப்படத்தை குறை கூறினால் அது சினிமாவுக்கே நான் செய்யும் துரோகம்"

இது அவரது வரிதான். அதனால்தான் மூன்று வருடம் கழித்து தனது மூன்றாவது தயாரிப்பான "அபூர்வ சகோதரர்கள்"(1989) திரைப்படத்தையும் ஒரு வித்தியாசமான முயற்சியாகவே வெளிக்கொணருகிறார். உண்மையில் அந்த மூன்றடி அப்பு "குள்ளன்" கமலை விஸ்வரூபமெடுத்து எழுந்து நிற்கவே வைத்தான்.

அதற்குப்பின் ஒரு இயக்குனராக, கதாசிரியனாக, தயாரிப்பாளராக, நடிகனாக என அவர் விதைத்ததெல்லாம் படங்கள் அல்ல. வெற்றி தோல்வி எனும் மாயைக்கு அப்பாற்பட்ட பாடங்கள். குணா, மகாநதி, குருதிப்புனல், நம்மவர், அன்பே சிவம், ஹே ராம், ஆளவந்தான் என அத்தனை முயற்சிகளையும் ஒதுக்கிய தமிழுலகம் இப்போது அப்படங்களை ஆஹா ஓஹோவென புகழ்வது வேடிக்கைதான். உண்மையில் அவர் 10 வருடங்கள் முன்னோக்கி சிந்திக்கிறார் என்பதை மறுத்துவிட்டு, அவர் காலத்துக்கேற்ப படம் எடுக்க தெரியாதவர் என்று குறை கூறினால் எவ்வாறு ஏற்க? (உ.தா- 1991இல் தோல்வியடைந்த குணா தான் பத்து வருடங்கள் கழித்து 2001இல் "காதல் கொண்டேன்" ஆகி வெற்றி பெற்றது. இன்னும் குருதிப்புனல்-காக்க காக்க, ராஜபார்வை-குக்கூ என அடுக்கிகொண்டே போகலாம்.)
தனது அபூர்வ படைப்புகளின் வெற்றி தோல்வி குறித்தெல்லாம் அவர் என்றும் கவலைப்பட்டதில்லை. "His geniousness and passion is more into cinema or above than cinema, not just a hero who cares for his stardom & commercial victory" ஏனெனில் விஸ்வரூபம் குறித்த மதச்சாய பிரச்சனைகளின் போது, "மதம் ஒரு ஆயுதமாய் இருக்கும் இந்த மாநிலத்தை விட்டு போகிறேன். எங்கு நல்ல சினிமா எடுக்க முடியுமோ அங்கே எனக்கோர் இடம் நிச்சயம் உண்டு. தமிழ்நாட்டை விட்டுத்தான் போவேனே தவிர சினிமாவை விட்டல்ல"!! என்று கூற முடிகிறது அவரால்.
Architecture Medicine, Science போல சினிமாவும் ஒரு profession தான். அத்தொழிலின் ஒரு "Professional Genius" ஆகவே கமலை நாங்கள் பார்க்கிறோம். எங்கள் தொழிலிலும் அத்தகைய ஒரு நேர்த்தியை, காதலை, கடைப்பிடிக்க முடியுமாவென்று ஏதேனும் ஒரு காலகட்டத்தில் சந்தேகம் எழும்போது, அவரே எங்களுக்கு ஓர் "Reference" ஆக இருக்கிறார். அதனால்தான் "Business Trends in Media", "How to Build Consistency" போன்ற IIM இன் கருத்தரங்குகளுக்கு அவர் அழைக்கப்படுகிறார். ஒரு நடிகனாக அல்ல. ஒரு மாஸ் ஹீரோவாக அல்ல. சினிமா எனும் துறையின் தேர்ந்த கட்டுமானராக.
தோற்றுப்போகும் தனது படைப்புக்கள் எல்லாமே பிற்காலத்திய நல்சினிமாவுக்கான விதைகளே என்றுணர்ந்து தான் தனது கலை தந்தை சிவாஜி பேசுவது போல் தேவர் மகனில் ஒரு வசனம் வைத்திருப்பார்.
"விதை விதைச்ச உடனே பழம் சாப்பிட முடியுமோ? இன்னைக்கு நான் விதைக்கிறேன், நாளைக்கு நீ சாப்புடுவ, அப்புறம் உன் மவன் சாப்புடுவான், அதுக்கப்புறம் அவன் மவன் சாப்புடுவான். இதையெல்லாம் இருந்து பார்க்க நான் இருக்க மாட்டேன். ஆனா விதை, நான் விதைச்சது. இதெல்லாம் என்ன பெருமையா? கடமை! ஒவ்வொருத்தனோட கடமை!!

இதோ இன்றும் இந்த வயதிலும், அரசியல் மற்றும் இன்னபிற இன்னல்களுக்கு நடுவிலும் அவரால் 

தகிட தகதமிதா தீம்  
தகிட தகதமிதா தீம்தக்..
தகிட தகதமிதா தீம்
தகிட தகதமிதா தீம்தக் தகிட  
உஹ்ஹு ஹாஹா ஹாஹ்ஹா..  

"விக்ரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..!" செய்ய முடிகிறது.

அவரது அற்புத படைப்புக்களை எல்லாம் மற்றவர் போல் பத்து வருடம் கால தாமதித்து பாராட்ட எனக்கு மனமில்லை. அதை நான் உடனே செய்வதால்தான் இந்த கேள்வி என்னிடம் தொடர்ந்து எழுப்பப்படுகிறது -

நீங்கள் ஏன் கமலுக்கும் அவரது படங்களுக்கும் பெரும் வக்காலத்து வாங்குகிறீர்?
---------------------------------
Writer Charithraa's

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.