Breaking News :

Saturday, January 18
.

திருக்குறள் கதைகள் - குறள் 28


குணசீலன் ஒரு பதிப்பாளர் அதாவது நூல்களை அச்சிட்டு வெளியிடுபவர். ஒரு நண்பர் மூலம் அவர் அறிமுகம்  எனக்குக் கிடைத்தது.

ஒருநாள் அவர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அவர் தன்னுடைய நூலகத்துக்கு அன்னை அழைத்துச் சென்றார். அவருடைய நூலகத்தில் அவர் வெளியிட்ட எல்லா நூல்களின் பிரதிகளையும் வரிசையாக வைத்திருந்தார். மொத்தம் 247 நூல்களை வெளியிட்டிருப்பதாகச் சொன்னார்.

"தமிழில் இருக்கும் 247 எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு நூல் என்று கணக்கிட்டு வெளியிட்டிருக்கிறீர்கள் போலிருக்கிறதே!" என்றேன் சிரித்துக்கொண்டே.

"நான் இன்னும் நூல் வெளியிடுவதை நிறுத்தவில்லையே! அதனால் என் நூல்களின் எண்ணிக்கை 247ஐத் தாண்டி விடும்!" என்றார் குணசீலன். தொடர்ந்து, "நூல்களின் பெயர்களையும், அவற்றை எழுதியவர்களின் பெயர்களையும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு கேள்வி இருக்கிறது" என்றார்.

"பரீட்சை வைப்பீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் இந்த விளையாட்டுக்கே வந்திருக்க மாட்டேனே!" என்றேன் நான் விளையாட்டாக.

அவர் அறைக்கு வந்து அமர்ந்ததும் என்னிடம் கேட்டார் "இத்தனை நூல்களைப் பார்த்தீர்களே, அவற்றில்  உங்களுக்கு நினைவிருக்கும் நூல்களின் பெயர்களையும், நூலாசிரியர்களின் பெயர்களையும் சொல்லுங்கள்" என்றார்.

வகையாக மாட்டிக்கொண்டோமே என்று நினைத்து, யோசித்து யோசித்து, பத்து  நூல்களின் பெயர்களையும், முன்று நூலாசிரியர்களின் பெயர்களையும் சொன்னேன்.

"ஒரு ஆச்சரியமான விஷயம். இந்தக் கேள்வியை நான் இங்கே வந்த பலரிடமும் கேட்டிருக்கிறேன். எல்லோருமே ஏறக்குறைய  நீங்கள் சொன்ன பெயர்களைத்தான் சொன்னார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது?"

"இங்கே வந்த எல்லோருமே என்போல் அறிவில் குறைந்தவர்கள்தான் போலிருக்கிறது" என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் சொல்லவில்லை. அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அறியக் காத்திருந்தேன்.

"இன்னோர் ஆச்சரியத்தையும் சொல்லி விடுகிறேன். நீங்கள் பத்து நூல்களின் பெயர்களைச் சொன்னீர்கள். மூன்று நூலாசிரியர்களின் பெயர்களையும் சொன்னீர்கள். இந்தப் பத்து நூல்களை எழுதியவர்கள் இந்த மூன்று பேர்தான் என்றார்."

"ஆச்சரியமாக இருக்கிறதே!"

"உண்மையில் இது ஆச்சரியமான விஷயமே இல்லை. எத்தனையோ பேர் எத்தனயோ நூல்களை எழுதுகிறார்கள். அவை நன்றாக விற்பனை ஆகலாம். அவை வெளியிடப்பட்ட காலத்தில் பாராட்டுகள் கூடப் பெற்றிருக்கலாம். ஆனால் காலத்தால் அழியாத நூல்கள் சிலதான். இந்த நூல்கள் இவற்றை எழுதியவர்களின் மேன்மையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும்."

அவர் சொன்ன கருத்து எனக்குப் புரிந்தது. ஆனால் நல்ல வேளையாக அவர் 'இதிலிருந்து என்ன தெரிகிறது?'  என்று கேட்கவில்லை! கேட்டிருந்தால், "என்னைப் போன்றவர்கள் நூல்கள் எழுதக் கூடாது என்று தெரிகிறது" என்று பதில் சொல்லி இருப்பேன்!

குறள் 28:
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

பொருள்:
உயர்ந்த கருத்துக்களைக் கூறிய  சான்றோர்களின் பெருமையை இவ்வுலகில் நிலைத்து நிற்கும் அவர்களது சொற்களே (விட்டுச் சென்ற நூல்கள்/கருத்துக்கள்/அறிவுரைகள்) எடுத்துக் காட்டும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.