Breaking News :

Tuesday, December 03
.

என்ன ஒன்னைப் பார்த்துக்க யாரும் இல்லையேன்னு இருக்கியா? - காஞ்சி மகா பெரியவா


நான் இருக்கேன் நீ பயப்படாதே, எழுந்திருந்து உட்காரு!"

 

சூட்சும ரூபத்தில அற்புதம் நிகழ்த்திய மகா பெரியவா.


 

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நன்றி-11-01-2018 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)


 

மகாபெரியவா மேல பரமபக்தியுள்ள சாஸ்திரிகள் குடும்பம் ஒண்ணு சென்னையில இருந்தது. அந்தக் குடும்பத்துல ஒருத்தரான அவர் தம்பிக்கு திடீர்னு உடம்பு சரியில்லாமப் போயிடுத்து அவசர அவசரமா ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் சேர்த்தா. ரெண்டு மூணுநாள் என்னென்னவோ பரிசோதனையெல்லாம் பண்ணிட்டு,இனி இவர் எழுந்து உட்கார்றதே சந்தேகம். அநேகமா ஒரு வாரமோ பத்துநாளோதான் இருப்பார். அப்படின்னு சொல்லிட்டா டாக்டர்கள்.


 

இடியே விழுந்தமாதிரி இருந்தது அந்தக் குடும்பத்துக்கு. அதுலயும் அந்த நோயாளியோட அண்ணா ரொம்பவே தவிச்சுட்டார். ஏதாவது ஒரு அதிசயம் நடக்காதா, தன்னோட தம்பி பொழைச்சு எழுந்துட மாட்டானான்னு அவருக்குள்ளே ஒரு மனப்போராட்டமே நடந்தது. “என்ன செலவானாலும் பரவாயில்லை என் தம்பியைக் காப்பாத்துங்கோ!”ன்னு டாக்டர்கள் கிட்டேயெல்லாம் கெஞ்சினார். எந்தெந்த தெய்வமெல்லாம் நினைவுக்கு வந்துதோ, அந்தந்த தெய்வத்துக்கிட்டேயெல்லாம் மனசுக்குள்ளே வேண்டினார்.REPORT THIS ADஅந்த சமயத்துல தற்செயலா யாரோ ஒருத்தர்,மகாபெரியவா யாத்திரை முடிஞ்சு வந்து இப்போ காஞ்சிபுரத்துலதான் இருக்காளாம்!” அப்படின்னு சொன்னது அவரோட காதுல விழுந்திருக்கு. உடனே அவரோட மனசுக்குள்ளே ஒரு பொறிதட்டியிருக்கு.


 

‘ஆபத்பாந்தவனையே பக்கத்துல வைச்சுண்டு இப்படிக் கலங்கிண்டு இருக்கோமே! நேரா அந்த நடமாடும் தெய்வத்துக் கிட்டேயே தம்பியைக் கூட்டிண்டு போவோம். அவர் என்ன சொன்னாலும் சரி!’ அப்படின்னு நினைச்சவர் உடனடியா புறப்படத் தயாரானார்.ஆனா, டாக்டர்களும் குடும்பத்துல மத்தவாளும் பாதிக்கப்பட்டவரோட உடல் நிலை அதுக்கு ஏத்த மாதிரி இல்லைன்னு சொல்லித் தடுத்துட்டா.


 

“சரி, தம்பியைத்தானே கூட்டிண்டு போகக் கூடாது? நான் மட்டும் போய் பெரியவாளைப் பார்க்கிறேன்!” -அண்ணா.அவர் புறப்பட்டுட்டாரே தவிர, அவ்வளவு சீக்கிரமா அவரால காஞ்சிபுரத்துக்குப் பயணப்பட முடியலை. ஏன்னா, இப்போ மாதிரி அப்போ வாடகைக் கார் மாதிரியான வசதியெல்லாம் சட்டுனு கிடைச்சுடாது. போக்குவரத்துக்கான பஸ் வசதியும் குறிப்பிட்ட நேரத்துல மட்டும்தான் உண்டு. அதனால ரொம்ப நேரம்காத்துண்டு இருந்தவர்,கிட்டத்தட்ட சாயந்திரம்நெருங்கற சமயத்துல தன்னோட நண்பர்கள்கிட்டே உதவி கேட்டார்.அவா எப்படியோ ஒரு காரை ஏற்பாடு செஞ்சு அனுப்பிவைச்சா. அதுல ஏறி காஞ்சிபுரத்துக்குப் புறப்படறச்சே கிட்டத்தட்ட ஆறேழு மணி ஆயிடுத்து.


 

பரபரன்னு புறப்பட்டார் சாஸ்திரிகள். கார் வேகமா காஞ்சிபுரத்தை நோக்கி போக ஆரம்பிச்சுது.அதே சமயம் அங்கே ஸ்ரீமடத்துல ஒரு அற்புதம் நடந்தது. ஆசார்யாளோட தரிசன நேரம் முடியறதுக்கு அன்னிக்கி கிட்டத்தட்ட ஒன்பதரை மணி ஆயிடுத்து. அதுக்கப்புறம் மடத்துல தங்கறவாளைத் தவிர மத்தவா எல்லாரும் புறப்பட்டுட்டா. வழக்கம்போல மடத்தோட வாசக்கதவைச் சாத்திட்டு பூட்டுப் போடப் போனார், வாசல் காவல்காரர்.


 

அந்த சமயத்துல “கதவை சாத்த வேண்டாம். பரமாசார்யா ஒன்னைக் கூப்பிடறார்!” தொண்டர் ஒருத்தர் வாட்ச்மேன் கிட்ட சொல்ல, அவர் வேகமா உள்ளே போய்,ஆசார்யா முன்னால பவ்யமா நின்னார்.


 

“இன்னும் கொஞ்ச நேரத்துக்கு கதவைச் சாத்த வேண்டாம். மெட்ராஸ்லேர்ந்து ஒருத்தர் இங்கே வந்துண்டு இருக்கார். அவர் வந்ததும் சாத்திக்கலாம்” சொன்னார் மகாபெரியவா.


 

சரின்னுட்டு வாசலுக்குப் போனார் காவற்காரர். சுமார் அரைமணி நேரம் ஆகியிருக்கும்.வேகவேகமா மடத்து வாசல்ல வந்து நின்னது சாஸ்திரிகள் வந்த கார்.


 

அதுலேர்ந்து பரபரப்பா கீழே இறங்கினார் சாஸ்திரிகள். வழியில ஏதோ ஊர்வலம் போனதால வர்றதுக்கு இவ்வளவு நேரம் ஆகிடுத்து.பரமாசார்யாளை பார்க்கப் போறப்போ வழியிலயே இப்படித் தடை வருதே. ஸ்ரீமடத்தை சாத்திடுவாளே மகாபெரியவாளை தரிசிக்க முடியாதோன்னு மனசுக்குள்ளே நினைச்சு பதட்டத்தோட வந்திருந்தார் அவர்.


 

“வாங்கய்யா..மெட்ராஸ்லேர்ந்து வரீங்களா?” வாட்ச்மேன் அவரிடம் கேட்க, “ஆமா ஏன் கேட்கறே” அப்படின்னார்.


 

“இல்லை நீங்க வருவீங்கன்னும், நீங்க வந்தப்புறம்தான் கதவை சாத்தணுனும் சுவாமி சொன்னார்!

 

 

வாட்ச்மேன் சொல்ல அப்படியே அதிர்ந்து போனார்

.

 

“என்ன நான் வருவேன்னு ஆசார்யா சொன்னாரா? நான் இங்கே வர்றதை முன்கூட்டியே தகவல் எதுவும் சொல்லலையே.அப்புறம் எப்படித் தெரிஞ்சுது? ஆச்சரியமாக் கேட்டு,காவலர் சொல்ல சிலிர்த்துப் போனார். சாஸ்திரிகள்.


 

“வாங்கோ வாங்கோ..நீங்க வந்ததும் ஒடனே கூட்டிண்டு வரச்சொல்லி உத்தரவிட்டிருக்கா பெரியவா!” உள்ளே நுழைஞ்ச அவர்கிட்டே அணுக்கத் தொண்டர் ஒருவர்.


 

பரவசத்தோட உச்சத்துக்கே போன அந்த சாஸ்திரிகள் அவசர அவசரமா கையைக்காலை அலம்பிட்டு நெத்திக்கு இட்டுண்டு பெரியவா முன்னால போய் நின்றார்.


 

இருந்த பதட்டத்துல கொஞ்சம் புஷ்பத்தைத் தவிர எதுவும் வாங்கிண்டு வராததால அதை மட்டும் பெரியவா முன்னால வைச்சுட்டு நமஸ்காரம் பண்ணினார் சாஸ்திரிகள்.


 

“என்ன எல்லாரும் சாப்டுட்டேளா? இல்லை பதட்டுத்துலஉபவாசமாவே இருக்கேளா? அரிசி உப்மா எதுவும் பண்ணித் தரச் சொல்லட்டுமா?” அன்பா கேட்டார் ஆசார்யா.


 

இருந்த மனநிலையில சாஸ்திரிகளுக்குப் பசிக்கவே இல்லை. தம்பியோட உடம்பு குணமானாப் போதும். அது மட்டும்தான் அவரோட மனசுல இருந்தது. அதனால “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் பெரியவா. என்னோட தம்பி ஒடம்புக்கு..!” சாஸ்திரிகள் வார்த்தையை முடிக்க முடியாம தழுதழுத்தார்.


 

“ஏன் பயப்படறே? அவனுக்கு ஒண்ணும் ஆகாது. ஆமா,அவனை மட்டும் தனியா விட்டுட்டு வந்திருக்கியே யார் பார்த்துப்பா?” கேட்டார் மகாபெரியவா. ஒண்ணும் சொல்லத் தெரியாம கையைப் பிசைஞ்சுண்டு நின்னார் சாஸ்திரிகள்.


 

“இப்பவே ராத்திரி ரொம்ப நேரமாயிடுத்து. அதனால இங்கேயே தங்கிக்கோ.கார்த்தால பலபலன்னு விடியறச்சே பொறப்படு. இதோ இந்தப் பிரசாதமெல்லாம் காமாட்சி கோயில்லேர்ந்து வந்தது. எல்லாத்தையும் எடுத்துண்டுபோய் ஒன் தம்பிட்ட குடு!” பெரியவா கைநீட்டிய பக்கத்துல அஞ்சாறு மூங்கில் தட்டுகள் நிறைய பழங்களும் புஷ்பங்களும் இருந்தது. எல்லாத்தையும் எடுத்துண்ட சாஸ்திரிகள், ‘தம்பி தனியா இருப்பான்.அதனால இப்பவே!” அப்படின்னு இழுத்தார்!.


 

“நான்தான் சொன்னேனே.கார்த்தால பொறப்பட்டா போதும். அவனுக்கு ஒண்ணும் ஆகாதுன்னு.அப்புறம் ஏன் அவசரப்படறே?’ அதை மீறமுடியாத சாஸ்திரிகள் விடியற்காலை விறுவிறுன்னு எழுந்திருந்து அங்கேர்ந்து கிளம்பிட்டார்,


 

வழி நெடுக பகவானை வேண்டிண்டே வந்தவர்.தம்பி இருந்த ஆஸ்பத்திரிக்குப் போய் அவன் இருந்த அறைக்கதவைத் திறந்தார். அவ்வளவுதான் அப்படியே அதிர்ச்சியில் உறைஞ்சுபோய் நின்றார்.


 

உள்ளே அவரோட தம்பி இனிமே எழுந்து உட்கார்றதே சந்தேகம்னு மொதநாள் டாக்டர்கள் கையை விரிச்சாளே அதே தம்பி தான் படுத்துண்ட இருந்த கட்டில்ல சம்மணம்கட்டி உட்கார்ந்துகொண்டு இருந்தார். அவரைப் பார்த்தா ஒடம்புக்கு முடியாம படுத்த படுக்கையில இருந்தவர் இவராங்கற சந்தேகம் வரக்கூடிய அளவுக்கு தெளிவா இருந்தார்.


 

சாஸ்திரிகளால தன்னோட கண்ணையே நம்ப முடியலை. அப்படியே டமால்னு நுழைஞ்சவர் தம்பியை பேர் சொல்லிக் கூப்பிட்டார். “ஏண்டா உனக்கு எப்படி குணமாச்சு.டாக்டர் என்ன மாத்திரை மருந்து கொடுத்தார். ஜம்முன்னு இப்படி எழுந்து உட்கார்ந்துட்டியே. இது எப்படிடா நடந்தது?” படபடப்பா கேள்விகளை அடுக்கிண்டே போனார்.


 

அமைதியா அவரைப் பார்த்த தம்பி பேச ஆரம்பிச்சார்; “அண்ணா நேத்து ராத்திரி நினைவே இல்லாம கிடந்த சமயத்துல எனக்குப் பக்கத்துல பரமாசார்யா வந்து உட்கார்ந்துண்டு, “என்ன ஒன்னைப் பார்த்துக்க யாரும் இல்லையேன்னு நினைச்சுண்டு இருக்கியா? நான் இருக்கேன் நீ பயப்படாதே. எழுந்திருந்து உட்காரு!” அப்படின்னு சொல்றாப்புல இருந்தது. நான் ஏதோ என்னோட மனபிரமைன்னு நினைச்சுண்டு படுத்துண்டே இருந்தேன். திரும்பத் திரும்ப எழுந்திருந்து உட்காருன்னு ஆசார்யா சொல்றாப்புல இருக்கவும் ஏதோ ஒரு கட்டத்துல என்னை அறியாமலே எழுந்திருந்து உட்கார்ந்துட்டேன். கொஞ்சம் முன்னால டாக்டர் வந்து பார்த்தார். “உடம்பு பூரணமா குணமாயிடுத்தே.ஒரே ராத்திரியில எப்படி இந்த அதிசயம் நடந்தது? நீங்க இப்பவே டிஸ்சார்ஜ் ஆகலாம்!” அப்படின்னு சொல்லிவிட்டுப் போனார் டாக்டர். நீங்க யாராவது வரட்டும்னுதான் நான் வெயிட் பண்ணிண்டு இருக்கேன்

.

 

அப்படியே சிலிர்த்துப் போய் கண்ணீர் சிந்திய சாஸ்திரிகள் பெரியவா குடுத்தனுப்பின பிரசாதத்துல இருந்த விபூதி குங்குமத்தை தம்பியோட நெத்தியில் இட்டுவிட்டார். ஒரு ஆரஞ்சு பழம் உரிச்சுக் குடுத்து சாப்பிடச் சொன்னார்.


 

காஞ்சிபுரத்துல ஸ்ரீமடத்துலதான் ஆசார்யா இருந்தார்.நாங்கள் அங்கே இருந்தோம். அதேசமயம் அவரே சூட்சும ரூபத்துல இங்கே வந்து தனியா இருந்த தன்னோட தம்பிக்கு துணையா வந்து இருந்து அவனைப் பூரணமா குணப்படுத்திட்டு போயிருக்கார்னா மகாபெரியவா சாட்சாத் மகேஸ்வரனோட அம்சமாகத்தானே இருக்கணும்! நினைச்ச சாஸ்திரிகள் மகான் இருக்கிற திசை நோக்கி சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.