அர்ச்சனா வாசலில் செருப்பைக் கழற்றி விட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். மணி சரியாக இரவு எட்டு பத்து. அர்ச்சனாவின் பதினோரு வயது மகன் நகுல், கணவன் நிரஞ்சன் மற்றும் மாமியார் ஹாலில் அமர்ந்திருந்தனர். நிரஞ்சன் போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.
"உஷ்..அப்பாடா.." என்று சோபாவில் அமர்ந்தவளை பார்த்து "என்ன டிபன் செய்யப் போற?.." என்றான் நகுல்.
"இரு ஏதாவது செய்யறேன்.." என்றவளிடம் "ஏதாவது டேஸ்டா செய்" என்றான் சத்தமாக.
"நான் தான் வெங்காயம் தக்காளி எல்லாம் ஏற்கனவே வெட்டி வச்சிட்டேனே.. குருமா வைக்க உனக்கு எவ்வளவு நேரம் ஆகப் போகுது? பிரிட்ஜில இருந்து மாவை எடுத்து டக்குன்னு தோசை சுட வேண்டியது தானே.. பாவம் புள்ள, எவ்வளவு நேரம் தான் பசியோட இருப்பான்.." என்ற மாமியாரிடம் ஒன்றும் கூறாமல் சமயலறைக்குள் சென்றாள்.
"எனக்குச் சப்பாத்தி தான் வேணும்.. இல்லைன்னா பரோட்டா வாங்கித் தா.." என்றான் நகுல்.
"ஒரு நிமிஷம்.." என்று போனில் கூறிவிட்டு நிரஞ்சன் அர்ச்சனாவை அழைத்தான்.
ஏய்..அவன் என்ன கேக்குறானோ அதைச் செய்.. முக்கியமான பிசினஸ் விஷயம் பேசிகிட்டு இருக்கும் போது ஏன் அவன கத்த விடுற?..
ஏங்க..இப்ப தானே உள்ளாற வந்தேன். ஒரு ஐஞ்சு நிமிஷம் கூட உட்கார விட மாட்டேங்குறான்.
"வாயை மூடிக்கிட்டு கேட்குறத செய்.." என்று கூறி விட்டு மீண்டும் போனில் பேச ஆரம்பித்தான்.
இது எப்போதும் நடப்பது தானே என்று நினைத்துக் கொண்டு சப்பாத்திக்கு மாவு பிசைய ஆரம்பித்தாள். முதுகு லேசாக வலிப்பது போல் இருந்தது. வீட்டிற்குச் சென்றவுடன் பாத்ரூம் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வந்தவளுக்கு, இப்போது அது சுத்தமாக மறந்து விட்டது.
அர்ச்சனா எம்.காம் முடித்து விட்டு தேசிய வங்கி ஒன்றில் கணக்காளராகப் பணி செய்கிறாள். நிரஞ்சன் பி.காம் முடித்து விட்டு வங்கியில் சிறிது காலம் வேலை செய்தான். திருமணத்திற்குப் பின் சுய தொழில் செய்கிறேன் என்று இருந்த வேலையை விட்டு விட்டான். பல வருடங்களாக ஏதாவது முயன்று கொண்டே இருக்கிறான். ஆனால் அவனுக்கு இன்னும் விடிவு கிடைக்கவில்லை. மொத்த குடும்பமும் அர்ச்சனாவின் வருமானத்தில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் நிரஞ்சனுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மையால் அடிக்கடி அர்ச்சனாவிடம் சண்டை போடுவான்.
அர்ச்சனாவின் ATM கார்டு எப்பொழுதும் நிரஞ்சனிடம் தான் இருக்கும். கணக்கு கேட்டாலோ, இல்லை "இப்ப இந்தச் செலவு வேண்டாங்க.." என்று சொன்னாலோ, பேயாட்டம் ஆடி விடுவான்.
"என்னடி..உன் காசுல தான் குடும்பம் ஓடுதுன்னு நினைக்கிறியா? இப்ப நினைச்சாலும் உன்னை வேலைய விட்டு நிறுத்தி பிச்சையெடுக்க வச்சிடுவேன்.. ஜாக்கிரத.." என்பான்.
நீ கோபப்படாதப்பா..இவளுக்கு எல்லாம் நல்ல புருஷன் கிடைச்சிட்டான் பாரு.. அந்தக் கொழுப்பு தான்.. உன் தங்கச்சி மாப்பிள்ளை மாதிரி இருந்தா தெரியும்..
"பெண்ணுக்கு முதல் எதிரி இன்னொரு பெண் தான் போலும்.." என்று நினைத்து கொள்வாள் அர்ச்சனா.
டிபன் வேலையெல்லாம் முடிந்து, பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு மாடிக்கு செல்ல படி ஏறினாள்.
இந்தா..ஒரு நிமிஷம்..
சொல்லுங்க அத்தை..
நிரஞ்சன் இன்னைக்கு ஜோசியரை பாத்துட்டு வந்தான்.. குலதெய்வ கோவிலுக்குப் போய் முடி எடுத்துட்டு பொங்கல் வச்சா, அவனுக்குப் பிசினஸ் நல்லா வரும்னு சொல்லி இருக்கார்.. வர்ற இருபத்திமூனாம் தேதி நாள் நல்லா இருக்காம்..நீ அன்னைக்கு லீவு எடுத்திடு..
"சரிங்க அத்தை.." என்று கூறி விட்டு மாடிக்கு வந்தாள்.
ரொம்ப நாளாக இந்த நேர்த்திக்கடன் பாக்கி இருக்கிறது என்று நினைத்துக் கொண்டே படுக்கைக்குச் சென்றாள். நகுல், நிரஞ்சனின் மேல் கால் போட்டுக்கொண்டு தூங்கி கொண்டிருந்தான்.
படுக்கையில் அமர்ந்து கொண்டு காலண்டரை பார்த்தாள். இருபத்திமூன்றாம் தேதியை ஏற்கனவே சிவப்பு பேனாவால் வட்டமிட்டிருந்தாள்.
"ஐயையோ.. அன்னைக்கு எனக்கு ரெண்டாவது நாள் ஆச்சே.." குழப்பத்துடன் நிரஞ்சனை எழுப்பினாள்.
என்னங்க..என்னங்க.. கொஞ்சம் எழுந்திரிங்க..
என்ன.. நான் நிம்மதியா தூங்கினா உனக்குப் பொறுக்காதே..
சாரிங்க.. குலதெய்வ கோவிலுக்குப் போகனும்னு அத்தை சொன்னாங்க.. அதான்.. அன்னைக்கு எனக்கு ரெண்டாவது நாள் வருது..
"ஏதாவது நாள் கிழமைன்னா, உடனே உனக்கு வந்துடுமே.. எனக்கு நல்லது எதுவும் நடக்காம இருக்கறதுக்குக் காரணமே நீ தான்டி.. நீ ஒன்னும் வர வேண்டாம்.. நாங்களே பாத்துக்கறோம்.." என்று கூறி விட்டு படுத்துக் கொண்டான்.
அர்ச்சனாவிற்கு ஆத்திரமும் அழுகையும் தொண்டையை அடைத்தது. கண்ணில் நீர் வழிய கட்டிலின் கீழே படுத்து கொண்டாள்.
"என்னை ஒரு வார்த்தை கேட்டு விட்டு நாள் குறித்திருக்கலாமே.. இயற்கையாய் என் உடலில் நடக்கும் மாற்றத்திற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்.. இதை நானே நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாதே.." என்று மனதிற்குள் குமுறினாள்.
"சரி, இதைத் தள்ளி போட ஏதோ மாத்திரை இருக்குன்னு, புதுசா வேலைக்குச் சேர்ந்த பொண்ணு சொன்னாளே..நாளைக்கு அவ கிட்ட கேப்போம்.." என்று நினைத்துக் கொண்டே தூங்கி விட்டாள்.
காலையில் வேலைக்குக் கிளம்பி கொண்டிருந்தவளை பார்த்து "இத பாரு.. எங்க குல சாமிக்கு இதெல்லாம் ஆகாது.. உனக்கு அன்னைக்குத் தான் ஆகும்னா, நீ வர வேண்டாம்.." என்றாள் அவளின் மாமியார்.
அர்ச்சனா திரும்பி நிரஞ்சனை முறைத்தாள். அவன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
மேற்கொண்டு எதுவும் பேசாமல் வங்கிக்கு வந்து விட்டாள். உணவு இடைவேளையில் அந்தப் பெண்ணிடம் மாத்திரையின் விவரம் கேட்டு எழுதிக் கொண்டாள்.
"அக்கா.. சில சமயம் அது சரியா வேலை செய்யாது.. கொஞ்சம் கவனமா இருங்க.." என்றாள் அந்தப் பெண். வேலை முடிந்து வீட்டிற்கு வரும் வழியில், மருந்து கடையில் மாத்திரைகளை வாங்கிக் கொண்டாள்.
வீட்டிற்கு வந்து நிரஞ்சனிடம் "அதை தள்ளி போட மாத்திரை இருக்காம்.. வாங்கிட்டேன்.." என்றாள்.
"அது சரி, உனக்கு எதை எப்படித் தள்ளி போடனும்னு தெரியாதா என்ன.." என்று நக்கலாகச் சிரித்தவனைக் கண்டு கொள்ளாமல் சமயலறைக்குள் சென்றாள்.
இருபத்தி மூன்றாம் தேதி காலை அர்ச்சனாவும் அவள் மாமியாரும் பூஜை சாமான்களைக் காரில் எடுத்து வைத்து கொண்டிருந்தனர். நகுல் காரில் அமர்ந்தபடி பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான். நிரஞ்சன் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தான். எதற்கும் இருக்கட்டுமே என்று இரண்டு நாப்கினை பேப்பரில் சுற்றி பின்சீட்டின் கவருக்குள் வைத்தாள் அர்ச்சனா.
எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு காரில் ஏறி அமர்ந்தனர். நிரஞ்சன் காரை ஸ்டார்ட் செய்தான்.
"நகுலோட புது டிரஸ் மாடில வச்சிருந்தேன்.. எடுத்துகிட்டியா.." என்றான் நிரஞ்சன்.
சாரிங்க மறந்துட்டேன்..
ஏதோ சொல்ல வந்தவனைச் சட்டை செய்யாமல், ஓடிச்சென்று வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்தாள். கிடு கிடுவென்று மாடியேறி நகுலின் டிரெஸ்ஸை எடுத்துக் கொண்டு வேகமாய் இறங்கினாள். வாசலுக்கு அருகில் வரும் போது, தரையில் வழவழப்பாக எதன் மீதோ கால் பட, தடாரென்று ஒரு பக்கமாக விழுந்தாள் அர்ச்சனா. தலை கிறு கிறுவென்று சுற்றியது. இடது பக்க இடுப்பில் வலி தாங்காமல் "அம்மா.." என்றாள்.
"என்ன அங்க சத்தம்.." மாமியாரின் குரல் கேட்டது.
சுதாரித்து எழுந்தவள், அவசர அவசரமாக வீட்டை பூட்டிக்கொண்டு காரில் முன் பக்க சீட்டில் ஏறி அமர்ந்தாள்.
நிரஞ்சன் வெடுக்கென்று டிரெஸ்ஸை பிடுங்கினான். "அம்மா..நீ இதை வெச்சிக்கோ.." என்று அர்ச்சனாவின் மாமியாரிடம் கொடுத்தான். மாமியார் அதை வாங்கிப் பின் சீட்டின் கவருக்குள் வைக்கும் போது, உள்ளே இருந்த நாப்கினை பார்த்து விட்டாள்.
கருமம்..கருமம்.. நிரஞ்சா.. இங்க பாரு.. உள்ளே என்ன இருக்குன்னு?..
திரும்பி பார்த்த நிரஞ்சன் கோபமாக "அதைத் தூக்கி வெளிய போடும்மா.." என்றான்.
அர்ச்சனா ஒன்றும் சொல்லாமல் தலையைத் திருப்பிக் கொண்டாள்.
கோவிலில் பொங்கல் வைத்தாயிற்று. நிரஞ்சன் நகுலை அழைத்துக் கொண்டு மொட்டை அடிக்கும் இடத்திற்குச் சென்றிருந்தான். அர்ச்சனா பொங்கல் பாத்திரத்தை இறக்கி வைக்க முயற்சித்த போது, திடீரென்று அடி வயிறு வலித்தது. காலையில் விழுந்ததிலிருந்தே உடல் வலித்துக் கொண்டே இருந்தது. இரு தொடையிலும் வலி ஆரம்பித்தது.
"கடவுளே.. நேற்று மாலையே இரண்டு மாத்திரைகளை எடுத்து கொண்டேனே.. என்னைக் காப்பாற்று.. என் தவறால் என் பிள்ளையை ஒன்றும் செய்து விடாதே.." அர்ச்சனாவிற்குக் கண்ணில் நீர் திரண்டது.
அதற்குள் நிரஞ்சனும் நகுலும் வந்து விட்டார்கள். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சாமி சிலை முன் வந்து வைத்தார்கள். அர்ச்சனாவால் நிற்க முடியவில்லை. உடல் நடுங்கி கொண்டே இருந்தது. நிமிர்ந்து சாமி சிலையைப் பார்த்தாள். மனதிற்குள் கதறினாள் "என்னால் முடியவில்லை, வேண்டுமானால் என்னைக் கொன்று விடு.. என் பிள்ளையை ஒன்றும் செய்து விடாதே.."
"எல்லாரும் குடும்பமா வாங்க.." என்று பூசாரி அழைத்தார்.
நிரஞ்சனுக்கும் நகுலுக்கும் கழுத்தில் பட்டு துணியைச் சுற்றினார். அர்ச்சனாவிற்கும், அவளது மாமியாருக்கும் சிவப்பு நிற பட்டுத் துணியைக் கையில் கொடுத்தார். கற்பூரத்தை சாமிக்கும் படையலுக்கும் காட்டினார்.
"உம்.. கண்ணுல ஒத்திக்கோங்க.." என்றார்.
சரி, நீங்க உங்க தட்டை எடுத்துக்கிட்டு கருவறையைச் சுத்தி வாங்க..
நிரஞ்சன், நகுல் மற்றும் அர்ச்சனாவின் மாமியார் தட்டுகளைத் தூக்கி கொண்டு வேகமாக முன்னே செல்ல, அர்ச்சனா அடி மேல் அடி வைத்து நடந்தாள்.
கருவறைக்குப் பின்னால் வந்தவள், அழுது கொண்டே சுற்றிலும் பார்த்தாள். யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, பட்டு துணியை நான்காய் மடித்தாள்.
பூஜை எல்லாம் முடிந்து வீட்டிற்கு வரும் போது இரவு பத்து மணியாகி விட்டது. உள்ளே நுழைந்து கற்பூரம் ஏற்றினார்கள்.
"எல்லாரும் பட்டுத் துணிய சாமி படத்துக்கு முன்னாடி வச்சி கும்பிடுங்க.. ஏய் அர்ச்சனா.. உன் துணி எங்க.." என்ற மாமியாரிடம் "கூட்டத்துல எங்கயோ விழுந்துடிச்சின்னு நினைக்கிறேன்.." என்றாள் அர்ச்சனா.
மறு நாள் காலை ஓவென்று மாமியார் அழும் சத்தம் கேட்டு கீழே வந்த அர்ச்சனாவிடம் "உன் நாத்தனார் கீழே விழுந்துட்டாளாம்.. நாங்க ஊருக்கு போறோம்.." என்று கூறி விட்டு நிரஞ்சனும் அவளுடைய மாமியாரும் கிளம்பி விட்டனர்.
அர்ச்சனாவிற்கு உள்ளே நடுக்கம் ஏற்பட்டது "கடவுளே என்னை மன்னித்து விடு.." என்று உள்ளுக்குள் கதறினாள்.
நகுலை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வங்கிக்குள் வந்தவளை, மேனேஜர் அழைப்பதாகச் சொன்னார் பியூன். அர்ச்சனாவிற்கு வயிற்றில் புளியை கரைப்பது போல் இருந்தது.
"குட் மார்னிங் சார்.." என்று சொல்லிக்கொண்டு மேனேஜர் அறைக்குள் நுழைந்தாள்.
"வாங்க அர்ச்சனா.. ஒரு குட் நியூஸ்.. உங்களுக்குத் தலைமை கணக்காளராகப் பதவி உயர்வு வந்திருக்கு.." என்றார் மேனேஜர்.
இரண்டு கைகளையும் ஒன்று கோர்த்து, தலைக்கு மேலே தூக்கி கும்பிடு போட்டு, கண்ணில் நீர் வழிய, தன்னை மறந்து "ரொம்பத் தேங்க்ஸ்..சா..சாமி" என்றவளை வித்தியாசமாகப் பார்த்தார் மேனேஜர்.
Credits **—ஆபுத்திரன்***