Breaking News :

Friday, July 19
.

வளைகாப்பு - சிறுகதை


எப்பவும் போல தாமதமா ஆடி அசைந்து வருது அந்த ஊருக்கு வர்ற ஒத்த டவுன் பஸ்.புழுதியோடு வந்து நின்ன பஸ்ல இருந்து தண்டபாணி ஜோசியர் இறங்கி வேட்டிய இழுத்து பலமா கட்டிட்டு ஊருக்குள்ள வேகமா நடந்து வர்றாரு.அவர பாத்த டீக்கடை முருகன் "என்ன தண்டபாணி இந்த பக்கமா கூட திரும்பாம அம்புட்டு வேகம்?"என்றதும் "முருகன் பர்வதம் வீட்ல இன்னைக்கு நல்லது பேசுறாக.நாள் குறிக்க தான் போறேன்.எழவு,திருவிழான்னு ஒன்றரை வருஷம் ஓடி போயிருச்சுல்ல.இந்த தடவ முடிஞ்சிரும் "என்றவாறு வேகமா நடந்தார் .

                     தண்டபாணி வந்து சேர்றதுக்கு முன்னாடியே சொந்தம் வந்து முழுவதும் சபை நிறைஞ்சு நிக்குது .தண்டபாணி பஞ்சாங்கத்த எடுத்து விரல்ல விட்டு எண்ணி மனசுக்குள்ள கூட்டி"வர்ற மாசம் கடைசில நல்ல முகூர்த்தம் வருது.தவறவிட்டா நடுவுல ஒரு மாசம் எதுவும் பண்ண முடியாது.தள்ளி போன காரியம் நாள் கடத்தாம இந்த மாசத்துல முடிச்சிருங்க"என்றதும் பர்வதம் "அதுவும் சரி தான் அம்புட்டு சொந்தமும் மூணு ஊர சுத்தி தான் கிடக்கு.வெத்தலைய வச்சு அழைச்சிருவோம்"என்றதும் தண்டபாணி நூறு ரூபாய் தாளோடு வயிறு நிறைய சாப்பிட்டுட்டு சந்தோசமா கிளம்பிட்டார் .

                      முருகேசனும்,கோசலையும் அவர்களோட இரண்டு பையனுக மாரிமுத்து,செல்வம் இரண்டு பேரும் சாப்பிட்டுட்டு அவுக வீட்ட பாத்து நடக்கும் போது முருகேசன் "டேய் பயலுகளா நமக்கு இனி நாள் இல்ல .இரண்டு பேரும் திசைக்கு ஒருத்தரா போய் வெத்தலை பாக்கு வச்சு அழைச்சிரணும்.நானும் அம்மாவும் நெருங்குன சொந்தங்கள அழைக்க போறோம் .பெரிய கோயில்ல சொல்லி வச்சிரணும்.சமையலுக்கும் சொல்லி புடணும்.விளக்கு,மைக் செட்டு உங்க பொறுப்பு தான்.இந்த கழுதைய எப்படியாவது கரையேத்தி விட்டா அப்புறம் உங்களுக்கு நிம்மதி தான்."என்றார்.வீடு வந்து சேர்ந்ததும் தந்தையும் மகன்களும் படுத்துவிட்டார்கள்.கோசலை மட்டும் உள்ளே மகளை தேடி போனாள் .அங்கே கற்பகம் மங்சள் கலர் புடவைய விரிச்சு படுத்துகிட்டு அழுதுட்டு இருந்தா.கற்பகத்த தூக்கி தன்னோட மடியில வச்சுகிட்ட கோசலையோட கண்ணுல இருந்தும் கண்ணீர் தானாய் வழியுது .அந்த மங்சள் புடவைய பாத்தா உசிரு வரை உருகுது.

                      தேனம்மா தான் முருகேசனோட மூத்த பொண்ணு.அடுத்தவ கற்பகம் .அப்புறம் தான் இரண்டு பயலுக பிறந்தானுக.முருகேசன் கொத்தனார் வேல பாக்குறார் .வர்ற வருமானம் சாப்பாட்டுக்கே பத்தல அதனால கோசலையையும் கையோட சித்தாள் வேலைக்கு கூட்டிட்டு போயிடுவார் .தேனம்மா தான் மூணு புள்ளைகளையும் பாத்துகிடணும்.முருகேசனுக்கு ஆம்பள புள்ளைக மேல தான் உசிரு .எதுவா இருந்தாலும் முதல்ல அவனுகளுக்கு போக மிச்சம் தான் பெண் பிள்ளைகளுக்கு.சின்ன சின்ன சேட்டை செஞ்சா கூட புள்ளைகள அடிச்சு புடுவாரு.தேனம்மாவுக்கு அப்பாவ கண்டாலே பயம் .அவள அஞ்சாவது வரைக்கும் தான் படிக்க விட்டாரு.கற்பகம் எட்டாவது வரை போனா .தேனம்மா வயசுக்கு வந்த பிறகு அவளையும் வேலைக்கு இழுத்துட்டு போனாரு .கற்பகம் வீட்ட பாத்துக்க ஆரம்பிச்சா.

                       தேனம்மா மெலிஞ்சு கிடந்தாலும் சிரிச்சா அழுகு சிலை தான்.மாநிறமான தேகம் .அமைதியான குணம்.வீட்டுக்கு பொறுப்பானவ.இவுங்க உழைப்புல பயலுக படிச்சுட்டு இருந்தானுக.தேனம்மா கூட பொறந்தவங்க மேல உசிரா கிடப்பா .அம்மா கொடுக்குற சில்லறைய முந்தானைக்குள் பத்திரமா வச்சிருந்து வேல முடிஞ்சு வரும் போது தின்பண்டம் வாங்கியாந்து தருவா .அவள ஒரு தடவ விசேஷத்துல பாத்த பர்வதம் அவள பொண்ணு கேட்டு வந்து நின்னா .பர்வதம் மகன் குமரவேல் பஞ்சுமில்லுல வேல பாக்குறான்.பர்வதம் வட்டிக்கு விடுற ஆளு.அவளோட புருஷன் கர்ணன் தான் வட்டி வசூல் பாத்துக்குவான்.நகை நட்டு எதுவும் அதிகமா வேணாம்னு சொல்லவும் .முருகேசன் சம்மதிச்சார்.ஊர் கூடி நடந்த கல்யாணம்.குமரவேலும் நல்ல பையன் தான்.சிவாஜி படம் வந்தா தேனம்மாள சைக்கிள்ல வச்சுட்டு கிளம்பிருவான்.வேலைவிட்டு வரும் போது அவளுக்கு பிடித்த மிட்டாயும்,பலகாரமும் வாங்கியாருவான்.அவன் சைக்கிள் பெல்லு சத்தம் கேட்டா தேனம்மா முல்லையா மலர்ந்திருவா.தேனம்மாள நல்ல முறையில பாத்துகிட்டான்.இத்தனை வருஷம் கஷ்டப்பட்டாலும் இப்போ நல்ல வாழ்க்கை தான் வாழ்ந்துட்டு இருந்தா.

                       தேனம்மா மூணாவது மாசமும் வீட்டுக்கு தூரம் ஆனதும் பர்வதம் குணம் மாற ஆரம்பிச்சது .அடுத்தடுத்த மாசமும் அவ தூரமாக ஜாடையா பேசிட்டு இருந்தவ நேரடியா குத்தலா பேச ஆரம்பிச்சா .முருகேசன் வந்தா தேனம்மா மேல குத்தமா பாட ஆரம்பிச்சா .இந்தா இந்தான்னு வருஷம் ஓடி போயிருச்சு .தேனம்மா கோயில் கோயிலா போயி தொட்டில் கட்டுனா.எல்லா நாட்டு மருந்தும் சாப்பிட்டுட்டு தான் இருந்தா.பர்வதம் கண்ணுல பட நடமாட முடியாது.ஒரு வாய் சோறு நிம்மதியா திங்க முடியாது.வார்த்தையால கொன்னு புடுவா மனுஷி.குமரவேல் ஆரம்பத்துல பர்வதம் பேசினா எதிர்த்து பேசுவான் .இப்போ எதுவுமே கண்டுகறது கிடையாது.ராத்திரில மட்டும் பத்து நிமிஷம் உறவாட வருவான் .முடிஞ்சதும் தள்ளி போயிருவான் .நல்லது கெட்டதுக்கு போக முடியல .எங்க போனாலும் இதே கேள்வி தான்.பிள்ளைக  இருக்கா?உடம்பு கூசி போயிருது .

                     குழந்தைன்னா உசிரு தேனம்மாளுக்கு.மூணு புள்ளைகள மடியிலே போட்டு வளத்தவ.பக்கத்து வீட்டு குழந்தைங்க கூட தேனம்மாவ தேடி வரும்.அவளோட வயித்தை தடவி பாத்து அழுகாத நாள் இல்ல.ஒரு தடவை பக்கத்து வீட்டு குழந்தைக்கு உடம்பு சரியில்லாம இருந்தது.அப்போ இவ வீட்டுக்குள்ள வந்து ஜன்னல் பக்கமா பாக்குறா பக்கத்து வீட்டுகாரி இவளோட காலடி மண்ண எடுத்துட்டு போறா புள்ளைக்கு சுத்தி போட.தேனம்மா உடைஞ்சு போயிட்டா .

                       முருகேசன் அவரோட குடும்பத்தோட தேனம்மா வீட்டுக்கு வந்தார் .பர்வதம் "சுத்தி வளச்சு பேச விரும்பல .இனியும் உங்க மகளோட மடி நிறையும்ன்னு நம்பிக்கை இல்ல.அது தருசு நிலம்.மலடு தட்டுனவ.என் குடும்பத்துக்கு வாரிசு வேணும்.ஒண்ணு உங்க இரண்டாவது மகள கெட்டி கொடு.இல்ல இந்த மலடிய அத்துகிட்டு போயிரு .என் மகனுக்கு பொண்ணு கொடுக்க தவம் கிடக்காங்க"என்றதும் முருகேசன் அமைதியா "உங்க முடிவு தான் ஏன் முடிவும் .நாள் பாருங்க .சின்னவள முடிச்சிருவோம் "என்றதும் தேனம்மா முடியை இறுக்கி கட்டிட்டு வந்து "என்னப்பா பண்றீங்க ?இங்க வந்து நான் படுறது பத்தாது என் கூட பொறந்த பாவத்துக்கு அவளும் அனுபவிக்கணுமா?நான் ஒத்துக்க மாட்டேன்.என் புருஷனுக்கு இன்னோரு கல்யாணம் பண்ண விட மாட்டேன்.எனக்கு புள்ளை கண்டிப்பா பொறக்கும் எனக்கு தோணுது .இந்த பேச்ச இதோட விட்டுட்டு கிளம்புங்க "என்றதும் பர்வதம் கொதித்து போனாள் .

                   இத்தன நாள் ஒத்த வார்த்தை கூட எதிர்த்து பேசாத தேனம்மா இப்போ பேசுனது பர்வதத்துக்கு சுத்தமா புடிக்கல .பர்வதம் குமரவேல பாத்து"இந்த மலட்டு சிறுக்கி உனக்கு வேணுமாடா?"என்றதும் அவன் "வேண்டாம்"என்று தலையசைத்தான் .பர்வதம் தேனம்மா முடியை கொத்தாய் பிடிச்சு வாசலுக்கு இழுத்துட்டு வந்து தள்ளி விளக்கு மார வச்சு அடி அடின்னு அடிச்சா .அசிங்க அசிங்கமா திட்டுனா .தெருவே கூடி போச்சு .முருகேசன் தன்னோட செருப்பை எடுத்துட்டு வந்து தேனம்மாள அடிக்கிறாரு.கோசலை மட்டும் தடுக்குறாங்க.அவளுக்கும் அடி விழுது.பயலுக அம்மாவ மட்டும் இழுத்துட்டு போறானுக அவுங்க வீட்டுக்கு.பர்வதமும்,முருகேசனும் கை ஓஞ்சு போய் நிறுத்திட்டாங்க .முருகேசன் தேனம்மா எட்டி உதைச்சு "எங்காவது தொலைச்சு போயிரு .கூட பொறந்தவளாவது நல்லா இருக்கட்டும் "என்றதும் தேனம்மா திரும்பி பார்த்தாள் .முகம் எல்லாம் வீங்கி கிடந்தது .ஜாக்கெட் கூட கிழிந்து இருந்தது.அவள் சிலை மாதிரி இருந்தாள் .குமரவேல் போய் தாலியை அத்து எடுத்துகிட்டான் .பின்பு மெதுவா சிரிக்க ஆரம்பித்தாள் அப்புறம் பலமா எல்லோரையும் பாத்து சிரிச்சுட்டு நடந்து போயிட்டா.அவள யாரும் தடுக்கல.அப்புறம் தேடவும் இல்ல.குமரவேல் அப்பா மாரடைப்புல சாக கல்யாணம் தள்ளி போச்சு .அப்புறம் ஆடி மாசம்,ஊர் திருவிழான்னு கல்யாணம் தள்ளி போய் இப்போ தான் தேதி குறிச்சிருக்காங்க.

                    தேனம்மா ஏதோ ஒரு பஸ்ல ஏறி ஒரு ஊர் வந்து சேர்ந்துட்டா .வந்து இறங்குன பஸ் ஸ்டாண்ட் தான் அவளோட வீடு.சில சமயம் ஊர் சாவடில படுத்துக்குவா .யாரு கூடவும் பேச மாட்டா .பாவப்பட்டு கொடுக்குற சாப்பாட்டையும் துணிய மட்டும் தான் வாங்கிக்குவா.காசு கொடுத்தா வாங்க மாட்டா.ராத்திரி பொழுதுல ஊர் குளத்துல குளிச்சிக்குவா.குழந்தைகள பாத்தா மட்டும் தான் சிரிப்பா . குப்பையில கிடக்குற பொம்மைகள பொறுக்கிட்டு வந்து வச்சுக்குவா.சில சமயம் கதறி அழுவா.அந்த ஊருக்கும் அவள பழகி போயிருச்சு .ஒரு நாள் ராத்திரில அசந்து தூங்குறா.அப்போ அவ மேல எதுவோ ஊர்ந்து போற மாதிரி இருக்கு.உதறி எழுந்திருக்க முடியல.துணிய வச்சு வாய மூடுறாங்க.அவளோட சேலைய தூக்கிட்டு யாரோட இருட்டுல மிருகம் மாதிரி அவள சீரழிக்குறான்.நகர முடியல கத்த முடியல கண்ணு மட்டும் கலங்குது.அவன் வேல முடிஞ்சதும் இருட்டுல மறைஞ்சுட்டான்.மார்பும்,உயிர் உறுப்பும் நெருப்பு பட்டமாதிரி எரியுது .அவ அசையாம கிடக்கா மெதுவா போய் குளத்துல குளிச்சிட்டு வந்து படுக்குறா.அங்க வெத்தலை பாக்கு எச்சில் கிடக்கு.வந்த ஆள அவளுக்கு இப்போ தெரியுது.பெட்டிக்கடைகார அய்யாவு தான்.அந்தாளுக்கு எப்படியும் ஆறு வயசு இருக்கும்.காலையில அந்த ஆள் கொடுத்த சாப்பாட்டுக்கு  ராத்திரி அவளையே எடுத்துகிட்டான்.காலையில அய்யாவு எதுவுமே நடக்காதது போல சாப்பாட்டை அவளை கூப்புட்டு கொடுத்தார் .

                     இந்த கஷ்டம் இதோட முடியல .ஆளுக மாத்தி மாத்தி வந்துகிட்டே இருந்தானுங்க .போதைகாரன்,பிச்சைக்காரன் ,கடைக்காரனுங்கன்னு வந்துகிட்டே இருந்தானுங்க .அவளும் எதிர்ப்பு காட்டல .எதிர்ப்பும் காட்டவும் தோணல.எதுக்கும் உதவாத உடம்பு இத்தனை பேருக்கு தேவைபடுது.ஆசைக்கும்,அவசரத்துக்கும் இந்த உடம்பு பல பேருக்கு தேவைப்படுது போல.அவளோட பேர் கூட யாருக்கும் தெரியாது ஆனா அந்த உடம்பு மட்டும் தேவைப்படுது .அவ எல்லா ஆம்பளைகளையும் பாத்து பலமா சிரிச்சா .உலகமே உறையும் படி சிரிச்சா.அது சிரிப்பு இல்ல சாபம்.

                       விடிஞ்சா கல்யாணம் சொந்த பந்தம் எல்லாம் கோயில் மண்டத்துக்குள் வந்தாச்சு.ஆம்பளைக கூட்டம் சீட்டு கட்டுல உக்காந்தாச்சு.பொம்பளை கூட்டம் எல்லாம் நாலு கெடாவுக்கு தகுந்தமாதிரி பூண்டு ,வெங்காயம் உரிக்குறாங்க.பர்வதம் சுருக்கு பை பணத்த தனியா உக்காந்து எண்ணிக்கிட்டு இருக்கா .கோசலையும் ,கற்பகமும் ஓரமா படுத்து கிடக்காங்க .ராத்திரி வர்ற சொந்தகாரங்க எல்லாம் சாப்புட்டுகிட்டு இருக்காங்க .மாரிமுத்துவும், செல்வமும் பரிமாறிட்டு இருக்காங்க .குமரவேல் மில்லுல வேல செய்ற பசங்களோட பேசிக்கிட்டு இருக்கான் .

                        அந்த சமயம் பந்தி வைக்குற இடத்துல ஏதோ சத்தம் கேக்குது.கூட்டம் சேருது .பர்வதம் எழுந்து போய் பாக்குறா .நடு பந்தியில ஒத்த ஆளா நிறை மாச கர்ப்பத்தோட உக்காந்து தேனம்மா சாப்பிட்டுட்டு இருக்கா .ஊரே அசந்து நிக்குது .யார பத்தியும் கவலையில்லாம தேனம்மா அன்னைக்கு மனமாற சாப்பிட்டுட்டு இருக்கா .எவ்ளோ பசியோ தெரியல வயிறாற சாப்புடுறா.கண்ணுல தண்ணீர் மட்டுமா வழியாமல் தேங்கி நிக்குது .யார்கிட்ட இருந்தும் சத்தம் வரல.பர்வதம் உசிர் இல்லாம கிடக்கா .குமரவேல் தலைகுனிஞ்சு நிக்குறான் .முருகேசன் தடுமாறி கிடக்காரு.

                    சாப்புட்டு எழுந்து சாப்புட்ட கைய சேலையில் துடைச்சுகிட்டு தேனம்மா நடந்து போகும் போதும் யாரும் தடுக்கல .அப்போது கோசலையும்,கற்பகமும் ஒடி வந்து தேனம்மா கால்ல விழுந்தாங்க.தேனம்மா சிரிச்சா.கோசலை"என் வீட்டு குல தெய்வமே கூட பொறந்தவ வாழ்க்கை அழிய கூடாதுன்னு திரும்பி வந்தியா சாமி.என்னை பெத்த தெய்வமே"என்றதும் முருகேசன் கூனி குறுகி நின்றார் .கோசலை சீர் தட்டில் இருந்த வளையலை எடுத்து தேனம்மா கையில் போட்டார் .கற்பகமும் போட்டாள் .ஒவ்வோரு பெண்ணாக வந்து வளையல் போட்டார்கள்.கோசலை மகள்களை வாரியணைத்து அழைத்து கொண்டு புறப்பட்டாள் .

                   தெருமுனையை தாண்டும் போது பர்வதம்"அய்யோ குமரவேலு இப்படி பண்ணிகிட்டயே?இனி நான் என்ன பண்ணுவேன் ?"என்று அலறும் குரல் கேட்டது .
                          (முற்றும்

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.