Breaking News :

Thursday, December 05
.

சதாசிவ பிரம்மேந்திரர் சித்தர் வரலாறு!


சதாசிவ பிரம்மேந்திரர் ஆற்றங்கரையில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த போது ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து ஆற்றில் மண் அள்ளியபோது அவரது உடல் கண்டு எடுக்கப்பட்டது. அப்போது கண்விழித்த அவர் எதுவும் நடக்காதது போல எழுந்து சென்றார். இனி...

மூன்று மாதங்கள் வரை மணலில் புதைந்திருந்த காலத்திலும் சமாதி நிலையில் இருந்து விடுபடாமல் சதாசிவ பிரம்மேந்திரர் இருந்த செய்தி அவருடைய குருவான பரம சிவேந்திர சரஸ்வதி சுவாமிகளை எட்டிய போது ‘அப்படியொரு நிலையை எப்போது என்னால் எட்ட முடியும்’ என்று வியந்தாராம்.

குருவையே அப்படி வியக்க வைத்த சதாசிவ பிரம்மேந்திரர் எத்தனையோ சக்திகளைப் பெற்றிருந்த போதும் அதை விளம்பரப்படுத்திக் கொள்ளவோ, தன்னை ஒரு மகானாகக் காட்டிக் கொள்ளவோ எப்போதும் முயன்றதில்லை. அவருடைய அந்த சக்திகள் இயல்பாக தேவைப்பட்ட இடங்களில் வேலை செய்தன. அதற்கு சம்பந்தப்பட்டவர் போலவே அவர் காட்டிக் கொண்டதில்லை.

ஒரு முறை ஒரு தானியக் குவியலில் அமர்ந்தவர் அப்படியே சமாதி நிலையில் லயித்திருக்க ஆரம்பித்து விட்டார். அந்த விவசாயி அவரை தானியம் திருட வந்த கள்வன் என்று நினைத்து ஒரு கம்பால் அவரை அடிக்க ஓங்கினான். ஆனால் அவன் கை அப்படியே நின்று விட்டது. அவர் விழித்து அவனைப் பார்த்த போது தான் அவனால் கையைக் கீழே இறக்க முடிந்தது. அவன் அவரைத் திருடன் என நினைத்ததற்கு வருந்தி மன்னிப்பு கேட்பதற்கு முன் அவர் அங்கிருந்து போயுமிருந்தார்.

ஒரு முறை திருநெல்வேலியில் இருந்து குற்றாலத்திற்கு அவர் நடந்து போய்க் கொண்டிருந்தார். வழியில் சிலர் வண்டியில் மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். நெடிய கட்டை போல் அவர் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களில் ஒருவன் அவரை அழைத்து கட்டைகளை எடுத்துத் தரச் சொன்னான். எந்த விதமான மறுப்பும் சொல்லாமல் அவரும் எடுத்துத்தந்து அந்த மரக்கட்டைகளை வண்டியில் ஏற்றுவதற்கு உதவினார். வேலை முடிந்த பின் அவர் மறுபடி தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

அந்தக் கயவர்கள் தங்களுக்கு உதவிய ஒருவர் என்கிற நன்றியும் இல்லாமல் ‘இந்தக் கட்டை எங்கே போகிறது?’ என்று கூவி ஏளனமாகக் கேட்டார்கள்.

சதாசிவ பிரம்மேந்திரர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் வண்டியில் ஏற்றி இருந்த கட்டைகள் திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. அப்போது தான் அவர்களுக்கு அவர் ஒரு யோகி என்பது புரிந்தது.

இன்னொரு சமயம் ஒரு பண்டிதன் அவருடைய பூர்வாங்கம் தெரியாமல் அவருக்குக் கிடைக்கும் புகழைக் கண்டு பொறாமைப்பட்டான். பல சமஸ்கிருத நூல்களைக் கற்றுத் தேர்ந்திருந்த அவன், அவர் வேத நூல்கள் பற்றிய பரிச்சயமே இல்லாதவர் என்றும், அவர் வாழும் வாழ்க்கை வேதங்களின் அங்கீகாரம் இல்லாதது என்றும் அவரிடம் நேரில் வந்து குற்றம் சாட்டினான்.

சதாசிவ பிரம்மேந்திரர் அப்போது அங்கே அருகில் இருந்த ஒரு சலவைத் தொழிலாளி நாக்கில் சில எழுத்துக்கள் எழுத, படிப்பறிவில்லாத அவர் வேத மந்திரங் களைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்.

அந்த மந்திரங்கள் ஒரு ஞானியின் வாழ்க்கை முறையை விவரிப்பதாக இருந்தன. அவை அனைத்தும் சதாசிவ பிரம்மேந்திரரின் வாழ்க்கையை ஒத்ததாகவும் இருந்தன.  இப்படி அவருடைய சக்திகளை உணர்ந்தவர்கள் சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, அரசர்களும் தான்.

ஒரு முறை அவர் பயணத்தின் போது வழியில் ஒரு நவாபின் (சில குறிப்புகள் ஒரு படைத்தலைவன் என்கின்றன) அந்தப்புரத்துக்குள் புகுந்து விட்டார். ஆடைகள் இல்லாத ஒரு பித்தர் என்று அவரை எண்ணிய அந்தப்புர பெண்மணிகள் அலறி அடித்துக் கொண்டு ஒதுங்கினார்கள். ஆனால் அவரோ சுற்றுப்புற சூழலே உணராமல் அந்தப்புரத்தைக் கடந்து கொண்டு இருந்தார். இந்தத் தகவல் நவாபின் செவிகளை எட்டியது.

கோபம் கொண்ட நவாப் அந்தப் பித்தனின் கையை வெட்டிக் கொண்டு வரும்படி சிப்பாய்களிடம் ஆணை இட்டான். சிப்பாய்கள் விரைந்து வந்து சதாசிவ பிரம்மேந்திரரின் ஒரு கையை வெட்டினார்கள். கை வெட்டப்பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்த போதும் சிறிதும் சலனப்படாத அவர் சென்று கொண்டே இருந்தார். அந்தச் செய்தியும் நவாபின் செவிகளை எட்டியது.

திகைத்துப் போன நவாப் அந்த வெட்டப்பட்ட கையை எடுத்துக் கொண்டு ஓடி அவரை அடைந்து மன்னிப்பு கேட்டான்.  அந்தக் கையை அவனிடம் இருந்து வாங்கி மீண்டும் பொருத்திக் கொண்டு அவர் போய்க் கொண்டே இருந்தார்.  கையை வெட்டியதற்குக் கோபம் கூடக் கொள்ளாத அந்த யோகி சாதாரண மனிதர்களின் உணர்ச்சிகளை என்றோ கடந்திருந்தார் என்றல்லவா இதிலிருந்து நமக்குப் புரிகிறது.

கி.பி.1730 முதல் 1768–ம் ஆண்டு வரை புதுக்கோட்டை மன்னராக இருந்த விஜய ரகுநாத தொண்டைமான் சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்து கவுரவிக்க விரும்பினார். தன் ஆட்சி எல்லைக்குள்ளே இருந்த அந்த யோகியைத் தானே நேரில் சென்று அழைக்கவும் செய்தார்.

மவுன விரதம் மேற்கொண்டிருந்த சதாசிவ பிரம்மேந்திரர் ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருந்தார். அவர் அப்படி அரண்மனைக்கு எல்லாம் வர மாட்டார் என்பதைப் புரிந்து கொண்ட மன்னர் ஆன்மிகம் குறித்த கேள்வி ஒன்றை அவரிடம் கேட்டார். அதற்காவது அவரிடம் இருந்து பதில் வந்தால் அது தனக்கு அவரது ஆசீர்வாதமாக இருக்கும் என்று மன்னர் எண்ணினார்.

சதாசிவ பிரம்மேந்திரர் மணலில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி மந்திரத்தைப் பதிலாக எழுதி விட்டுச் சென்றார்.  விஜய ரகுநாத தொண்டைமான் தன் அங்கவஸ்திரத்தில் அந்த மணலைக் கட்டி எடுத்துக் கொண்டு சென்று அரண்மனையில் பூஜித்து வந்ததாகச் சொல் கிறார்கள்.

சதாசிவ பிரம்மேந்திரரின் அருளைப் பெற்ற இன்னொரு மன்னர் சரபோஜி மன்னர். அவரது அமைச்சராக இருந்த மல்லாரி பண்டிட் என்பவர் சதாசிவ பிரம்மேந்திரரைச் சந்தித்து மன்னருக்கு மகன் பிறக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும், அவரும் ஆசீர்வதித்து தனது ‘ஆத்மவித்யா விலாசம்’ என்ற நூலை அளித்ததாகவும் குறிப்பிட்டு எழுதிய கடிதம் வரலாற்று ஆவணமாக தஞ்சை சரஸ்வதி மகாலில் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இப்படி ஒரு பிரம்ம ஞானியாகவே வாழ்ந்து வந்த சதாசிவ பிரம்மேந்திரர் தன் வாழ்வு கடைசிக் கட்டத்தை நெருங்குவதை உணர்ந்தார். அருகில் இருந்த அவரது பக்தர்களிடம் தனது சமாதியை கரூரை அடுத்த நெரூரில் அமைக்கும்படி எழுதிக் காட்டினார்.

அந்தப் பக்தர்கள் பெருந்துக்கம் அடைந்தனர். கண்களை மூடிக்கொண்டு கடைசி யாத்திரைக்குத் தயாராக இருந்த சதாசிவ பிரம்மேந்திரரிடம் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்திய அவர்கள் ‘இனி எங்களுக்கு யார் இருக்கிறார்கள்? எங்களுக்கு வழி காட்டுங்கள்’ என்று வேண்டினார்கள். கஷ்டப்பட்டு கண்களைத் திறந்த சதாசிவ பிரம்மேந்திரர் தன் கடைசி கீர்த்தனையை எழுதிக் காட்டினார்.

‘சர்வம் பிரம்ம மயம் ரே ரே சர்வம் பிரம்ம மயம்...’ என்று தொடங்கும் அந்தக் கீர்த்தனையில் ‘எல்லாமே இறைமயம் தான். அப்படி இருக்கையில் கடவுளை எங்கே தேட வேண்டும். அந்தப் பிரம்மத்தில் அல்லவா நாமும் இருக்கிறோம்’ என்ற பொருள் இருக்கிறது.

1755 –ம் ஆண்டு சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி அடைந்து இவ்வுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார். நெரூரில் அவரது ஜீவ சமாதியைக் கட்ட புதுக்கோட்டை மன்னர் உதவி இருக்கிறார். இன்றும் அவரது ஜீவசமாதிக்குப் பல ஆன்மிக அன்பர்கள் சென்ற வண்ணம் இருக்கிறார்கள். சென்றவர்கள் அங்கு அவரது ஆன்மிக அலைகளை உணர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.