Breaking News :

Wednesday, November 06
.

தானத்திற்கு தெய்வம் தந்த பரிசு?


கொடுக்கும் குணம், எல்லாருக்கும் வராது. அந்த குணம், கோடியில் ஒருவருக்குத் தான் இருக்கும் என்கிறார் அவ்வையார். மகாபாரத நூல்கள்
"கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை; கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை..."

என்ற பழமொழியே உருவாகி விட்டது.
அடுத்தவர் கொடுத்ததையும், தன் செல்வத்தையும் அளவில்லாமல் அள்ளி வழங்கிய ஒருவரைப் பற்றியும், அவர் அடைந்த பலனை பற்றியும் பார்க்கலாம்.

அரசர் ஒருவர், பகைவர்கள் பலரையும் வென்று, ’விஸ்வஜித்’ என்ற யாகத்தை செய்தார். அப்போது, தன்னிடம் இருந்த செல்வம் முழுவதையும் ஏழை, எளியவர்களுக்கு வாரி வழங்கி விட்டார். அரண்மனை பொக்கிஷ அறை காலியாகி, காற்று உலாவிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில்... அரசரைத் தேடி, கவுத்ஸர் என்ற முனிவர் வந்தார். வந்தவரை வணங்கி உபசரித்தார் அரசர். முனிவர், தன் வருகைக்கான காரணத்தை கூறத் துவங்கினார். ’மன்னா... தூய்மையான மனம் படைத்தவர் நீங்கள்.

அப்படிப்பட்ட நீங்கள், செல்வம் ஏதும் இல்லாமல் இருக்கும் இந்த நிலையில், நான் செல்வம் தேடி, உங்களிடம் வந்ததை எண்ணி, என் மனம் மிகவும் வருந்துகிறது. வரதந்து முனிவரிடம் கல்வி கற்றபின், குருதட்சணையைப் பற்றிக் கேட்டேன். அவர் வேண்டாம் என்று மறுத்தார். விடாமல் நிர்பந்தம் செய்தேன் நான். குருநாதருக்குக் கோபம் வந்துவிட்டது. 14 கோடிப் பொன் கொண்டு வரும்படி உத்தரவு இட்டார். அந்தப் பொன் வேண்டியே, நான் இங்கு வந்தேன். இந்த நிலையில் உங்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது, நான் வேறு எங்காவது முயற்சி செய்கிறேன்...’ என்றார் முனிவர்.

அரசரோ, ’ஊஹூம்... உங்களை வெறும் கையோடு அனுப்ப மாட்டேன். இரண்டு அல்லது மூன்று நாட்கள், இங்கேயே அரண்மனையில் இருங்கள். அதற்குள், நான் ஏற்பாடு செய்கிறேன்...’ என்றார். மறுநாள் அதிகாலையில்... குபேரனை சந்தித்து , பொருள் கொண்டு வரும் நோக்கத்தோடு, அரசர் புறப்படத் தயாரான போது, பொக்கிஷ அதிகாரிகள் வந்து, ’அரசே... நேற்றிரவு, நம் கருவூல அறையில், குபேரன் பொன்மாரி பொழிந்திருக்கிறார்...’ என்றனர்.

மன்னர் உடனே பயணத்தை நிறுத்தி, குபேரன் தந்த பொன் முழுவதையும் முனிவருக்குத் தந்தார். முனிவர் மனம் மகிழ்ந்தார். ’மன்னா... உங்களுக்கு உத்தமமான புதல்வன் பிறப்பான்...’ என்று ஆசி கூறினார். அந்த ஆசி பலித்தது. உத்தமமான அந்த அரசர் ரகு, அவர் பிள்ளை அஜன், அவர் பிள்ளை தசரதர், அவர் பிள்ளை ஸ்ரீராமர் முதலியோர். கொடுக்கும் குணமுள்ள அந்தக் குலத்திற்கு, தன்னையே பிள்ளையாகத் தெய்வம் தந்ததில் என்ன வியப்பு இருக்கிறது?

கொடுப்பவர்களிடம் தெய்வம் தேடி வரும் ....

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.