பஞ்சாங்கப்படி, தனக்கு மரணம் சம்பவிக்கும் என்று விளையாட்டாகச் சொன்ன பெரியவா!
பல்லிக்குத்தான் மோட்சம்,பெரியவா சம்பந்தம் ஏற்பட்டதால் என்று ஒரு தொண்டரும்.காஞ்சிபுரத்தில் பல்லி தோஷமே கிடையாது, என்று இன்னொரு தொண்டரும் சொல்ல; யுக்தி பூர்வமான இந்த தொண்டர்களின் வார்த்தைகளைக் கேட்ட பெரியவாளின் புன்முறுவலும்)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்- காஞ்சி மகான் தரிசனம்.
பெரியவாளிடம் தமாஷுகள் ஏராளம் என்பது, அணுக்கத் தொண்டர்களுக்குத் தெரியும். தான் தமாஷ் செய்வதுடன், பிறர் (தொண்டர்) செய்தாலும், மனப்பூர்வமாக ரசித்துச் சிரிப்பார்கள்.
பெரியவாள் நீராடுவதற்காக ஒரு பலகையின் மேல் உட்கார்ந்திருந்தார்கள். மேற்கூரையிலிருந்து ஒரு பல்லி, அவர்கள் தலைமேல் விழுந்து விட்டது. பெரியவா, சட்டென்று காஷாயத் துணியினால் தலையை மூடிக் கொண்டார்கள்.
உடனே, "ஓரு ஸ்வாமிகள் சீக்கிரம் ஸித்தி அடையப் போகிறார். அப்புறம் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கோ" என்றார்கள்.
தொண்டர்கள் திகைத்து நின்றார்கள். எந்த ஸ்வாமிகள் ஸித்தி அடையப் போகிறார்? (அப்போதெல்லாம் ஸ்ரீ மடத்தில் நாலைந்து சந்நியாசிகள் இருப்பார்கள்) அதை ஏன் மகாபெரியவாள் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். ஒரு துறவி உடலை உகுத்து விட்டால், என்னென்ன செய்ய வேண்டும் என்பது தொண்டர்களுக்குத் தெரிந்தது தானே?..
உடனே, மெதுவாக சிரித்துக் கொண்டு, தன் தலை மேல் போட்டிருந்த துணியை வெகு லாகவமாக எடுத்தார்கள் பெரியவா. தலையில் பல்லி! பயத்தாலோ என்னவோ... அசைவற்றுக் கிடந்தது. பெரியவாள் தலையைக் குனிந்து மெல்ல ஆட்டியவுடன், அது கீழே விழுந்து ஓட்டமாக ஓடி விட்டது.
ஒரு பஞ்சாங்கத்தில், 'பல்லி விழும் பலன்' என்ற தலைப்பில், 'தலையில் விழுந்தால் மரணம்' என்று போட்டிருக்கிறது. இன்னொரு பஞ்சாங்கத்தில், 'கலகம்' என்று போட்டிருக்கிறது. பெரியவாள்,முதல் பஞ்சாங்கப்படி, தனக்கு மரணம் சம்பவிக்கும், என்று விளையாட்டாகச் சொன்னார்கள்
ஒரு தொண்டர் சொன்னார்; " மரணம் (பல்லி தலையில் விழுந்தால் மரணம்) என்று எழுதி இருக்கிறதே தவிர, இன்னாருக்கு மரணம் என்று தீர்மானமாகக் குறிப்படவில்லை. அதனால் பல்லிக்குத்தான் மரணம்! இந்தப் பல்லிக்குப் பெரியவா சம்பந்தம் ஏற்பட்டதால், மோட்சம்தான் கிடைக்கும்!" என்றார். யுக்தி பூர்வமான இந்த வார்த்தையைக் கேட்டதும், பெரியவாள் சிரித்து விட்டார்கள்.
இன்னொரு தொண்டர் சொன்னார்; " காஞ்சிபுரத்தில் பல்லி தோஷமே கிடையாது என்று ஒரு பேச்சு உண்டு. வரதராஜ ஸ்வாமி கோயிலில், பல்லியைத் தரிசனம் செய்ய, பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி க்யூவில் நின்று தவம் கிடக்கிறார்கள். அதனால், மரணம் - கலகம் என்பதெல்லாம் இவ்விடத்தில் பொருந்தாது."
இந்த தத்துவம் உண்மையோ,பொய்யோ?
ஆனால், ரொம்ப சுவாரசியமாக இருந்ததால், எல்லாரும் சிரித்தார்கள்.