Breaking News :

Thursday, January 23
.

திருப்பாவை பாடல் 28


கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்

அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை

பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்

குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு

உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை

சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே

இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

 

பொருள் :

 

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனே, நாங்கள் கறவை மாடுகளின் பின்னே சென்று, மேய்ச்சல் தொழிலை செய்து, அந்த மாடுகள் தரும் பாலை கொண்டு உணவு செய்து சாப்பிட்டு வளர்பவர்கள். எங்களுக்கு உலக ஞானம் போன்ற எந்த அறிவும் கிடையாது. ஆனால் ஆயர்குலத்தில் பிறந்த உன்னை போற்றி, படிந்தால் மிகப் பெரிய புண்ணியம் சேர்ந்து, வைகுண்ட பதவி உறுதியாக கிடைக்கும் என்று தெரியும். உன் மீது கொண்ட அதிக பக்தியின் காரணமாக உன்னை உறவென்று நினைத்து உன்னை மரியாதை குறைவாக கண்ணா, மணிவண்ணா என பெயர் சொல்லி அழைத்திருப்போம். அதற்காக எங்கள் மீது கோபம் கொள்ளாதே. ஏதும் அறியாத சிறு பிள்ளைகள் நாங்கள். எங்களின் பிழைகளை மன்னித்து, உன்னுடைய அருளை எங்களுக்கு வழங்கிட வேண்டும்.

 

விளக்கம்: 

 

குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட் டது போலவும் தோற்ற மளிக்கிறது. அவனுக்கு என்ன குறை? ராமாவதாரத்தில், ராமபட்டாபிஷேகம் நடந்த போது, இந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ் ஞர், கவுதமர், விஜயர் என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட்டார். ராமனுக்கு இது ஒரு குறை. இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்து ஜெயித்தோம். அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே! அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே! அவனோடு நம்மை ஒப்பிடலாமா? என்ற குறை இருந்ததாம். கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் சீற்றமடைந்து மழை பெய்யச் செய்தான்.

 

 கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்த கண்ணனின் காலில் அந்த இந்திரன் விழுந்தான். ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால், ஆயர்குலப் பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.