Breaking News :

Wednesday, April 24
.

பெண்கள் உளவுத்துறையில் பயணிக்க...


பெண்கள் உளவுத்துறையில் பயணிக்க வேண்டும் என்றால் இரண்டு விஷயங்கள் கட்டாயம் தேவை. அழகு மற்றும் அறிவு. ஒரு பெண் தன்னுடைய அழகை வைத்து எதிரி நாட்டு உயர் அதிகாரிகளை தன் வலையில் வீழ்த்த வேண்டும். அடுத்து தன் அறிவைப் பயன்படுத்தி அவரிடம் இருந்து அனைத்து ரகசியங்களையும் கறந்து தன் தாய்நாட்டிற்கு அனுப்ப வேண்டும்.

நூர் இனாயத் கான் என்கிற பெண்ணுக்கு இந்த இரண்டும் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. இங்கிலாந்து நாட்டிற்காக ஜெர்மனியில் உளவுப் பார்த்து, ஒரு மிகப்பெரிய யுத்தத்தில் இருந்து தன் நாட்டைக் காப்பாற்றி இறுதியில் ஜெர்மன் அதிகாரிகளிடம் பிடிப்பட்டு, வதை முகாம்களில் சித்திரவதை செய்யப்பட்டு 1944ல் அங்கேயே இறந்து போன ஒரு வீரப் பெண்மணி தான் நூர் இனாயத் கான்.

நூர் இனாயத் கானுக்கும் இந்தியாவிற்கும் நிறைய தொடர்பு உண்டு. இவர்களுடைய குடும்பம் திப்பு சுல்தான் ராஜ வம்சத்தைச் சேர்ந்தது. இவர் இந்திய வம்சாவளியான சூஃபி இசை கலைஞர் இனாயத் கானுக்கு மகளாக 1914ல் ரஷ்யாவில் பிறந்தார். பின்னர் ஃபிரான்ஸில் குடியேறி கவிதை மற்றும் சூஃபி இசையில் ஒரு மேதையாக வளர்ந்துக்கொண்டிருந்தார். கலை, கல்வி, விளையாட்டு என்று அனைத்திலும் சிறந்து விளங்கியதால் பள்ளி பருவத்திலேயே இவருக்கு ஏகப்பட்ட நண்பர்களைப் பெற்று தந்தது. எல்லாருக்கும் செல்லப் பிள்ளையாக இருந்ததால் அனைவரும் இவரை செல்லமாக 'ராணி' என்றே அழைக்க ஆரம்பித்தனர். 

ஒரு உளவுத்துறைக்கு இவைதான் தேவை. பிரான்ஸில் இருந்தாலும் இங்கிலாந்து உளவுத்துறை கண்களில் பட ஆரம்பித்தார். பதின் பருவம் முடிவதற்கு முன்பே இங்கிலாந்து உளவுத்துறை இவருக்கு ஏகப்பட்ட பயிற்சிகளைத் தர ஆரம்பித்தது. அனைத்திலும் விரைவாக தேர்ச்சி பெற்று ஜெர்மனிக்குள் நுழைந்து நாஜி படைகளுக்குள் வேவு பார்க்க ஆரம்பித்தார். அனைத்தையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு தன் தாய்நாட்டிற்கு திரும்பும் போது எதிரிகளிடம் மாட்டிக்கொண்டார். அதன் பிறகு பல வருடங்கள் வதை முகாம்களில் அடைக்கப்பட்டு தன் நாட்டிற்காக தன் உயிரை நீத்தார் நூர் இனாயத் கான்.

இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் அரசுகள் இவரை "Spy Princess" என்று புகழ்கிறது. இந்தியா இவரை "Heroine of India" என்று கொண்டாடுகிறது.

இந்தியா இவரைப் புகழ்வதற்கு காரணம், இங்கிலாந்து அதிகாரிகள் இவரிடம், "இந்தியாவில் சுதந்திர போராட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் போர் வந்தால் நீங்கள் யாரை ஆதரிப்பீர்கள்?" என்று கேட்டதற்கு கொஞ்சம் கூட தாமதிக்காமல், "என் தாய்நாடு இந்தியாதான். நான் இந்தியாவைத் தான் ஆதரிப்பேன்" என்று சொன்னார் நூர்.

Spy Princess என்கிற இந்நூலை வாசிக்க ஆரம்பித்தால் பக்கங்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகர்கிறது. நூர் தன்னுடைய இளமை பருவத்தில் எவ்வளவு புத்திசாலியாகவும் மனித நேயம் மிக்கவராகவும் இருந்திருக்கிறார் என்பதை அழகாக சொல்லி இருக்கிறார் எழுத்தாளர். இவர் உளவுத்துறையில் பயிற்சி பெறும் இடங்கள் சுவாரஸ்யமாக சொல்லப் பட்டிருக்கிறது. அதே சமயம் ஜெர்மன் அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்படும் இடங்கள் எல்லாம் மனதை உறைய வைப்பவை.

Shrabani Basu எழுதிய இந்த நூலை மிக அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார் உதயகுமார்.

The Day Of The Jackal, The Eagle Has Landed போன்ற உலகின் முக்கியமான Spy நாவல்களை வெளியிட்டுள்ள  கண்ணதாசன் பதிப்பகம் தான் இந்த புத்தகத்தையும் வெளியிட்டுள்ளது.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.