ஆத்மானந்தா தனது மூத்த சீடர்களான அருளானந்தா, அன்பானந்தா ஆகிய இருவரையும் தனியே அழைத்தார்.
"எனக்கு வயதாகக் கொண்டிருக்கிறது. எனக்குப் பிறகு இந்த மடத்துக்குத் தலைமை தாங்கி நமது ஆன்மிகப் பணிகளைத் தொடர்ந்து செய்ய பொருத்தமான ஒரு நபரை நியமிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த மடத்தில் இருக்கும் துறவிகளுக்குள் நீங்கள் இருவரும்தான் மூத்தவர்கள்.
அதனால்தான் உங்களிடம் இதை முதலில் சொல்ல வேண்டும் என்று உங்களை அழைத்தேன். எனக்குப் பிறகு இந்தப் பீடத்தின் தலைமைப் பதவிக்குப் பரமானந்தாவை நியமிக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"
இருவருமே பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தனர்.
அன்று இரவு ஆத்மானந்தரை அன்பானந்தா தனியாகச் சந்தித்தார்."ஸ்வாமி, உங்களிடம் ஒரு விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும்" என்றார்.
"சொல் அன்பானந்தா!"
"நீங்கள் என்னுடைய குரு. உங்கள் முடிவுக்கு நான் கட்டுப்பட்டவன். ஆயினும் உங்களுக்கு வாரிசாக, வயதிலும் அனுபவத்திலும் மூத்தவனான என்னை நியமிக்காமல், எனக்குப் பின்னால் இந்த மடத்தில் சேர்ந்த பரமானந்தரை நியமித்தது ஏன் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?"
"அன்பானந்தா, வயது, அனுபவம் இவற்றையெல்லாம் பார்த்துப் பொறுப்புகளைக் கொடுப்பதற்கு இது அரசாங்க அலுவலகம் இல்லை. என் முடிவுக்குக் கட்டுப்படுவதாகச் சொல்லி விட்டு ஏன் இப்படிக் கேட்கிறாய்?"
"என்னிடம் என்ன குறை இருக்கிறது என்று தெரிந்து கொள்ளத்தான்"
"'பரமானந்தரிடம் என்ன விசேஷத் தகுதி இருக்கிறது?' என்று கேட்காமல் 'என்னிடம் என்ன குறை?' என்று நீ கேட்பதிலிருந்து உன்னிடம் ஏதோ குறை இருப்பதாக நீ நினைக்கிறாய் என்று தெரிகிறது. உன்னிடம் இருக்கும் முதல் குறை ஆசை."
"முதல் குறையா? அப்படியானால் என்னிடம் நிறையக் குறைகள் இருக்கின்றனவா?"
"பார்த்தாயா உன்னிடம் பல குறைகள் இருப்பதாக நீயே நம்புகிறாய்! இரண்டு குறைகள் இருந்தால் கூட முதல், இரண்டாவது என்று சொல்லலாமே! சரி. ஆசை என்ற இந்தக் குறை உன்னிடம் இருப்பதை நீ ஒப்புக்கொள்கிறாயா?"
"நான் ஆசை உள்ளவன் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?"
"இந்த மடத்தின் தலைவர் என்ற பதவி உனக்கு வேண்டும் என்ற ஆசையினால்தானே என்னிடம் வந்திருக்கிறாய்?"
"சரி. வேறு என்ன குறைகள் கண்டீர்கள் என்னிடம்?"
"உனக்கு இந்தப் பதவியின் மீது ஆசை. அது உனக்குக் கிடைக்காமல் பரமானந்தனுக்குக் கிடைக்கப் போகிறது என்பதால் அவன் மீது பொறாமை!
"இதவும் உங்கள் ஊகம்தானே?"
"ஒருவரின் பேச்சு, செயல்கள் இவற்றிலிருந்து அவரது மனதில் என்ன இருக்கிறது என்று கணிக்கலாமே! நீயும் அருளானந்தனும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் இந்த மடத்தில் சேர்ந்தவர்கள். அருளானந்தனுக்கு ஏன் இந்தப் பதவியைக் கொடுக்கவில்லை என்று நீ கேட்கவில்லை. ஏன், உனக்கு ஏன் கொடுக்கவில்லை என்று கூடக் கேட்கவில்லை! பரமானந்தனுக்கு எப்படிக் கொடுக்கலாம் என்றுதானே கேட்கிறாய்? அதனால்தான் பொறாமை என்று சொன்னேன்."
அன்பானந்தா மௌனமாக இருந்தார்.
"அன்பானந்தா. உன்னிடம் குற்றம் காண்பதற்காக நான் இவற்றைச் சொல்லவில்லை. இந்தக் குறைகள் உன்னிடம் சமீபத்தில்தான் வந்து சேர்ந்திருக்கின்றன. நான் என் வாரிசாக யாரை நியமிக்கப் போகிறேன் என்று சொல்வதற்கு முன் உன் மனதில் இந்த ஆசை இல்லாமல் கூட இருந்திருக்கலாம். உன்னிடம் இந்த இரண்டு குறைகளுடன் தொடர்புடைய இன்னும் இரண்டு குறைகள் இல்லை. அது குறித்து எனக்கு மகிழ்ச்சிதான்."
"அவை என்ன குறைகள் குருவே?"
"தான் விரும்பியது கிடைக்கவில்லை என்றால் ஒரு மனிதனுக்குக் கோபம் வரும். கோபத்தினால் பிறருக்குத் துன்பம் விளைவிக்கும் செயல்களைச் செய்வான். நீ அமைதியாக இருப்பது உனக்குக் கோபம் இல்லை என்று காட்டுகிறது. நான் உன்னிடம் குறைகள் இருப்பதாகச் சொன்னபோது உனக்கு வருத்தம் ஏற்பட்டதே தவிரக் கோபம் வரவில்லை. நீ துறவு நிலையில் நல்ல முதிர்ச்சி அடைந்திருக்கிறாய் என்பதை இது காட்டுகிறது. ஆசை ஏற்பட்டால், அதிலிருந்து பொறாமை, கோபம், கோபத்தினால் பிறர் மனம் புண்படும்படி பேசுதல் போன்றவை தொடரும். அதனால் நீ ஆசையைக் கைவிட வேண்டும். துறவியான உனக்குப் பற்றற்று இருப்பது ஒன்றும் கடினமான விஷயம் இல்லை."
"நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன் குருவே! என் குறையை நான் உணர்கிறேன். பரமானந்தருக்கு நீங்கள் தலைமைப் பதவி கொடுப்பது பற்றி எனக்கு வருத்தம் இல்லை" என்று எழுந்தார் அன்பானந்தா.
"கொஞ்சம் இரு அன்பானந்தா. நீ இவ்வளவு சீக்கிரம் நான் சொன்னதை ஏற்றுக் கொண்டு உன்னை மாற்றிக் கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நான் பரமானந்தருக்குத் தலைமைப் பொறுப்பை அளிக்கப் போவதில்லை."
"அருளானந்தருக்கு அளிக்கப் போகிறீர்களா? அவர் இதற்கு மிகவும் தகுதியானவர்தான்."
"உன்னுடைய மனமுதிர்ச்சியைப பாராட்டுகிறேன். பரமானந்தருக்கு இந்தப் பதவி இல்லை என்றதும், 'ஒருவேள எனக்குக் கிடைக்குமோ?' என்று ஒரு கணம் கூட நினைக்காமல் அருளானந்தரின் பெயரைச் சொல்கிறாயே!"
"இல்லை குருவே. நீங்கள் எனக்கு இந்தப் பதவியைக் கொடுத்தாலும் நான் இதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஆசையை அடக்குவதில் நான் இன்னும் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும்."
" நீயும் அருளானந்தனும் நல்ல சீடர்கள்தான். உங்கள் இருவரில் ஒருவருக்குத்தான் தலைமைப் பொறுப்பைக் கொடுக்க வேண்டும். பரமானந்தனுக்குக் கொடுக்கப் போவதாகச் சொன்னால் அதை நீங்கள் இருவரும் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் என்று பார்க்கத்தான் அப்படிச் சொன்னேன். அருளானந்தன் இது பற்றி எதுவும் சொல்லவில்லை. என் முடிவை அமைதியாக ஏற்றுக்கொண்டு விட்டான். அதனால் அருளானந்தனுக்குத்தான் இந்தப் பதவியைக் கொடுக்கப் போகிறேன். சிறிது காலம் கழித்து உன்னை நமது மடத்தின் இன்னொரு கிளைக்குத் தலைவராக அனுப்பி விடுகிறேன்."
"நன்றி குருவே. ஆனால் அருளானந்தரின் கீழ் பணி புரிய எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அது என்னை இன்னும் பக்குவப்படுத்தும் என்று நினைக்கிறேன். நான் அவருக்கு உதவியாக அவர் விரும்பும் வரை இங்கேயே பணி புரிகிறேன்." என்றார் அன்பானந்தா.
குறள் 35:
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
பொருள்:
பொறாமை, ஆசை, கோபம், பிறர் மனம் புண்படப் பேசுதல் ஆகிய நான்குக்கும் இடம் கொடுக்காமல் நடந்து கொள்வதே அறம்.