மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
பொருள்: மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய்.வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.
விளக்கம்:லஷ்மி நரசிம்மரை மனதில் கொண்டு கோதை பாடிய பாசுரம் இது. பெரியாழ்வாரும் கோதையும் சிறந்த லஷ்மி நரசிம்ம பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கண்ணனின் நடையானது ஒரு எருதின் வீறும், ஒரு யானையின் மதிப்பும், ஒரு புலியின் சினமும், ஒரு சிங்கத்தின் தேஜஸும் ஒருங்கே கொண்ட நடை! கண்ணனது சிம்மாசனமானது "கோப்புடையது" மிக்க பெருமைக்குரியது. ஏன் ? அந்த சிம்மாசனம், தர்மம், அதர்மம், ஞானம், அஞ்ஞானம் என்று அனைத்தையும் சட்டம் கட்டி கண்ணனால் சாதுர்யமாக அமைக்கப்பட்டது. அது அவன் மட்டுமே அமரவல்ல சிம்மாசனம். அதில் அமர்ந்தே, கண்ணன் அடியவரின் குற்றம் குறைகளை ஆராய்ந்து அருள் வழங்குவதே அவனது தகுதிக்கு ஏற்புடையதாக இருக்கும்எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு...என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் சொல்ல வேண்டும். இதைத்தான் ஆயர்குலப் பெண்கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டது என்ன? அந்தக் கண்ணனையே கேட்டார்கள். அவனோடு கலந்து விட்டால் சோறு எதற்கு? வாகனம் எதற்கு? இதர வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அவனையே கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள்.