Breaking News :

Friday, July 19
.

வண்டிக்கார அய்யா( சிறுகதை)


அந்தத்தெருவில அவர்வீட்டுல மாத்திரம்தான் ரெட்டைமாட்டு வண்டி இருந்துச்சு. அதுல அவங்களுக்கு ரொம்பப்பெருமை.... அந்த ஊரு ஒரு சின்ன கிராமம். அவங்களுக்கு குலதெய்வம் கோயில் இருக்குறது பக்கத்துல மூணுமைல் தள்ளி இருக்குற ஊருல.

அங்க சாமிகும்புட மத்தவௌகளெல்லாம் நடந்து போனா இவுக வண்டில சாமாஞ்சட்டெல்லாம் ஏத்திக்கிட்டு பொம்பளையாளுகல சின்னப்
புள்ளைகளை ஏத்திக்கிட்டு ஆம்பளைக நடந்து போவாக...

அதுல அவுங்களுக்குப்பெருமை பிடிபடாது அது இம்புட்டுக்கும் மொட்ட வண்டிதான் ஜமீன் வண்டி மாதிரி கூட்டு வண்டியெல்லாம் கெடையாது. இருந்தாலும் வண்டி அவுங்க கிட்டமாத்திரம்தான் இருந்ததுனால பெருமையாரையும் அதுல ஏத்தமாட்டாங்க.

வெவசாயத்துக்கும் வியாபாரத்துக்கும் அதைப் பயன்படுத்துனாங்க. வாடகைக்கும் ஓட்டுவாங்க. அந்தகாலத்துல வண்டிகட்டி பொண்ணு பாக்கபோனா ஒரு பெருமை...

ஒழவு காலத்துல ஏருல பூட்டி உழுகுறத்துக்கும் பரம்படிக்கிறத்துக்கும் நாத்து கீத்து அப்புறம் களத்துல இருந்து நெல்லு கொண்டாற நெல்லு அரைக்க கொண்டுபோய் விக்க எல்லாத்துக்கும் அந்த மாடுகதான்....அந்த அய்யா வயல்லயும் வண்டிலயும் தான் கெடப்பாரு அதுதான் அவருக்கு உசிறு....
மத்த வேலைகளுக்குக்கெல்லாம் பிள்ளைகளை அனுப்பிடுவாரு வயல் வெவசாயம் மாட்டுவண்டி மாடுகதான் அவர்பொழப்பு.

அந்தவண்டிக்கு இப்ப இருக்குற மாதிரி கீரீஸ் எல்லாம் கிடையாது. அதுக்கு வண்டிக்காரய்யா மசகு தயார் பண்ணுவாரு சக்கரத்துல போடுறதுக்கு. வைக்கல சரியான பதத்துல எரிச்சி சாம்பலாகம ஒரு பதத்துல எடுத்து அதுல வெளக்கெண்ணெய் கலந்து அப்படியே மண்சட்டில போட்டு நைசா பிசைஞ்சு தயார் பண்ணு வாரு... அதுதான் கீரீஸ்.....

அப்புறம் மாட்டுக்கு லாடம் கட்டுறது ஒரு வேலை . அது ஒருநாள் பெரிய திருவிழாமாதிரி ந்டக்கும். நாங்க சின்னபுள்ளைக மாட்ட படுக்கவைச்சி காலெல்லாம் கட்டிப்போட்டு லாடம் அடிக்கிறவரு அதுக கால்ல இருக்குற பழைய லாடத்தை கழட்டும் போது மாடுக கத்தும் அதுக கண்ணுல கண்ணீர்வரும்.

வண்டிக்கார அய்யா அதுக தலைய த் தடவிக்குடுத்துட்டு சும்மா இருறா இப்ப முடிஞ்சிடும்ன்னு பேசிகிட்டு இருப்பாரு. அப்ப மாடுகளைப்பாத்து அவரு கண்ணும் கலங்கும்

அதுக்கப்புறம் நாலு கால்லயும் புதுலாடம் அடிக்கிறப்ப மாடுக உச்ச கட்ட சத்தத்துல மா மா ந்னு கத்தும் அப்ப எங்களுக்கெல்லாம் ரொம்ப பாவமா இருக்கும் ஆனா அய்யா கண்ண மூடிக்குவாரு....அவர் கண்ணுலயும் கண்ணீர்வரும்...

நாங்க கேப்பம் ஏன் அய்யா இப்புடிக் கொடுமை பண்ணுறீங்கன்னு கேப்போம் . அப்ப சொல்லு வாரு நாம செருப்புப்போட்டு நடக்குறோமில்ல அது மாதிரிதான் மாட்டுக்கு லாடம் கட்டுறது அப்பத்தான் நடக்கும்போது வலிக்காது மாடுகளுக்குன்னு சொன்னாரு

நான் ரொம்ப புத்திசாலித்தனமா பேசாம அதுகளுக்கும் செருப்புப்போட்டுவிடலாமே ஏன் இப்படிக்கொடுமை பண்ணுறீங்கன்னு கேட்டேன்....

அவர் போடா வெவரம் தெரியாமப் பேசாத.... மாட்டுக்கு செருப்பெல்லாம் இன்னும் யாரும் கண்டுபிடிக்கலன்னாரு .

அப்ப மொதல்ல விஞ்ஞானி ஆகி அதைத்தான் கண்டுபிடிக்கனும்ன்னு நெனச்சிக்கிட்டேன்...

சாயங்காலங்கல்ல மாட்டுவண்டி எங்களுக்கு ஏத்தலக்கா எறக்கலக்கா ( இப்போதய சீ சா) ஏற்ற இறக்கப்பலகை யாயிடும் .

ரெண்டுபக்கமும் ஒக்காந்து ஏத்தலக்கா எறக்கலக்கா வெளையாடுவோம்... அய்ய பாத்தா திட்டுவாரு நல்ல இருக்குறத ஒடைச்சிடாதீங்க புள்ளைகளான்னு வெரட்டுவாரு..

இப்புடி வெளையாடும்போது ஒரு நாள் மேல இருக்குறவன் தவறி கீழ விழுந்து தலையில அடிபட்டுடுச்சு.. ஒரே ரத்தம் ஏன்னா கீழ இருக்குறவன் சொல்லாம கொள்ளாம எறங்கிட்டான்....

அப்புறம் அவன் தலையில காப்பித்தூளக் கொண்டாந்து அமுக்குனாக . ரத்தம் கசியிறத க் கட்டுப்படுத்த,,,,,

எல்லார் வீட்டுலயும் தைப்பொங்கல் கொண்டாடுனா வண்டிக்கார அய்யா வீட்டுலமாத்திரம் மாட்டுப்பொங்கல் மாட்டுகொட்டாயில கொண்டாடுவாக .
அப்ப மாடுகளைக்கம்மாயில் கொண்டுபோய் குளிப்பாட்டி கொம்புகளுக்கு பெயிண்ட் அடிச்சி மாலை கழுத்துல சலங்கை எல்லாம் கட்டி அழகு பாப்பாரு...

அதுக தலை அசைக்கும் போது சலங் சலங் ந்னு சத்தம்வரும். அப்ப சின்னபுள்ளைகளை கூப்புட்டுபோய் சாப்புடச்சொல்லுவாறு அய்யா
அப்புடிசாப்புட்ட எலைய எடுத்து மாட்டுக்குபோடுவாரு
அதுகளுக்கு பொங்கல் ஊட்டி விடுவாரு. அவரைத்தவிர யார் பக்கத்துல போகமுடியாது,,,, முட்டுங்க அதுகஅந்த வண்டிக்கு பலவேலை உண்டு.அன்னிக்கி இப்புடித்தான் ஒருந்தன் பக்கத்துல இருந்த கெணத்துல விழுந்து நல்லா தண்ணியக் குடிச்சுபுட்டான் .

ஒடனே அவனக் காப்பாத்தி கொண்டாந்து இந்த வண்டிய ஒரு பக்கமாகக் கவுத்து சக்கரத்துல வைச்சி சுத்துனாக... அவன் தண்ணிய கொஞ்சம் கொஞ்சமாக்கக்கி பொழைச்சிகிட்டான்.... அன்னிக்கி எல்லாரும் ஒரு வண்டி இருக்குறது நல்லதாப்போச்சுன்னு பேசிக்கிட்டாங்க.

அதே மாதிரி ராத்திரி கண்டநேரத்துல ஆருக் காவது முடியலன்னா ஒடனே அந்த மாட்டு வண்டிதான் ஆளைக்கொண்டுபோய் டவுனுக்கு காப்பாத்தும்...
அதுக்குன்னு லாந்தர் லைட் எல்லாம் வைச்சி ருப்பாரு வண்டிக்காரய்யா.... ரொம்பநாளைக் கப்புறம் அந்த ஊருக்குப்போனேன்....

அங்க வண்டியவும் காணோம் மாட்டையும் காணோம்.... வண்டிக்காரய்யாவும் இல்ல.

அவரோட மகனுக கிட்டக் கேட்டேன்

ஒனக்கு விசயம் தெரியாதா.....அய்யா கொஞ்ச நாளைக்கி முன்னாடி இறந்துபோனாரு அவருக்கு வயசு 80 பாவம் ராத்திரி படுத்தவரு காலையில எந்திரிக்கல....

இதுல முக்கியமான விசயம் அந்த மாடுக ரெண்டுக்கும் அவர்தான் தண்ணி வைப்பாரு. வேற ஆருவைச்சாலும் குடிக்காதுக. அதுனாலயே அவர் எங்கயும் போகமாட்டாரு. எங்களைத்தான் போகசொல்லுவாரு. அவருக்கு மாடுகதான் உசிறு

அவர் போனப்புறம் ரெண்டு மாடுகளும் தண்ணியே குடிக்கல. என்னவைச்சாலும் மோந்துகூடப்பாக்கல. யார் யாரோ வைச்சிப்பாத்தோம் தொடக்கூட இல்லை... நாளுக்கு நாள் மெலிஞ்சி எலும்பும் தோலுமா ஆகிறதைபபாக்க சகிக்கல

எங்களுக்கும் என்ன பண்ணுறதுன்னு தோணலை... ஒருநா ரெண்டும் செத்துப்போச்சுக... அதுகளை கொண்டுபோய் எங்க தொழுவத்தில அடக்கம் பண்ணி மனுசனுக்குமாதிரி மரியாத செஞ்சோம்  அத்தோட வண்டியையும் வித்துட்டோம்... னு

சொல்லிட்டுவீட்டுக்குள்ள வாங்களேன்னு

கூப்புட்டாங்கஉள்ளாறவண்டிக்காரஅய்யாபடத்துக்குப்பக்கதுல வண்டிமாடுபோட்டோவும் இருந்துச்சு ரெண்டுக்கும் மாலை போட்டபடி
பாவம் அதுக அய்யாமேல அம்புட்டு பாசம் வைச்சிருந்துருக்குதுக ன்னு சொல்லி கண்ணதொடைச்சிக்கிட்டாரு

நானும் கண்ணதொடச்சிக்கிட்டேன்.....

அது ஒரு நெஞ்சார்ந்த உறவு இந்த மண்ணோட பெருமை.... மாட்டையும் உறவா மனுசனா பாக்குற   மனிதாபிமானம்......

நன்றி:  அ.முத்துவிஜயன்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.