Breaking News :

Wednesday, June 19
.

உலக அளவில் புகழ் பெற்ற ஏழைகள்


பதிப்பகம்:- நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ்
ஆசிரியர்:- முனைவர் சி.சேதுராமன் 
புத்தகத்தின் தலைப்பே ஏழைகளாகப் பிறந்த பிரபலமானவர்களின்  வாழ்க்கையைப் பற்றியது என்பதைச் சொல்லிவிடுகிறது.  34 பிரபலங்கள் அவர்களின் செயலை ஒட்டி  தனித்தனி தலைப்புகள் தந்திருப்பது  சிறப்பு. வ…லிகள் நிறைந்த வாழ்க்கையை, அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு எதிர்கொண்டு, எப்படி வெற்றி பெற்றார்கள்  என்பதை தொகுத்து கொடுத்த ஆசிரியர் சி.சேதுராமன் அவர்களின் முயற்சிக்கு பாராட்டுகள்.

நாடகக் கொட்டகையில் வேலை பார்த்த ஏழை:-
படைக்கும் மொழியைத் தாண்டி  அனைவராலும் கொண்டாடப் பட்ட உலக  இலக்கியங்களைத் தந்த  வில்லியம் ஷேக்ஸ்பியர், கையுறை  தைத்து விற்கும் சிறுவியாபாரியின் மகனாக எண்மரில் ஒருவராகப் பிறந்தார்.ஏழ்மை காரணமாக 12வயதோடு முறையான கல்வியைத் தொடர முடியாமல் போனது.
வறுமையினால் நாடகக் கொட்டகையில்  குதிரை வண்டிகளின் குதிரைகளைக் காவல் காக்கும் வேலைபார்த்துக் கொண்டே, நாடங்களை ரசித்தது பார்ப்பார். வசனங்களை மனப்பாடம் செய்வதோடு  ,இந்த இடங்களில் வசனம் இப்படி இருந்திருக்கலாமே என்றெல்லாம் மனதுக்குள்  நினைத்துக் கொள்வாராம்.

ஒருநாள் நாடகத்தின் முதன்மைப் பாத்திரத்தின் நடிகர் வரவில்லை.
ரசிகர்கள் நாடகத்தை நடத்தச் சொல்லிக் கூச்சலிட, நிர்வாகி செய்வதறியாது கலங்கிட, நம்ம ஹீரோ ஷேக்ஸ்பியர்  தான் நடிக்கலாமா? எனக்கேட்டு சம்மதம் பெற்று நடித்தார். 
உலகமெனும் நாடக மேடையில் நிரந்தர கதா(நாயகன்)ஆசிரியராக இன்றும் வலம்வரும் மேதையின்  நாடக பயணம் ஒத்திகையின்றியே ஆரம்பமானது. ஆங்காங்கு தன் சொந்த வசனங்களையும் பேச, ரசிகர்களின் கரகோஷத்தினால் மகிழ்ந்த  நிர்வாகி ஷேக்ஸ்பியரை தொடர்  நாயகனாக்கினார். அவர் சில நாடகங்களையும் அந்த நிறுவனத்திற்கு எழுதினார்.

அவரின் பெருமையை உலகம் அறிவதற்கான வாய்ப்பு(இப்போது கொரானா போல்)அப்போது ‘பிளேக்’ உருவத்தில் வந்தது. அதனால் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நாடகக் கொட்டகைகள் மூடப்பட்டன.  அதனால் சோர்ந்து போகாத அவர் அந்த நேரத்தில் ரசிகர்களுக்கு விருந்தான  நாடகங்களும், கவிதைகளுமாக எழுதிக் குவித்தார். பிளேக் நோய் முடிந்ததும் அவை புத்தகங்களாக வெளிவர இலக்கிய உலகில் அவர் புகழ் பரவியது.

24 ஆண்டு இலக்கியப் பணியில் 37 நாடகங்கள், இத்தாலியக் கவிதை வகையான சானட் எனும் புதுவகைக் கவிதையில்134 கவிதைகளையும் எழுதியுள்ளார். இறவாக் காவியங்களான ரோமியோ-ஜூலியட்,ஆண்டனி-கிளயோபாட்ரா, ஜூலியஸ்-சீசர், இவைபோன்ற அவரின் படைப்புகள் எழுதப்பட்டு 400 ஆண்டுகளுக்குப் பிறகும் உயிரோட்டத்துடன் விளங்குவதே அவரின்  படைப்பின் வழி அவருக்கு கிடைத்த வெற்றி!

நோபல் பரிசை வாங்க மறுத்த ஏழை:-
உலகிலேயே உயர்ந்த பரிசான நோபல் பரிசையே வேண்டாமென்று மறுத்த அறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா. தந்தை அரசு அலுவலகத்தில்வேலை பார்த்தாலும் அவரது குடியால் குடும்பம் தள்ளாட கடற்கரையோரம் இருந்த ஓட்டைப் படகில் வசிக்கும் நிலைக்கு ஆளானது.பள்ளிப் படிப்பு பத்துவயதில்தான் அவருக்குக் கிடைத்தது. அதுவும் சுமார்  4 ஆண்டுகள் மட்டுமே அவரால் படிக்க முடிந்தது. பத்துவயதுக்குள் பைபிள் முதல் ஷேக்ஸ்பியர் வரை நிறைய புத்தகங்களைப் படித்திருந்தார். 20 வயதில் இங்கிலாந்துக்கு வந்தார். அப்போது அவர் நிறைய எழுதத் தொடங்கினார். அவற்றை ஆர்வமாக பத்திரிக்கைகளுக்கு அனுப்ப, அதே வேகத்தில் திரும்பிவர, தன் எழுத்தின் மீது நம்பிக்கை வைத்து, தொடர்ந்து அனுப்ப, முயற்சிக்கு வெற்றியாக பத்திரிக்கைகள் அவரின் எழுத்துகளை வெளியிட்டன.

தாயிடமிருந்து கற்ற இசையறிவால்  இசைநிகழ்ச்சிகளுக்கு எழுதும் விமர்சனங்கள் இசைக் கலைஞர்களை நடுங்கவைத்தது.  நாடகங்களுக்கு விமர்சனங்கள் எழுதும்போது  தாமே ஏன் நாடகம் எழுதக்கூடாது என்று தோன்ற முதல் நாடகமாக உதயமான’விதவைகளின் இல்லங்கள் ‘ அதைத் தொடர்ந்து candida, the devil’s disciple, saint joan, the apple cart, the doctor dilemma போன்ற பல நாடகங்களை எழுதினார். நாடகத்தின் வாயிலாக சமுதாய முன்னேற்றக் கருத்துகளை  மக்களுக்கு வழங்கியதால் இலக்கிய சமூகம் அவரை ‘இங்கிலாந்தின் பிளாட்டோ’ என்றழைத்தது.

திருமண வாழ்வில் தோல்வி. அதை நினைத்து துவண்டுவிடாமல்  தன் வாழ்க்கை பாதையில் முன்னேறிச் சென்றார். எந்த பத்திரிக்கைகள் அவரது எழுத்தை நிராகரித்தனவோ அவையே பிறகு அவரின் படைப்புகளுக்கு ஒரு சொல்லுக்கு இவ்வளவு என கணக்கிட்டு சன்மானத் தொகை  வழங்கியது வரலாற்று உண்மை.
பெர்னாட்ஷா தன் எழுத்தில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் கேலி, நகைச்சுவை ,நையாண்டியை சரளமாக பயன்படுத்தியிருக்கிறார்.

ஒருமுறை பெர்னாட்ஷா தோட்டத்தில் அமர்ந்து அவித்த உருளைக் கிழங்குகளை சாப்பி்ட்டுக் கொண்டிருந்தார். அப்போது தம்மை பார்க்க வந்த நண்பரை உபசரித்து ‘உருளைக்கிழங்கை சாப்பிடுங்கள்’ எனச் சொல்ல நண்பரோ “எனக்கு அறவே பிடிக்காது எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை” என்று கூறிவிட்டார்.  ஷா சிரித்தபடியே தட்டிலிருந்த உருளைக்கிழங்கை எடுக்க அது தவறி தரையில் உருண்டோடியது. அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த கழுதை ஒன்று  உருளைக்கிழங்கை முகர்ந்து பார்த்து சாப்பிடாமல் சென்றுவிட்டது.

நண்பர்  சிரித்து “கழுதைகூட உருளைக்கிழங்கை சாப்பிடவில்லை” என்று கூற பெர்னாட்ஷா  ஓரக்கண்ணால் அவரைப் பார்த்து “உண்மைதான் கழுதைகள் எல்லாம் உருளைக்கிழங்கு சாப்பிடாது தான்” என நகைச்சுவையாக பதிலளிக்க நண்பரின் முகம் சுருங்கிப்போனது.  இதுபோல பல சூழலிலும் தன் நகைச்சுவை உணர்வுடன் சாமார்த்தியமாக பேசியிருக்கிறார்.
மேல் நாடுகளில் மது அருந்துவது சகஜமானது இருப்பினும் இறுதிவரை புகை, மது இரண்டையும்  தவிர்த்தே வாழ்ந்தார்.   
தனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ordre of merid என்ற  விருதை “அந்த விருதை எனக்கு நானே கொடுத்துக்கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன .அதனால் இப்போது எனக்கது தேவையில்லை” என்று தன்மானமிக்கவராக எதற்கும் தலை வணங்காதவராக வாழ்ந்த அறிவுலக மேதை பெர்னாட்ஷா.
இந்த புத்தகத்தில்,  உள்ள பலரும்  படிப்பு ,படிப்பு என்றே  தேடித்தேடி  கிடைக்கும் நேரத்தில், கிடைக்கும் இடத்திலும் படித்திருக்கிறார்கள்.

பள்ளியில் வகுப்பு பாடம் எழுதாத மாணவனை ஆசிரியர் ;ஏன் எழுதவில்லை?
மாணவன்; மறந்துவிட்டேன்
ஆசிரியர்;சாப்பிட மறந்தாயா?மாணவன்; …..
குளித்தாயா? பல் தேய்த்தாயா என்று ஆசிரியர் கேட்பதில்லை. ஏனெனில் பசி என்பது உணர்வு. படிப்பை உண(ர்)வாக வர(ம்)ப் பெற்றவர்களே உயர்கிறார்கள்.
வெள்ளத்தனைய மலர் நீட்டமாக உள்ளத்தனைய உயர்வு பெற்று  வாழ அனைவருக்கும் புத்தாண்டு  வாழ்த்துகள்!! 

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.