Breaking News :

Tuesday, April 16
.

''மோகமுள் " ஆசிரியர் - தி. ஜானகிராமன்


"மோகமுள் "
ஆசிரியர் - தி. ஜானகிராமன் 
வகை - நாவல் 
பக்கம் - 669
காலச்சுவடு பதிப்பகம் 
களம் - கும்பகோணம் - மதராஸ் 

      தி ஜா வின் பெரிதும் விமர்சிக்கப்பட்ட நாவல் என்ற பெரும் வெளிச்சாயலுடன் இந்த நாவலை படிக்க துவங்கினேன். தி ஜா வின் தீவிர வாசகனால் மட்டுமே படித்து முடிக்கக்கூடிய நாவல் இது. தி ஜா இலக்கியத்தின் ஆளுமையை பார்த்துளோம் ஆனால் அவரின் சங்கீத ஆளுமையை அறிய மோகமுள் படித்தால் மட்டுமே முடியும். இதில் எண்ணற்ற எண்ண ஓட்டங்களும், நுணுக்கமான நுண் உணர்வுகளும் கதை முழுக்க ஒளிந்து கிடக்கின்றன. வழக்கமாக தன் கதைகளில் வரும் பெண்களின் பார்வை வழியே கதையை நகர்த்தும் தி ஜா, இக்கதையில் பாபு என்ற பதின் பருவ ஆண் பார்வை வழியே இந்த உலகை நம்மையும் பார்க்க வைக்கிறார். இருந்தாலும் தி ஜா வுக்கே உரித்தான ஒரு பெண் கதாபாத்திரம் இக்கதையில் உலா வருகிறாள் யமுனா என்ற பெயரில். யமுனா வேறு யாருமில்லை நம் அன்றாட வாழ்வில் நாம் கடந்து செல்லும் சாதி, மத, இன, மொழி, செல்வம், கௌரவம், குடும்ப பெருமை என்ற உயிரற்ற,  பொருளற்ற ஆயுதங்களால் சூறையாடப்படும் பெண்கள்  யமுனாவின் உயிருள்ள சாட்சிகளாக அலைந்து கொண்டிருக்கின்றனர், ஆனால் நமக்குத்தான் அவர்களை கவனிக்க, ஆதரிக்க, தோள்கொடுக்க, சில கண்ணீர்த்துளிகள் சிந்த நேரமில்லை. ஏனெனில் நமக்கு கடிகார முட்களுடன் முண்டியடித்து ஓடுவதற்குள்  வாழ்க்கை முடிந்துவிடுகிறது. 
             தி ஜா வின் கதைகளில் காவிரி ஆறு ஒரு முக்கிய கதைமாதராகவே வலம் வரும், அதிலும் இக்கதையில் பாபு தன் மனசாட்சியுடன் பேசும் பல சமயம் காவிரி ஆறு அவனுக்கு ஆறுதல் தருகிறது. ஒரு ஊரின் வரைபடம் வேண்டுமானால் ஒரு எழுத்தாளனிடம் கேட்கவேண்டும் என்ற பவா ஐயாவின் கூற்று இக்கதையை வாசிக்கும் போது உணரமுடிகிறது.கும்பகோணம் வீதி, கல்லூரி, கோவில், குளம், புழுதி கிளம்பும் சாலை, பருவ நிலை என அங்குலம் அங்குலமாக நம் கரம்பிடித்து அழைத்து செல்கிறார், மேலும் மதராஸ் நகர வாழ்க்கை, சுட்டெரிக்கும் வெயில், கடற்கரை, மாம்பலம் வீதி, திருவல்லிக்கேணி வீதி, தூங்கு மூஞ்சி மரம் நிறைந்த சாலை என்று படம் போடாமலே எழுத்துவழி வெளிச்சம் போட்டு காட்டுகிறார். 
           ஆச்சாரமான சங்கீத குடும்பத்தில் பிறக்கும் பாபு, கும்பகோணம்  கல்லூரியில் இளங்கலை பயின்று வர, அவரின் குடும்ப நண்பரான சுந்தரத்தின் இரண்டாவது மனைவி பார்வதி பாயும், அவரின் மகள் யமுனாவும் கும்பகோணத்தில் வாழ்கின்றனர், பாபுவின் நெருங்கிய நண்பன் ராஜம். ராஜம் மற்றும் தந்தை வைத்தியின் ஆசைப்படி ரங்கண்ணா என்ற வித்வானிடம் சங்கீதம் பயில்கிறான். பாபு யமுனாவை ஒரு பேரழகியாக பார்க்கிறான், அவளை ஒரு தெய்வ நிலையில் வைத்தே அவன் ஆராதிக்கிறான். எனினும் அவளை தன் துணையாக்கிக்கொள்ள வேண்டும் என்றும், இத்தனை தெய்வீக அழகை ஆளும் திறன் தனக்கே உள்ளது என்று பெரிதும் நம்புகிறான், ஆனால் யமுனா பாபுவை விட 10 வயது பெரியவள். இதனை ஒரு கட்டத்தில் அவளிடம் சொல்லிவிட, அவள் மறுக்கிறாள், பின் அனைவரின் வாழ்க்கையும் தடம் புரள்கிறது. பத்து வருடம் கழித்து மெட்ராஸில் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் பணி புரிந்து இருக்கும் பாபு ஒரு நாள் யமுனாவை மிகவும் மோசமான நிலை மையில் காண்கிறான். அவள் கிட்டத்தட்ட 50 வயது தொட்டவள் போல தோன்றுகிறாள். பாபுவிடம் உதவி தேடிவந்த யமுனாவுக்கு ஒரு வேலையும், இருப்பிடமும் செய்துதரும் பாபு, மீண்டும் அவளின் தெய்வீக அழகை ரசிக்க ஆரம்பிக்கிறான். பெரும் மனப்போராட்டங்கள் இந்த இரு மனங்களுக்கிடையே நடந்துகொண்டிருக்கின்றன, இதற்கிடையில் பாபுவை சங்கீதமும் ஒரு பக்கம் இழுக்கிறது. இறுதியில் பாபு யமுனா உறவு என்னவாயிற்று?  தான் பெரிதும் மதித்த பெற்றோருக்கு என்ன பதில் கூறினான்? தன் குருவான ரங்கண்ணாவின் வாக்கை காப்பாற்றினானா?  தன் மனசாட்சிக்கு என்ன பதில் சொன்னான்? தன் உயிர் நண்பன் ராஜமின் சொல்லுக்கு மதிப்பு என்ன?  என்ற எண்ணற்ற கேள்விகளின் விடை மதராஸ் ரயில் நிலையத்தில் புனே நோக்கி செல்ல காத்துக்கொண்டிருக்கும் ரயில் பெட்டியில் அமர்ந்திருக்கும் பாபுவிடம் மட்டுமே உள்ளது. 
 
கவர்ந்த வரிகள் : 
1.மல்லிகையின் மணமும் மயிரின் துர்கந்தமும் கலந்து எரிந்தது 
2.யெளவனத்திலிருந்து பழைய இடத்திற்கே இறங்கி வந்துவிட முடியாது. 
3.மறைப்பது நந்தி இல்லை கடவுள் 
4.தலையில் வைத்து உடல் சூடு பட்டு வாடிய வாடல் இல்லை. பூஜை அறையிலிருந்து உதிர்ந்த நிர்மால்யம் மறுநாள் காலை பூஜை அலமாரியை திறக்கும்போது உதிரும் வாடல், விளக்குமாற்றாலோ, காலாலோ தொட்டுவிட முடியாது. 

ஏன் படிக்க வேண்டும்? 
     ஒவ்வொரு கதையும் ஒருவனுக்கு வெவ்வேறு கோணத்தை கொடுக்கும். படைப்பாளியை விட வாசகன் ஒரு படி மேலே சென்று கதாபாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து சில நாட்கள் அவர்களோடு அவர்கள் வாழ்க்கையை வாழ்கின்றான். அப்படி நாம் இக்கதையில் யாருடைய கதாபாத்திரம் வழியே இக்கதையை பார்க்கிறோம் என்பதில்தான் புரிதல் உள்ளது. பாபுவின் பார்வை வழியா அல்ல யமுனாவின் பார்வை வழியா. பாபுவின் பார்வை வழி சென்றால் ஒரு வாலிபன் தன் பதின்பருவ நாட்களில் எவ்வாறு வாழ்க்கையை நகர்த்த வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, ஒரு பெண்ணை எப்படி மதிக்க வேண்டும், நட்பு எவ்வழி நகர்த்த வேண்டும், குருவை எப்படி போற்ற வேண்டும், வாழ்வின் வளைவுகளுக்கு ஏற்ப எப்படி நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும், ஒரு கலையில் ஈடுபாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ள முடியும். 
       யமுனாவின் பார்வை வழி இந்த உலகத்தை பார்ப்பது மிக கடினம். பார்க்க முயற்ச்சித்தாலும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் புத்தகத்தின் பக்கங்களை மட்டும் படித்து புரிந்து கொள்ள பெண்களின் வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல. என்ன இருந்தாலும், எவ்வளவு படித்தாலும் பிறப்பால் நான் ஒரு ஆண் தானே, ஆகையால் என்னால் யமுனாவின் வாழ்க்கையை நினைத்து வருந்த முடியுமே ஒழிய, அவள் வாழ்க்கையை ஒரு நாளும் புரிந்துகொள்ள முடியாத ஒரு பாவியாக வெட்கி தலைகுனிந்து என் விமர்சனத்தை முடிக்கிறேன். முடிந்தால் யமுனாவை புரிந்துகொள்ள முயன்று பாருங்கள் இக்கதையில் மட்டுமல்ல நம் வாழ்க்கையிலும். 

- இர.மௌலிதரன்.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.