நான், பெரியவாளிடம் எதுவும் கேட்கவில்லையே? என் மனசுக்குள்ளேதானே நினைத்துக் கொண்டிருந்தேன்! அது எப்படி பெரியவா காதில் விழுந்திருக்கும்? தெள்ளத் தெளிவாக பதில் சொல்லிட்டாளே!.
மலைக்கோட்டைத் தெருவில் அவருக்கு, வீடு கிடைத்தது. 'வீடும்' கிடைக்கும் (பெரியவா உத்தரவு!)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
பதினெட்டு வயதில் காலடி எடுத்து வைத்தவருக்கு, இப்போது ஐம்பத்தெட்டு வயது. எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழும்,சுருக்கெழுத்து - தட்டச்சு சான்றிதழ்களும் அவரை ஒரு தனியார் அலுவலத்தில் வெகு எளிதாக நுழைத்து விட்டன.
காலம் செல்லச் செல்ல, பதவி,பணம் - செல்வாக்கு எல்லாம் பெருகின. இத்தனை நாள்களும், 'நான் யார்' என்று சிந்திக்கவே நேரம் கிடைக்கவில்லை. நாளையிலிருந்து அலுவலகத்திற்குள் நுழைய முடியாது. நேற்றைக்கே பிரிவுபசாரம் நடத்தப்பட்டுவிட்டது.
இனி எங்கே போய் வாழ்நாளைக் கழிப்பது? என்று பூதாகரமான பிரச்னை. கையில் - இல்லை,பையில்நிறைய பணம் இருக்கிறது. பந்துக்கள் இல்லையே?
பையன் - இதோ, கொல்கத்தாவில் இருக்கிறான். வங்கி மண்டல அதிகாரி. அவன், நல்லவனாகத்தான் - பாசமுள்ளவனாகத்தான் - வளர்ந்தான்.
பானை பிடித்தவளும் நல்லவளாகத்தான் இருந்திருப்பாள். புகுந்த வீட்டைப் பற்றிய அக்கறையே இல்லை. எப்போதும் பிறந்த வீட்டுப் பெருமை தான்.அங்கே போய்த் தங்கினால் இப்போதிருக்கும் பேச்சு-வார்த்தை உறவும் அற்றுப் போய்விடும்.
யார் வழி காட்டுவார்கள்?
'சங்கரனே துணை' என்று 'ஸத்ய வ்ரத நாமாங்கித' காஞ்சி க்ஷேத்திரத்துக்கு வந்தார், திருவாளர் முன்னாள் மேலாளர். நாலு நமஸ்காரம், கை கட்டி, வாய் புதைத்து...
"அநேகமா எல்லா க்ஷேத்திரமும் தரிசனம் பண்ணிட்டோம். போன வாரம் தலைக்காவேரி போய்விட்டு, அப்படியே காவிரிப் பூம்பட்டினமும் போய்விட்டு வந்தோம்.."--பெரியவாளிடம் பக்தர்.
பெரியவாள் சொன்னார்கள்.
"காவேரி உற்பத்தி ஸ்தானத்திலேயும், சங்கமத் துறையிலும் ரொம்ப குறுகலாகத்தானே இருக்கு?"
"ஆமாம்..."
"காவேரி, ரொம்ம்ம்ப அகலமா இருக்கிற மத்ய ஸ்தானத்துக்கு என்ன பேரு?- பெரியவா.
"அகண்ட காவேரி"---பக்தர்.
"அது எங்கே இருக்கு?"---பெரியவா
"திருச்சி பக்கத்திலே.."
"அந்தப் பிரதேசத்துக்கு என்ன பேரு?"--பெரியவா
ஓய்வு பெற்ற மேலாளர் விழித்தார்.
கிங்கரர்களை அதட்டிப் பழக்கம். சங்கரர்களிடம் அகப்பட்டுக் கொண்டு விழித்துப் பழக்கமில்லை.
"மழநாடு-ன்னு கேள்விப்பட்டிருக்கியோ?"---பெரியவா.
"எங்க தாத்தா சொல்லுவார்..."
"காவேரி தீரம்தான் மழநாடு. ரொம்ப ஆசாரக்காரர்கள் இருந்த நாடு..உன் பாட்டனார் இருந்த இடம்."பெரியவா
'ஓல்டுமேன்' நெளிந்தார்.
"திருச்சியிலே ஜாகை வெச்சுக்கோ. தினமும் ஒரு கோயிலுக்கு - உச்சிப் பிள்ளையார் - மாத்ருபூதேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, ஜம்புலிங்கம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், வயலூர் முருகன், குணசீலம் ஸ்ரீநிவாஸன் - இப்படி தரிசனம் பண்ணிண்டு இரு.."---பெரியவா.
வந்தவர், நாலு முறை நமஸ்காரம் செய்து விட்டுப் பிரசாதம் பெற்றுக் கொண்டார்.
அவர், உத்தியோக காலத்தில், எத்தனையோ புதிர்களை விடுவித்திருக்கிறார். ஆனால், இப்போது ஒரு புதிருக்கு விடை காண முடியாமல் தவிக்கிறார்.
'நான் பெரியவாளிடம் எதுவும் கேட்கவில்லையே?
என் மனசுக்குள்ளேதானே நினைத்துக் கொண்டிருந்தேன்.
அது எப்படி பெரியவா காதில் விழுந்திருக்கும்?
தெள்ளத் தெளிவா பதில் சொல்லிட்டாளே!
இந்தப் புதிருக்கு விடை தெரிந்திருந்தால், அவர் தாயுமானவர் ஆகியிருப்பார்
அவ்வளவு அவநம்பிக்கை வேண்டாமே!
இனிமேலும் - நாளைக்கே கூட - ஞானத்தைப் பெறலாமே?
மலைக்கோட்டைத் தெருவில், அவருக்கு வீடு கிடைத்தது. 'வீடும்' கிடைக்கும்.
பெரியவா உத்தரவு..