Breaking News :

Monday, May 27
.

கம்பலை முதல் : கட்டுரைத் தொகுப்பு


வாசிப்புப் பெருவோட்டம் 2022 -  இலக்கு 50 / முடிப்பு 20

எழுத்தாளர் கொண்டாட்டம் - பதிவு  3

‘ கம்பலை முதல்..  ’ 

ஆசிரியர்கள் : டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப.¸ மற்றும் அ.வெண்ணிலா

வகைமை : கட்டுரைத் தொகுப்பு

172 பக்கங்கள் 

அகநி வெளியீடு

 

 

தமிழனும் வரலாறும்...

‘தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு குறைவு என்ற குற்றச்சாட்டு எப்பொழுதும் சொல்லப் படுவது உண்டு. இவ்வுணர்வை வாழ்விலிருந்து தானே உண்டாக்க முடியும்? தாத்தா பெயரைக் கடந்து அடுத்தத் தலைமுறை பெயர் தெரியாது. ஊரில் உள்ள கோயிலுக்குச் செல்வோம். கருவறையைத் தாண்டி கண்களை அனுமதிக்க மாட்டோம். சுற்றுலா செல்வோம். போகுமிடத்தின் வரலாறு தெரிந்து கொள்ள மாட்டோம். பள்ளிகளிலும் வரலாறும் வாழ்விடமும் இணைக்கப் படுவதில்லை’ 

- இப்படி வருத்தப் பட்டு ‘வந்தவாசிப் போர்’ என்ற நூல் மலரின் முன்னுரையில் எழுதியிருக்கிறார் அ.வெண்ணிலா அவர்கள்..

இந்தக் கருத்து எத்தனை தூரம் உண்மை என்று ஒரு கல்வெட்டு ஆர்வலனாக நான் செல்லுகின்ற கோயில்களில் எல்லாம் பார்த்து வருந்தி வருகிறேன்..

இந்த நூலில் இருக்கும் ஒரு கட்டுரையில் ( பேரரசன் ராஜராஜன் கட்டிய திருக்கோவில்களும் ராஜராஜன் குறித்த சந்தேகங்களும் ) சொல்லப் பட்டுள்ள கல்வெட்டுச் செய்திகளைப் படிக்கலாம் என்று சுவடு பதிப்பகம் தோழர் Nallu R Lingam அவர்களோடு திருக்கோவிலூர் சென்றேன். 

அங்குள்ள உலகளந்த பெருமாள் கோவிலின் கருவறையைச் சுற்றியுள்ள பல கல்வெட்டுகளை எல்லாம் மஞ்சள் வண்ண பெயிண்டால் மெழுகியிருந்தார்கள்.. மேலும் தப்பி இருப்பதை படிக்க நினைத்தாலும் ‘நீங்கள் ஜீயர் மடத்தில் அனுமதி பெற்றீர்களா’ என்று ஆயிரம் கேள்விகள்..!? ஏதோ தீவிரவாதிகளைப் போல எங்களை பார்த்த பார்வைகள்...!?

அடுத்து வீரட்டானேசுவரர் என்ற பெயருள்ள சிவன் கோயிலுக்குச் சென்றோம்.. இங்கே மட நிர்வாகம் இல்லை.. ஆகவே கேள்விகள் இல்லை.. இந்நூலின் கட்டுரைச் செய்திகள் அடங்கிய கல்வெட்டுள்ள பகுதியைச் சுற்றிச் சுற்றி வந்தோம். படிக்க முடியவில்லை.. படம் எடுத்து வந்திருக்கிறேன். நிதானமாக ஆராய வேண்டும்.

கருவறையைச் சுற்றிலும் இருந்தவற்றில் சில இராஜராஜன் மெய்க்கீர்த்திகள்.. ஆனால் அவற்றில் பாதியைத்தான் நாம் வாசிக்க முடியும்.. மீதிச்சுவரை மறைத்து ‘தட்சிணாமூர்த்தி’ அருள்பாலிக்கிறார்.. 

பிற்காலத்தில் வந்த புண்ணியவான் எவனோ வரலாற்றை மறைத்து பக்தியை நிலைநாட்டியிருக்கிறான்.. 

‘காந்தளுர்ச் சாலை கலமறுத்தளிய’ என்பதைத் தாண்டி அடுத்த சொல்லைப் படிக்க வேண்டுமானால் தட்சிணா மூர்த்தி தடுத்தாட்கொண்டு விடுவார்.. 

இப்போது சொல்லுங்கள்.. தமிழரின் வரலாறும் தொன்மையும் பற்றிய விழிப்புணர்வின்மை குறித்து அ.வெண்ணிலா அவர்களின் வருத்தத்தில் உண்மை இருக்கிறது தானே..! 

வெண்ணிலாவும் இராஜேந்திரனும் இன்னும் ஒருமுறை இந்த நூலில் இது குறித்து சொல்லாமல் சொல்வதாக உணர்கிறேன்... 

ஆனால் மிகவும் நேர்மறையாக.. எப்படி..?

 

தமிழ்க்குடிகளின் வரலாற்று விழுமியத்தின் பெருமிதத்தில்...

வெண்ணிலா அவர்களின் படைப்புகள்¸ அவை புனைவாயினும் அபுனைவாயினும் வரலாற்றின் வெளிச்சத்தில் எழுதப்ட்டதாகவே வகைமைப் படுத்த முடியும்..

 

முதலாவதாக அவரது படைப்பிலக்கிய  உலகம்... 

கங்காபுரமும் சாலாம்புரியும் மற்றும் இந்திர நீலம் சிறுகதை தொகுப்பும் கூட புனைவில் அவற்றின் கால வெள்ளத்தையும் சேர்த்து நேர்கோட்டு தரிசனம் தருபவை..

இரண்டாவது பெரும் பிரிவு அவரது கள ஆய்வுகள் மற்றும் வரலாற்றுத் தேடல்களின் விளைவாக நமக்குக் கிடைத்திருக்கும் அரிய அபுனைவுகள்.. 

இந்த இரண்டாவது பகுதியில் சேரும் வகையிலான கட்டுரைத் தொகுப்பே இந்த நூல்..

 

‘கம்பலை முதல்’ என்ற நூல் தலைப்பைக் கண்டவுடன், கண்ணகியின் துயரம் கண்டு மதுரை மக்களின் அச்சத்தையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தும்  இளங்கோவின் சொல்லாடலாக ‘ மாமதுரைக் கம்பலை மாக்கள்’ என்று சிலம்பில் படித்திருக்கிறேன்.. 

அது போன்ற துயர்தரும் செய்திகளின்  கட்டுரைகளோ என்று நினைத்துக் கொண்டே நூலைப் படிக்கத் தொடங்கினேன்..

இவை அப்படியல்ல.. இவை வரலாற்றை இனிய கதைகள் போல தந்திருக்கும் சுவாரசியங்களின் தொகுப்பு.. தமிழனின் தொன்மையையும் பண்பாட்டுப் பெருமிதத்தையும் தெரிந்த நபர்களைக் காட்டி அவர்கள் பற்றிய தெரியாத செய்திகளை வரலாற்று விழுமியமாக அறியத்தரும் பெரு முயற்சி.. பெரிதினும் பெரியவற்றை காட்டும் மகத்தான பணி.. 

வெண்ணிலாவும் இராஜேந்திரனும் நமது தொன்மையின் பெருமிதத்தைச சொல்லித்¸ தமிழன் தன் வரலாற்றுப் பெருமைகளை எல்லாம் தக்க வைப்பதற்குப் பதிலாக ஒவ்வொன்றாய் இழந்து கொண்டிருக்கிறான் என்பதை பேசாமல் பேசியிருக்கிற பாணி..

அதனால்தான் ‘அறிந்த ஆளுமைகளும் அறியப்படாத முகங்களும்’ என்று நூலுக்கு ஒரு முகப்பு வைத்திருக்கிறார்கள்..

 

கம்பலை என்ற உரிமைக் குரல்..

இன்றைக்கு 1500 வருடங்களுக்கு முன்பு பாண்டியப் பேரரசின் ஆணையை ஏற்க மறுத்துக் கிளர்ச்சி ஒன்றை நடத்திய ‘கம்பலை’ என்ற பெயருடைய மக்கள் திரளின் தலைவன் ஒருவனின் கதையோடு (முதல் புரட்சியாளன் கம்பலை)¸  ‘கம்பலை முதல்’ என்று நூலின் பிற கட்டுரைகள் விரிகின்றன..

கம்பலை என்ற பாண்டி நாட்டு வீரன் (கி.பி.676) மதுரைப் பாண்டியப் பேரரசின் அரசாணையை எதிர்த்து கிளர்ச்சி ஏற்படுத்தியவன். அந்த அரசாணை தாங்கியச் செப்பேட்டை உடைத்துப் போட்டான்.. இது ‘மறக்கேடு’ என்பதாம்..

ஞான சம்பந்தரின் வரலாற்றோடு நமக்கு தெரிகிற பாண்டிய அரசன் ‘கூன் பாண்டியன்’ என்றும் ‘நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன்’ என்றும்  சொல்லப் படும் பாண்டியன் மாறவர்மன் அரிகேசரி..

காவேரிக்கரை சோமயாஜி என்ற பிராமணனுக்கு கயத்தாறு அருகிலுள்ள திருமங்கலக் குறிச்சியில் (செப்பேட்டில் இளையான்புதூர்.. ஆகவே இளையான்புதூர் செப்பேடு ) நிலதானம் ஒன்றை அறிவிக்கிறான் பாண்டியன் நின்ற சீர் நெடுமாறன்.. 

இந்த நிலதானத்தை எதிர்க்கிறார்கள் கம்பலையின் தலைமையில் மக்கள்.. எதிர்த்தால் விட்டுவிடுமா அரசதிகாரம்.. ‘வில்கொண்டு’ ஒடுக்கப் படுகிறான் கம்பலை.. இப்போதெல்லாம் ‘பூட்ஸ் கால் கொண்டு’ குடிகள் ஒடுக்கப் படுகிறார்கள்.. நிலத்தின் மீதான அதிகாரம் எப்போதும் அரசுக்குரியதல்லவா..!?

ஆக¸ தமிழ்நாட்டின் முதற் புரட்சியாளன் கம்பலை என்று சுவாரசியமாகத் தொடங்குகிறார்கள் கவிஞர் வெண்ணிலாவும் முனைவர் இராஜேந்திரனும்..

ஆனால் இதற்கும் சற்று முன்னேயே¸ ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்ற தமிழ்க் குரல் வந்து விட்டது அல்லவா..!

இந்தக் கட்டுரையின் கள ஆய்வுக்கு ‘திருமங்கலக் குறிச்சிக்கு’ வந்து போனதை முன்னுரையில் சொல்லி நூலின் நோக்கத்தை கட்டியமுரைக்கிறார்கள் கட்டுரை ஆசிரியர்களான இராஜேந்திரனும் வெண்ணிலாவும்.. 

முன்னுரையின் தலைப்பை பாருங்கள்.. ‘எழுதுவதற்கான பயணமும் பயணத்திற்கான எழுத்தும்’.. என்னவொரு அர்த்தபூர்வமுள்ள சொற்றொடர்..!.. 

ஆம்.. தமிழ்க் குடிகளின் வரலாற்று விழுமியத்தை எல்லாம் தேடிப்போய்க் கண்டடைந்த சுவடுகளைத் தந்திருக்கிறார்கள்.. இமயம் வென்ற பெருமைக் கூற்றுகளின் வெளிச்சத்தைக் கூட விட்டு வைக்கவில்லை ( இமயம் என்னும் கொடிமரம் ).

லெமூரியாக் கருதுகோளையும் தள்ளிவிடாமல் தடயம் பார்த்திருக்கிறார்கள் ( கடல் தின்ற நிலம் ).

இரண்டு பேர் நூலாசிரியர்கள்.. சேர்ந்துதான் எழுதியிருக்கிறார்கள்.. இரண்டு பேரின் எழுத்து நடையும் எனக்கு பரிச்சயம்தான்.. ஆனால் அ. வெண்ணிலா அவர்களே நூலில் பரவியிருப்பது போல எனக்கு பிரமை தட்டியது..

கட்டுரைகளின் தலைப்புகள் செய்திகளோடு பொருந்தி மலைக்க வைக்கின்றன..

எனக்குப் பிடித்த வரிசையில் அமைத்துக் கொண்டு சிலவற்றை மட்டும் சற்று விரித்துச் சொல்லி நூலில் மீதமிருக்கும் கட்டுரைகளை படிக்கப் போகிற நண்பர்களின் சுவாரசியமான வாசிப்பு அனுபவத்திற்கு விட்டுவிட விரும்புகிறேன்..... அதுதான் இந்த நூலுக்கு நான் செய்யும் சரியான அறிமுகமாக இருக்கும்...

 

தலைமுறைகள் தாண்டிய தலைமைத்துவம்.

தமிழ் மரபில் தனித்தன்மை காட்டிய பெண்களை தனது படைப்புகளிலெல்லாம் சிறப்பாக வெளிப்படுத்துவார் கவிஞர் வெண்ணிலா. இந்த நூலிலும் அது தொடர்கிறது..

திருமழபாடியில் பிறந்தார் அந்த சிற்றரசர் குலப்பெண்.. அவள் இயற்பெயர் என்னவென்று வரலாறு சொல்லவில்லை.. 

ஒரு அரசகுலத்தின் மாதேவி என்ற பொருளில் ‘செம்பியன் மாதேவி’ என்றே வரலாறு அவரை பிரமாதப் படுத்துகிறது.. 

உண்மையிலேயே¸  மாமனார் முதலாம் பராந்தகன்¸ கணவர் கண்டராதித்தன்¸ இரண்டு கொழுந்தன்மார்களாகிய அரிஞ்சயன் மற்றும் இரண்டாம் பராந்தகன்¸ மகன் மதுராந்தக உத்தமச் சோழன்¸ கொழுந்தனின் மகன் அருண்மொழி என்ற இராஜராஜன் என்று ஆறு அரசர்களை தன் வாழ்நாளில் பார்த்து கடந்திருக்கிற ராஜமாதாவாக வரலாற்றில் வாழ்ந்திருக்கிறார்..

தனது கணவரின் மூத்தவரான இராஜாதித்தன் மற்றும் கொழுந்தனார் சுந்தரச் சோழரின் மகன் ஆதித்த கரிகாலன் ஆகியோரின் மரணத்தைப் பார்த்திருக்கிறார். இந்த இரண்டு மரணங்களாலேயே¸ முறையே தனது கணவருக்கும் மகனுக்கும் அரசுரிமை வந்ததை அறிந்திருந்ததால் தன் பேரனும் வாரிசுரிமைப் போட்டியில் வராமலிருக்க இணங்கி இராஜராஜன்¸ பின்பு இராஜேந்திரன் என்று சோழப் பேரரசில் அடுத்த நூறாண்டுகளுக்கு மேல் வாரிசுச் சண்டை இல்லாத நிலைமையை உருவாக்கியிருக்கிறார்...

ஆகவே இவர் பற்றிய அழகான சுவாரசியமான கட்டுரையை¸ ‘பெண்ணின் பெருந்தக்க’  என்று வள்ளுவரின் சொல்லாடலை தலைப்பாகக் கொண்டு எழுதுகிறார்கள் இரண்டு ஆசிரியர்களும்.. வாசிக்க வாசிக்க வரலாறு சுவைக்கிறது... நானறிந்து செம்பியன் மாதேவி குறித்து இத்தனை செம்மையாக தமிழில் யாரும் எழுதியதாகத் தெரியவில்லை.

செம்பியன் மாதேவி தன் வாழ்நாளில் கற்றளிகளாக மாற்றிய 12 செங்கற்தளிகளும்¸ நேரடியாக கட்டிய 10 கற்றளிகளும்¸ கோயில்களுக்கு வழங்கிய செப்புத் திருமேனிகளும் வரலாற்றில் அவர் பெருமை பேசி நிற்கின்றன.. ‘செம்பியன் மாதேவி கலைப் பாணி’ என்ற வகைமையே வரலாற்றில் இருக்கிறது..

தமிழனின் துர்ப்பாக்கியம் என்னவெனில்¸ அந்தக் கலைப் பாணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கும் அவரது வெண்கலத் திருமேனியே இன்று தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான்.. அதைப் பார்க்க வேண்டுமெனில் வாசிங்டன் அருங்காட்சியகம் செல்லவேண்டும்..

 

மங்கல தேவிக் கோட்டமும் மலை அரசின் கெடுபிடிகளும்..

தமிழர் மரபில் முழுநிலா நாட்கள் திருவிழா நாட்கள்... மதுரைத் திருவிழாவில் சித்திரை முழுநிலா நாளில் கள்ளழகர் வைகையில் இறங்குவதும்¸ வைகாசி விசாக முழுநிலா நாளிலும் தைப்பூச முழுநிலா நாளிலும் முருகன் தலங்களில் நடக்கும் விழாக்களும்¸ மார்கழித் திருவாதிரை முழுநிலவு தினத்தில் ஆடல் வல்லான் நடனமும் நெடுங்கால மரபுத் தொடர்ச்சி கொண்டவை.. 

இவற்றின் ஆரம்பமாக புகார் நகரில் நடந்த இந்திர விழாக் கொண்டாட்டத்தை சிலம்பில் பார்க்கிறோம்.. இந்திர விழா இல்லாது போனது.. ஆனால் கண்ணகி வழிபாடு இன்றும் தொடர்கிறது.

சிலம்பின் நாயகி கண்ணகிக்கு கோயில் எடுத்த செங்குட்டுவனையும் படித்திருக்கிறோம். அந்த மங்கல தேவிக் கோட்டத்தில் சித்திரை முழுநிலா நாளில் கண்ணகியை வணங்கச் செல்லும் தமிழ் நாட்டு பக்தர்கள் மீது கேரள அரசு தொடுக்கும் கெடுபிடிகளையும் அவற்றின் பின்னால் இருக்கும் நுண்ணரசியலையும் சொல்கிறது¸ ‘மண்மகள் அறியா வண்ணச் சீரடி’ என்ற சிலம்பின் சொல்லாடலைத் தலைப்பாகக் கொண்ட கட்டுரை..

அதே மலைவனப் பகுதியில் இருக்கும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க எந்த நெருக்கடியும் தராத கேரள அரசு தமிழக எல்லைக்குள் இருக்கும் கண்ணகிக் கோயிலை 1983 இலிருந்து தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தருகிற நெருக்கடிகளை காத்திரமாகப் பேசும் கட்டுரை இது..

இந்தக் கோயிலைப் புனரமைத்த இராஜராஜன் உள்ளிட்ட மன்னர்களின் செயல்களும் கட்டுரைக்கு சுவாரசியம் சேர்க்கின்றன..

மண்மகள் அறியா வண்ணச் சீரடியை உடைய கண்ணகியை சித்திரை முழுநிலவில் சுதந்திரமாக தமிழர்கள் தரிசிக்கும் நிலை வருமா..?

 

பொன்மான் பயந்த பெரும்புலி..

தமிழர் வரலாற்றிலும் சரி..பரந்த பாரத நிலத்தின் எப்பகுதியின் வரலாற்றிலும் சரி.. மிக நீண்ட 400 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பேரரசு சோழர் அரசுதான். 

அதிலும் அருண்மொழிவர்மன் என்ற ராஜராஜனதான் (கி.பி. 985 – 1012)  சோழர் அரசை அடுத்த இரு நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்த வலிமையான அரசாக நிர்மாணித்த பெருமைக்குரியவன்..

அவனைப் பற்றி பெருமிதம் உரைக்காத வரலாற்று ஆர்வலர் இல்லை.. ஏனெனில் அவன் வழியாக தமிழ்த் தேசியம் என்ற பெருமிதத்தை மீண்டும் மீண்டும் கட்டமைக்க முயல்வதை அவதானிக்கிறோம் அல்லவா..

இந்த நூலிலும் ‘பேரரசன் ராஜராஜன் கட்டிய திருக்கோவில்களும் ராஜராஜன் குறித்த சந்தேகங்களும்’ என்றதோர் கட்டுரை – தொகுப்பில் மிக நீண்ட கட்டுரை இதுதான் - நாமறிந்த இராசராசன் பற்றிய பல செய்திகளைப் பேசிவிட்டு சில கருத்தாடல்களை மகுடமிட்டுப் பேசுகிறது.. 

இந்த விமர்சனப் பகுதியில் நான் ஒன்றை மட்டும் உசாவிப் பார்க்க விழைகிறேன்..

முதலில் இந்தக் கல்வெட்டைப் பாருங்கள்.. இதை வாசிக்கத்தான் திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயிலுக்கு தோழர் நல்லுவுடன் போனேன்.. 

கல்வெட்டா..பாட்டா..! இது மிகப்பெரிய கல்வெட்டொன்றின் சிறு பகுதி...! 

 

‘செந்திரு மடந்தை மன் சீ. இராஜராஜன் 

இந்திர சமானன் ராஜ சர்வஞ்ஞனெனும் 

புலியைப் பயந்த பொன் மான் 

கலியை கரந்து கரவாக் காரிகை சுரந்த 

முலைமகப் பிரிந்து முழங்கெரி தடுவணும் 

தலைமகற் பிரியாத் தையல் 

நிலைபெறுந் தூண்டா விளக்கு ......................

மணிமுடி வளவன் சுந்தரசோழன் 

மந்தரதாரன் திருப்புய முயங்குந் தேவி.’

 

திருக்கோவிலூர் மலையமான் சிற்றரசரின் மகள் வானவன் மாதேவி என்பவள்.. சுந்தரச் சோழன் என்ற இரண்டாம் பராந்தகனின் பட்டத்தரசி.. இராசராசனின் அன்னை..

இந்தக் கல்வெட்டு இராஜராஜன் காலத்தில் திருக்கோவிலூரில் பொறிக்கப் பட்டுள்ளது..

இந்தக் கல்வெட்டுக் கவிதை வெளிப்படுத்தும் செய்திகள் என்ன...?

• சுந்தரச் சோழன் தேவியும் இராஜராஜனை பெற்ற அன்னையும் ஆன தேவி தன் தலைவனைப் பிரிதல் தாளாமையால் தன் சுரந்த முலை மறவாத மதலையைப் பிரிந்து கணவன் சிதையில் தீப்புகுந்தாள்..

இந்த நூலில் இந்தக் கல்வெட்டுப் பாட்டை குறுந்தொகைச் செய்யுள் ஒன்றின் சாயலாக அறிமுகப் படுத்தி இராஜராஜனின் சிறப்பைச் சொல்லும்¸ ‘புலியைப் பயந்த பொன்மான்’ என்ற சொற்றொடரை வியந்துவிட்டதோடு நூலாசிரியர்கள் வேறு செய்திகளுக்குப் போய்விடுகிறார்கள்.. 

ஆனால் அப்படி படித்து கடந்துவிட என்போன்ற வரலாற்று ஆர்வம் கொண்ட வாசகரால் இயலாது..

இக்கல்வெட்டு முன் வைக்கும் விவாதங்கள் என்னென்ன தெரியுமா..?

 

• சுந்தரச் சோழனுடன் தீப்புகுந்த செய்தி உள்ள கல்வெட்டு திருக்கோவிலூரில் அமைந்ததின் காரணம் என்ன..?   ‘பொன்மாளிகைத் துஞ்சிய தேவன்’ என்ற அடைமொழியோடு இச்செய்தியை எவ்விதம் இணைத்துப் பார்ப்பது..?     பொன்மாளிகை அமைந்த இடம்தான் எது..?   காஞ்சியெனில் அரசி தீப்புகுந்தது காஞ்சியா அல்லது வேறிடமா என்ற செய்தியை மிகப் பெரிய கல்வெட்டு மந்தணமாக விட்டது ஏன்..?

 

• அரசி தீப்புகுந்த போது பால்முலை மறவாத பச்சிளம் குழந்தையைப் பிரிந்தாள் என்கிறதே கல்வெட்டு.. எனில் அந்தக் குழந்தை யார்.. இராஜராஜன்தானா..? 

• ஆமெனில் திருவாலங்காட்டு செப்பேடு¸ ‘ சுந்தரச் சோழன் மறைந்த பிறகு ஆட்சியை சிற்றப்பன் மதுராந்தகனுக்கு விட்டுக் கொடுத்தான் அருண்மொழி’ என்று சொல்கிற செய்தி முரணாகுமே..? 

• இல்லையெனில் அந்தக் குழந்தை வரலாற்றில் மந்தணமாக இருக்கிறதல்லவா.. வானமாதேவி தீப்புகும் போது இருந்த குழந்தை சோழர் வரலாற்றில் என்ன ஆனது..?

 

இன்னும் சில செய்திகளை இராசராசன் குறித்த ‘சந்தேகங்கள்’ என்ற தலைப்புடன் நூலாசிரியர்கள் பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள். படித்து ரசிக்க வேண்டும்.. 

 

அவற்றில் முக்கியமானது¸ கஜினி முகம்மது படை எடுப்போடு ராஜராஜன் மற்றும் ராஜேந்திரன் வரலாற்றை கால வெள்ளத்தில் உசாவிப் பார்த்திருப்பதுதான்.. ஆம்.. மிகப் பெரிய வரலாற்று அதிசயம்தான் அது..

 

மொத்தம் 17 கட்டுரைகள்.. லெமூரியா தொட்டு ஆங்கிலேயர் சென்னை கோட்டைக்கு வந்தது வரை பல தரவுகளை கதைகள் போல காட்சிப் படுத்தி இருக்கிறார்கள் முனைவர் வெண்ணிலாவும் முனைவர் இராஜேந்திரனும்.. அவற்றில் சிலவற்றை மட்டுமேச் சோற்றுப் பதமாகக் காட்டினேன்.  

 

‘வரலாற்றின் மேல் கவிந்துள்ள நூற்றாண்டுத் தூசியையும் சோம்பலையும்¸ அதன் புராதனத்தையும் கொஞ்சம் திரை விலக்கி¸ வரலாற்றை வெகுஜன தளத்தில் சுவாரசியப் படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை.’ என்று முன்னுரையில் நூலாசிரியர்கள் சொல்கிறார்கள்..

 

நூற்றாண்டுத் தூசி அல்ல ஆயிரமாண்டுத் தூசியைக் கூட துடைத்துக் காட்டியிருக்கிறார்கள்.. படித்து ரசியுங்கள்..

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.