Breaking News :

Tuesday, July 08
.

பெரியவா, காளியா? காமாட்சியா?


தொலைந்த பெண் குழந்தை திரும்பக் கிடைத்த அதிசயம்

"அங்கே காளி கோயில் மூலஸ்தானத்தில் பெரியவா தான் கண்ணில் பட்டார்கள்.- இங்கே காளி தான் என் கண்களுக்குப் படுகிறாள்"- பெரியவாளைப் பார்த்து குழந்தையின் தாயார்.

பத்து வயதுப் பெண் குழந்தையுடன் ஸ்ரீமடம் அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கினாள் ஓர் அம்மாள். பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு சாலையைக் கடந்து எதிர்புறம் வந்தாள். 'கூட்டம் இல்லாமல் இருக்கணுமே? பெரியவா தரிசனம் நிம்மதியாகக் கிடைக்கணுமே?' என்ற கவலை அரித்தது.

மடத்தின் வாசலுக்கு வந்ததும் ஏதோ பொறி தட்டியது. கையைப் பிடித்திருந்த பெண்ணைக் காணவில்லை. திக்கென்றது. தேடிப் பார்த்தாள் காணவில்லை.உள்ளே சென்று பெரியவாளிடம் முறையிட்டாள்.

பெரியவா சிறிது நேரம் கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்வதுபோல் மௌனமாக இருந்தார்கள்.

பெரியவா சொன்னார்கள்;

"காளிகாம்பாள் கோயிலுக்குப் போ.. ஒரு சீட்டில், 'பெண் குழந்தையைக் காணோம். கண்டுபிடித்துச் சேர்ப்பிக்கவும்' என்று எழுதி, ஒரு ரூபாய் காணிக்கையுடன் கோவில் உண்டியலில் போட்டு விட்டு வா!"
என்றார்கள்.

அம்மாள் பதற்றத்துடன் காளிகாம்பாள் கோயிலுக்குப் போனாள்.காளி,காளி என்று மனத்திற்குள் ஜபம்.

ஆச்சரியம்! கோயில் வாசலிலேயே அந்தப் பெண் குழந்தை, தேம்பித் தேம்பி அழுத வண்ணம் நின்று கொண்டிருந்தது. சிலர் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

விவரம் கூறி, குழந்தையை அழைத்துக் கொண்டு பெரியவாளிடம் வந்தாள் அம்மையார். நெஞ்சுருக நமஸ்கரித்தாள்.

"சீட்டு எழுதிப் போட்டயோ?"- -பெரியவா.

"போட்டேன். அங்கே மூலஸ்தானத்தில் பெரியவா தான் கண்ணில் பட்டார்கள். இங்கே காளி தான், என் கண்களுக்குப் பட்கிறாள்..."- அம்மையார்.

பெரியவா, காளியா? காமாட்சியா?

சகலம்!

(காஞ்சிபுரம் மடத்து தெருவிலேயே இருக்கிறது காளிகாம்பா கோயில்)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.