இந்நாவலை தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றம் வரை சென்றிருக்கிறது என்று கேள்விப்பட்டுள்ளேன். அதனாலே இந்நாவல் படிக்க வேண்டும் என்று எனக்கொரு ஆர்வம் இருந்தது, அதுமட்டுமல்லாமல் 'குழந்தை இல்லாத' ஒரு தம்பதியர் பற்றிய நூல் என்றும் அறிந்ததுண்டு. எதிர்பாராத விதமாக இந்த புத்தகம் ஒரு பழைய புத்தகக் கடையில் எனக்கு கிடைத்தது. இத்தனை நாட்கள் கழித்து படித்து முடித்தவுடன் ஒரு படம் பார்த்த ஒரு ஃபீல் இருக்கு.
இன்றும் வரதட்சணை கொடுமையெனும் பெயரால் அரங்கேறும் தற்கொலைகள் பலவற்றை அன்றாடம் வாழ்வில் பார்க்கிறோம். இப்படி இறக்கும் பெண்களில் பெரும்பாலானோர் மணமுடித்து ஒரு சில மாதமே ஆனவர்களாகத் தான் இருப்பார்கள். உன்னால் ஒரு வருடத்திற்குள் ஒரு குழந்தையை பெற்றுக் கொடுக்க முடியவில்லையா? அப்போ அந்த பெண்ணிற்கு மலடி என்ற ஒரு பட்டம் கட்டிவிடுகின்றனர்.
இந்த சமூதாயத்தில் அந்தப் பெண்ணை ஓரம் தள்ளி ஒதுக்கிவைக்கின்றனர். எப்படியென்றால், ஒரு கல்யாண வீடு, வளைகாப்பு, இன்னும் பல மங்களகரமான விழாக்களில் அவளை புண்படுத்தி ஒதுக்கி வைக்கின்றனர். இதெல்லாம் நாம் நிறைய பார்த்திருப்போம்.
மாதொருபாகன் வரும் தலைமுறையினருக்கு கொண்டு சென்று படிக்கலாம். அவ்வளவு அற்புதமான ஒரு நூல்.
மாதொருபாகனின் ஒவ்வொரு அத்தியாயமும் குழந்தைப்பேறு கிடைக்கா பெண் ஒருத்தி சமூகத்தால் படும் அவலங்களையும்,அவமானங்களையும் அப்பட்டமாய் அடிக்கோடிட்டு வெளிப்படையாக காட்டியுள்ளார் ஆசிரியர்.
கரட்டூர் என்ற ஊரில் வசிக்கும் காளி மற்றும் பொன்னா அவர்களின் வாழ்க்கையில் தாம்பத்தியம் தாண்டி மனதிற்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்தாலும், நாம் இருவர் தான் உலகம் என்று இல்லை, நம்மை மட்டுமே நோக்கும் மற்றொரு உலகமும் உள்ளது என்று அவர்களுக்கு புரிய வைக்கிறது.
கதை 34 பிரிவுகளாக உள்ளது.
நாவலை படிக்க ஆரம்பிக்க ஆரம்பிக்க ஆர்வமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும்.
'காளி' கதாபாத்திரம் கதையின்நாயகன் அவன் தனக்கென தொண்டுப்பட்டி என்னும் ஒரு உலகத்தை உருவாக்கி அதில் வாழ்கிறான்.
கதையின் நாயகி 'பொன்னா' படிக்கும் போதே கண்ணீர் வருகிறது குழந்தை இல்லாத காரணத்தால் அவள் அடையும் அவமானம்,ஏளனங்கள் நமக்கு கண்ணீரை வரவழைக்கிறது.
தாயின் பேச்சுக்கு மரியாதை தரும் மகன் ,மகனுக்காக வாழும் தாய் மெய்சிலிர்க்க வைக்கிறது.
இரண்டாம் திருமணம் என்றதும் காளியின் மனம் யோசிக்கும் கருத்துக்கள் அனைத்தும் உளவியல் ரீதியான அணுகுமுறை. ஒரு கட்டத்தில் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம் என்றால் அங்கு சாதி ஒரு தடையாக இருக்கிறது என்கிறார். "பண்ணையக்காரரு வீட்டுல நம்ம ஊட்டு புள்ள எப்புடி வளரும்?" என்ற மரமேறி பொண்டாட்டியின் வார்த்தை எதார்த்தமான ஒன்றாக அமைந்து விடுகிறது. சொத்துக்கு, கொள்ளி போட கூட யாரு யாரு காலுல போய் விழ போறோம் என்று காளியின் மனக் குமுறலை நம்மால் உணர முடியும். தன்னை ஆண்மை இல்லாதவன், வறடன், பொண்டாட்டியை ஒழுங்கா பாத்துக்க தெரியாதவன் என்றெல்லாம் ஊர்க்காரர்களின் கேலியும் கிண்டலும் அவனை குடியானவன் என்ற அந்தஸ்தை இழக்க வைத்து கொடுமை படுத்துகிறது.
கணவனை சுவாசமாக சுவாசிக்கும் பொன்னா பெண்மையின் மணிமகுடம்
திருமணத்திற்கு பிறகு மனைவியைத் தவிர வேறுபெண்களை திருமணம் செய்ய மறுக்கும் காளிஆண்மையின் அடையாளம்.
குழந்தை இல்லா ஆண்களை விடவும் பெண்கள் மன ரீதியாக, உடல் ரீதியாக பல்வேறு விதமான நம்பிக்கையின் பெயரில் துன்புறுத்த படுகிறார்கள். "அந்த கோவிலுக்கு போ, இந்த கோவிலுக்கு ஆடு வெட்டி கோழி அடிச்சு பொங்க வைக்கிறேன்னு வேண்டிக்கோ, அன்னதானம் போட்டா அங்க போய் மடிப்பிச்சை வாங்கு, இந்த கோவிலுக்கு போ, எலுமிச்சம் பழம் சாமிக்கிட்ட கொடுத்து வாங்கிக்க" என்று சொல்லுவதை எல்லாம் கேட்கும் பொம்மை போல நடத்தப் படுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் அனைத்து முயற்சிகளையும் கையாண்டும் குழந்தை பாக்கியம் கிடைக்காததால், அந்த ஊர் திருவிழாவின் 14ஆம் நாள் காளிக்கு தெரியாமல் பொன்னாவின் தாயும் தந்தையும் அவளை அங்கு அழைத்துச் செல்கின்றனர். அன்றைய நாளில் அங்கே வரும் அனைத்து ஆண்களும் சாமிகளே என்றும், அவர்களில் முகம் தெரியாத ஒருவருடன் கூடி பெறும் குழந்தை சாமியின் குழந்தை என்றும் கூறி பொன்னாவை கூட்டத்திற்குள் அனுப்பி வைக்கின்றனர். தன் மனைவியை உயிராய் நேசிக்கும் காளி இதை அறிந்து மனமுடைந்து போய் கடைசியில் பொன்னாவை வெறுக்கிறான்.
பொன்னா திரும்ப காளியிடம் வந்து சேர்ந்தாளா? குழந்தை பெற்றுக் கொண்டாளா? என்பதே கதையின் கரு.
உண்மையிலேயே குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் படும் வேதனைகளை இக்கதையின் மூலம் தெரிந்துகொள்ளலாம்..
அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
---------------------------------------------------
Reading Marathon 2021
33/50
ID : RM 00211
நூல் : மாதொருபாகன்
ஆசிரியர்: பெருமாள்முருகன்
பக்கங்கள்: 192
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
-------------------------------------------------------
~சரண்யா