Breaking News :

Saturday, April 19
.

வேண்டுதல்கள் - சிறுகதை


அம்மாவை  அப்படிப் பாத்து ஆடிப்போயிட்டா மக. நெசம்மாவா... இது தேவையான்னு கண்கலங்க க்கேட்டா ஆமான்னு சொன்னா அம்மா......

போனவருசம் நவம்பர்செப்டம்பர் மாசம் அவளுக்கு கடுமையான காய்ச்சல் மழைக்காலம் ந்றதால இதெல்லாம் சகசம்ன்னாலும்.. காச்சல் நிக்கல சாக்கடைத்தண்ணி குடிதண்ணில கலந்ததால அந்த பகுதில இருக்குற பலபேருக்கு அப்புடித்தான் இருந்துச்சு.

காச்ச நிக்காததால ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணாக. அங்க ரத்தம் சோதிச்சிப்பாத்ததுல டாக்டர் சொன்னாரு இது டைப்பாய்டு வயிறெல்லாம் புண்ணாக்கெடக்கு அது ஆறனும்ன்னு சொன்னாரு. தெனம் சாத்துகுடி பழம் எளனி மாதுளைன்னு குடுக்கச்சொன்னாரு

குடுத்துக்கிட்டே இருந்தாலும் கொணமாகல . திரும்ப டெஸ்ட் எடுத்துப்பாத்தப்ப இன்னொரு டாக்டர் இது டெங்குன்னு சொல்லி மருந்து குடுத்தாரு... அவளோட அம்மாவுக்கு வயத்தை கலக்கிடுச்சு... அவளக்காப்பாத்துப்பா முருகா ந்னு வேண்டிக்கிட்டா...

பழனிமலை முருகா நீதான் காப்பாத்தனும் காப்பாத்துனா குடும்பத்தோட கோயிலுக்கு வாறோம் ந்னு வேண்டிக்கிட்டா அம்மா...

கொஞ்சநாளுல அவளுக்கு சரியாகி வீட்டுக்கு வந்துட்டா. வேண்டுதல் நின்னுச்சு.... கொரானா வந்ததால பழனிக்கும் போகமுடியல
இப்பப்போகலாம் அப்புறம்போகலாமுன்னு பாத்தா லாக்டவுன் முடிஞ்ச பாடில்ல... அதுபாட்டுக்குப்போயிட்டு இருந்துச்சு அடுத்த வருசமும் பொறந்தாச்சு. அதாவது இந்த வருசம்  

இந்த வருசம் கொஞ்சம் கட்டுப்பாடுக தளத்துன வன்ன பழனி போறதுன்னு முடிவாச்சு... டிக்கெட்டைப்போட்டுட்டு எல்லாரும் கெளம்பி பழனிக்குபோனாக....

அங்க அடிவாரத்துலயே ரூமைப்போட்டுட்டு கெளம்பும்போது  மககாரி சொன்னா எனக்கு ஒரு வேண்டுதல் இருக்கு ந்னா...என்ன ந்னு கேட்டப்ப நான் முடி எடுக்குறதா வேண்டிக்கிட்டேன். அவளுக்கு அவ்வளவா முடி கெடையாது ஆனா அவளோட அம்மாவுக்கு இடுப்பு வரை முடி அழகா இருக்கும்

எப்பப்பாத்தாலும் அவளுக்கு அம்மா முடிமேல பொறாம. எப்புடிம்மா ஒனக்கு மாத்திரம் முடி இம்புட்டு நீளமா இருக்குன்னு ஆசையா அதைத்தடவிக்கிட்டே கேப்பா

அப்ப அம்மா சொல்லுவா இது எங்கம்மா எனக்குக்குடுத்த சீதனம். சின்ன வயசில இருந்தே அதுக்கு நீலி பிருங்காதி தைலம் அப்புறம் தேங்கா எண்ணையில வெட்டிவேருன்னு போட்டு இதே சோலியா எனக்கு எங்க அம்மா வளத்துச்சு....

வெள்ளிக்கெழம எண்ணதேச்சுக்குளிப்பாட்டி முடிய உலத்தி அதுக்கு சாம்பிராணி போட்டு காயவைச்சி சளிப்பிடிக்காம இருக்க அதுக்கு கசாயம் குடுத்து காப்பாதுன முடின்னு சொல்லுவாக அம்மா

அப்புறம் எனக்கு ஏன் அப்புடி நீ செய்யலன்னா அதுக்குச்சொன்னா இந்த ஊருதண்ணில மருந்து போடுறாக அதுல எல்லாருக்கும் முடி கொட்டுது. எனக்கே நீ பொறக்குறதுக்கு முன்னாடி மொழங்காலத்தொடும் கொட்டுனது போக மீதி இருக்குறதுதான் நீ இப்பப்பாக்குறதுன்னா...

சரின்னு சொல்லிட்டு மக முடி எடுக்க ஒக்காந்து முடிஎடுத்தா.... அவ தலையில முடி எடுத்து குளிச்சிட்டு சந்தனம் பூச அண்ணன் கூப்புட்டுபோனான்,
போய்ட்டு வந்தவன்ன அம்மாவைப்பாத்து த்தான் ஆடிப்போயிட்டா.

அம்மா தலமுடிய எடுத்து மொட்டையா நின்னா.... அவளோட அழகான முடி தரையில கெடந்துச்சு.... மொட்டையெடுத்து அம்மா நின்ன கோலத்தைப் பாத்து அவளுக்கு அழுகையே வந்துருச்சு....

ஏம்மா இப்புடிபண்ணிட்ட ஏன் முடி எடுத்தன்னு கேட்டப்ப அம்மா சொன்னா உனக்காகத்தான் மா....உனக்கு உடம்பு சரியில்லாதப்ப நான் வேண்டிக்கிட்டது அப்ப சொல்லக்கூடாது வேண்டுதல் பலிக்காது அதான் சொல்லலன்னா...

என் மக உசிறுக்கு முன்னாடி இது ஒண்ணுமே இல்ல எல்லாம் உனக்கான்னா....

தரையில விழுந்து கெடந்த அந்த அழகான நீளமான முடியப்பாத்து அவளுக்கு கண்ணெல்லாம் கலங்கிடுச்சு..... அம்மாவை கட்டிப்புடிச்சு முத்தம் கொடுக்கையில அம்மாவோட நெஞ்ச அவ கண்ணீர் நனைச்சிச்சு.........

நன்றி அ.முத்துவிஜயன்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.